Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 ஏப்ரல், 2020

பட்டீஸ்வரர் கோவில்...பேரூர், கோவை....

பேரூர் என்றாலே பட்டீஸ்வரர் கோவில் தான், கோவை மக்களுக்கு நினைவுக்கு வரும். அத்தகைய சிறப்பு பெற்ற பட்டீஸ்வரர் திருக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது.

ஒரு முறை நந்தியம்பெருமான், ‘ஆதிபரம்பொருளாகிய சிவபெருமானே! கயிலாயத்துக்கு ஒப்பான திருத்தலம் எது?’ என்று கேட்டபோது, ‘திருப்பேரூர்’ என்று திருவாய் மலர்ந்தார், சிவபெருமான்.

அத்தகைய திருத்தலத்தை தரிசிக்க நாம் அனைவரும் பேறுபெற்றுள்ளோம்.

கோவை காந்திபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சிறுவாணி செல்லும் ரோட்டில் பேரூர் உள்ளது. முன்பு இந்த ஊர் பெரிய ஊராக திகழ்ந்ததால் ‘பேரூர்’ என்று அழைக்கப்பட்டது. இதற்கு வரலாற்று சான்றுகள் உண்டு.

கோபுர தரிசனம்..

பேரூர் என்றாலே பட்டீஸ்வரர் கோவில் தான், கோவை மக்களுக்கு நினைவுக்கு வரும். அத்தகைய சிறப்பு பெற்ற பட்டீஸ்வரர் திருக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இந்த கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தில், ஏராளமான தெய்வ சிற்பங்கள் காணப்படுகின்றன.

ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்திற்குள் நுழைந்தால், கருவறைக்குப் பதிலாக, அர்த்த மண்டபம் தான் தெரியும். அதற்கு முன்பாக கொடிமரத்தை ஒட்டி காட்சி தரும் நந்தியம்பெருமானை தரிசிக்கலாம். கோவில் பழமையை எடுத்துரைக்கும் விதமாக ஆங்காங்கே கற்களால் ஆன பிரமாண்ட தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன.

மேலே விதானத்தில் பேரூர் புராணம் பற்றி பக்தர்கள் எளிதில் தெரிந்து கொள்வதற்காக அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அப்படியே மேற்கு நோக்கி நடந்தால், ஒரு பிரகார வழி தெற்கு நோக்கியும், மற்றொன்று வடக்கு நோக்கியும் செல்கிறது. தெற்கு நோக்கி சென்ற பிரகாரம் சற்று தொலைவில், மேற்கு நோக்கி பெரிய பிரகாரமாக செல்கிறது. வடக்கு நோக்கி சென்ற பிரகார வழி நடராஜர் சன்னிதியை அடுத்து கோவில் யானை குளியல் போடும் இடம் வரை நீண்டு கோவில் சுவருடன் நிற்கிறது.

இந்த இரண்டு பாதைகளிலும் பிரியாமல் முன்னேறிச் சென்றால் ஒரு பிரகாரம் வடக்கு நோக்கி இருக்கும் அங்கு நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசனம் செய்யலாம். அதே இடத்தில் தெற்கு நோக்கி செல்லும் பிரகாரமானது அன்னதானம் நடை பெறும் இடத்தில் முடிவு பெற்று, மேற்கே முன்பு கன்னிமூலை கணபதி சன்னிதி வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.

நந்தியம்பெருமான் தரிசனம்..

கொடி மரம், பலிபீடத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றால், அங்கு இறைவனால் மண்வெட்டி காயம் பட்ட நந்தியம்பெருமானை தரிசனம் செய்யலாம். அவரை தரிசித்து விட்டு கடந்து சென்றால், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றை சுற்றி வர ஏதுவாக ஒரு பிரகாரம் வழி உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ளே கருவறையில் தீப ஒளியில் 5 தலை நாகம் குடையாக நிற்க, லிங்க ரூபத்தில் பட்டீஸ்வரர் காட்சி தருகிறார். இவரே ஆதி லிங்க மூர்த்தி ஆவார். கன்றின் குளம்படி உள்ள தழும்பு இந்த சிவலிங்கத்தின் தலை மீது இருக்கிறது.

பட்டீஸ்வரர் சன்னிதியின் பிரகாரத்தில் கிழக்கில் இருந்து மேற்காக வரிசையாக நாயன்மார்கள் எழுந்தருளி உள்ளனர். பட்டீஸ்வரரின் சன்னிதியையொட்டி தனி சன்னிதியில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி தருகிறார். அவரை தரிசித்து விட்டு மேற்கு நோக்கி வலம் வந்தால், பட்டீஸ் வரரின் பின்புறத்தில் லிங்கோத்பவரும், தென்வடக்கில் உள்ள பிரகாரத்தை ஒட்டி தவசீலர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங் கங்களும் உள்ளன. வடக்கில் தனி சன்னிதியில் வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான் அருள் பாலிக்கிறார்.

பிரகாரத்தில் உள்ள தல விருட்சமான பன்னீர் மரத்தை தரிசித்து விட்டு கிழக்கு நோக்கி நடந்து வந்தால், பட்டீஸ்வரர் சன்னிதியில் வடக்கில் துர்க்கையம்மனை தரிசித்து விட்டு, தனி சன்னிதியில் தியானத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். அங்கிருந்து கிழக்கு நோக்கிய பிரகாரத்தில் நடந்து வந்தால் தெற்கு நோக்கிய பைரவரை தரிசிக்கலாம். இங்குள்ள பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. இது முக்தி தலம் என்பதால் பைரவர் வாகனம் இன்றி இருக்கிறார். எனவே இவர் ‘ஞான பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

கோவிலின் உள்ளே உள்ள வெளிப்பிரகாரத்தின் கன்னிமூலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். அவரை தரிசித்து விட்டு வடக்கு நோக்கி நடந்தால் தனிச் சன்னிதியில் பாலதண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். இவரை அருணகிரிநாதர் தரிசித்து பாடியுள்ளார். பாலதண்டாயுதபாணி சன்னிதிக்கு வடக்கே காசிவிஸ்வநாதரும், தெற்கே விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி உள்ளனர். அதற்கு பின்னால், கோரக்கர் சித்தர் தவம் செய்த இடம் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இங்குள்ள வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்கிறார்கள்.

வரதராஜப்பெருமாள்..

அங்கிருந்து மேற்கு கிழக்காக செல்லும் பிரகாரத்தில் நடந்து சென்றால் ஆஞ்ச நேயரை தரிசிக்கலாம். பச்சை நாயகி அம்மன் சன்னிதியின் முன் மண்டபத்தில் வடக்குபுறம் தனி சன்னிதியில் வரதராஜப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கராயுதபாணியாக எழுந்தருளி உள்ளார்.

அதே மண்டபத்தில் தெற்கில் தனி சன்னிதியில் துர்க்கையம்மன் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். இங்கு ராகு கால நேரங்களில் பெண்கள் எலுமிச்சைப்பழ தீபம் ஏற்றி வழிபடு கிறார்கள். இந்த சன்னிதியை அடுத்து அன்னை பராசக்தியானவள், பச்சைநாயகி அம்மனாக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். நான்கு திருக்கரங்கள், அபய வரத ஹஸ்தமாக பத்மத்தை இரு கையிலும் ஏந்தி தரிசனம் தருகிறாள்.

இவர்களை தரிசித்து விட்டு வெளியே வந்தால், கற்களால் ஆன கனகசபை உள்ளது. கனகசபையின் முன் கோமுனி, பட்டிமுனி ஆகியோரையும், அதற்கு உள்ளே நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கலாம். இவர்கள் வீற்றிருக்கும் சன்னிதியில் நான்கு தூண்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களாக போற்றப்படுகின்றன.

கனகசபை மண்டபத்தின் இருபுறமும் 8 சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நர்த்தன கணபதி, ஆறுமுக சுப்பிரமணியர், அக்னி வீரபத்திரசுவாமி, ஆலங்காட்டு காளியம்மன், யானையுரி போர்த்தமூர்த்தி, பிச்சாடன மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, அகோர வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங் களைக் காணலாம். மேலே கல்மண்டப சுவரில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

இரும்பு சங்கிலி போல் பின்னிப்பிணைந்து காணப்படும் கற்களில் செதுக்கப்பட்ட சங்கிலி, சிற்பி கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒவ்வொரு தூணிலும் தமிழரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.

இறவாப்பனை.. பிறவாப்புளி..

இந்த திருத்தலத்தை தரிப்போருக்கு பிறப்பும், இறப்பும் நீங்கப்பெறும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக, இந்த ஆலயத்தில் இறவாப்பனை, பிறவாப்புளி என 2 மரங்கள் உள்ளன. கோவிலின் எதிரில் தென்கிழக்கில் மேடை அருகே பெரிய புளியமரம் இருக்கிறது. இந்த புளியமரம் காய் காய்க்கும்; பழமாக மாறும். ஆனால் அந்த புளியங்கொட்டை களை எங்கு சென்று போட்டாலும். அது முளைக்காது. இதனால் தான் இதனை ‘பிறவாப்புளி’ என்கிறார்கள்.

அதேப் போல் இங்குள்ள இறவாப்பனை வடகயிலாயம் அருகே உள்ளது. இந்தப் பனை நீண்ட நெடுங்காலமாக இங்கே உயிர்ப்புடன் இருக்கிறதாம்.

பொன்னொளி வீசிய செம்பு..

இங்கு உள்ள வடகயிலாயம் கோவிலுக்குள், பிரம்ம தீர்த்தம் ஒன்று உண்டு. இந்த தீர்த்தத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் புனித நீராடினால், அந்த வியாதி நீங்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த கிணற்றில் செப்பு காசுகளை போட்டால், பல நாட்களுக்கு பிறகு அது பொற்காசு போல ஒளிவீசுமாம். கடந்த 1918-ம் ஆண்டு தீர்த்த கிணற்றை தூர்வாரிய போது அதில் இருந்து வெளிப்பட்ட செப்பு காசுகள், பொன் காசு போல் மின்னி யிருக்கின்றன.

திருவிழாக்கள்..

இந்த தலத்தில் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. தேரோட்டம், தெப்பத்திருவிழா, பங்குனி திருமஞ்சனம் இதில் பிரசித்தம். இது தவிர ஆனி திருமஞ்சனம், நாற்று நடவு திருவிழா உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பட்டீஸ்வரரை தரிசிக்கலாம்.

அமைவிடம்:

கோவை காந்திபுரம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூருக்கு டவுன் பஸ்கள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக