Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

சுக்ரீவன் அனுமனுக்கு வழிகாட்டுதல்!...

சாம்பன் என்பவன் இரண்டு கோடி வெம்படையுடன் புடைசூழ அங்கு வந்தான். துன்முகன் என்பவன் எண்ணிலடங்கா கோடி நூறாயிரம் படையுடன் வந்தான். 

துமிந்தன் என்பவன் நூறு லட்சம் கோடி படைகளுடன் அங்கு வந்து சேர்ந்தான். கஜகோமுகன் எனும் வீரனும், ஒன்பது கோடி படை வீரர்களுடன் வந்து சேர்ந்தான். 

குமுதன் என்ற படைத் தலைவன், ஐந்தாயிரம் கோடி தன் சேனையுடன் அங்கு வந்தான். நளன் என்பவன் எண்ணற்ற படை வெள்ளத்தோடு அங்கு வந்தான். கும்பசங்கர் எனும் படைத்தளபதியும் தன் சேனைகளோடு வந்து சேர்ந்தான். அனுமன் தன் நூறாயிரம் கோடி சேனையுடன் தயாராக இருந்தான்.

இப்படி கோடிக் கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் எட்டுத் திசைகளில் இருந்து வானர வீரர்கள் வந்து குவிந்தனர். மறுநாள் அனுமன் அனைவரையும் கடல் போல் திரட்டி கொண்டு இராமனின் இருப்படத்திற்கு வந்து சேர்ந்தான். 

சுக்ரீவன், கடல் போல் திரண்டு வந்த படைகளை இராமரிடம் காண்பித்தான். இராமர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் போல் நின்ற வானர வீரர்களை கண்டு அதிசயத்து நின்றார். 

பிறகு சுக்ரீவனிடம், சுக்ரீவா! உன் படைகள் வெள்ளம் போல் திரண்டு வந்துள்ளது என வியந்துக் கூறினார். இராமர், இனியும் நாம் காலத்தை வீணடிக்காமல் விரைவில் சீதையை கண்டுபிடிக்க வேண்டும். ஆதலால் அதற்கான வேலைகளை பார்க்கலாம் என்றார்.

பிறகு சுக்ரீவன் தன் படைகளை எட்டு திசைகளுக்கும் அனுப்பினான். இடபன் என்னும் வானர வீரனை மேற்கு திசைக்கு சென்று சீதையை தேடும்படி கட்டளையிட்டான். 

அடுத்து சதவலி என்னும் வானர தளபதியை வடதிசை நோக்கி செல்லுமாறு அனுப்பினான். விந்தன் என்னும் வானர வீரனை தன் படைகளுடன் கீழ்திசை நோக்கி செல்லுமாறு கட்டளையிட்டான். 

பிறகு அனைவரையும் சீதையை தேடி ஒரு மாதத்திற்குள் வர வேண்டும் என கட்டளையிட்டான். பிறகு சுக்ரீவன் அனுமனை நோக்கி, வீரனே! உன் பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. 

இராவணன் சீதையை தென்திசை நோக்கி தான் கவர்ந்து சென்றான். ஆதலால் நீ தென்திசை நோக்கி செல். உன்னுடன் அங்கதனும், ஜாம்பவானும், வானர படை வீரர்களும் வருவார்கள்.

தென் திசை போக இருக்கும் அனுமன் முதலியானோருக்கு சுக்ரீவன் அதன் வழியை பற்றி கூறினான். நீங்கள் தென் திசை நோக்கி செல்லும் போது விந்திய மலை வரும். 

அங்கு சீதையை தேடுங்கள். அதன் பின் நீங்கள் நர்மதா நதியை அடைவீர்கள். பிறகு அங்கிருந்து சென்று ஏமகூட மலையை அடைவீர்கள். அங்கு சீதையை தேடிய பின் போகும் வழியில் தண்டகவனத்தை அடைவீர்கள். 

அதனை தாண்டிச் சென்றால் பாண்டு மலை வரும். அங்கு தேடிய பின் புனித நதியான கோதாவரி நதியை அடைவீர்கள். அங்கு சீதையை தேடிய பின் தெற்கு நோக்கி சென்றால் சோனை நதி வரும். அதை தாண்டி சென்றால் பல நாடுகளை கடந்து கொங்கணம், குலிந்தம் என இரு நாடுகள் வரும்.

அங்கு சீதையை தேடிய பின் அங்கிருந்து சென்றால் அருந்ததி என்ற பெருமலையை அடைவீர்கள். அருந்ததி மலையின் உச்சியை எவராலும் அடைய முடியாது. ஆதலால் அருந்ததி மலை உச்சி சென்று காலத்தை வீணடிக்க வேண்டாம். 

பிறகு அங்கிருந்து சென்றால் மரகத மலை வரும். அங்கு சென்று தேடுங்கள். அதன்பின் திருவேங்கட மலையை அடைவீர்கள். அம்மலையை அடைந்தால் உங்கள் பாவங்களெல்லாம் நீங்கி முக்தி பெறுவீர்கள். அம்மலையை தொலைவில் இருந்து தரிசித்துவிட்டு சீதையை தேடுங்கள்.

 அதன்பின் தொடர்ந்து சென்றால் சான்றோர்கள் வாழும் தொண்டை நாடு வரும். அங்கு தேடிய பின் தொடர்ந்து சென்றால் சோழ நாடு வரும். அங்கு சீதையை தேடிய பின் நீங்கள் பாண்டிய நாட்டை அடைவீர்கள். பிறகு பாண்டிய நாட்டை கடந்து சென்றால் பொதிய மலை வரும். அங்கு அகத்திய முனிவரின் தமிழ் சங்கத்தை காண்பீர்கள். 

அத்தமிழ் மொழியின் இனிமை நம் மனதின் உள்ளத்தை உருக வைக்கும். தமிழ் மொழி இனிமையில் மனதை தளர விடாமல், அங்கு சீதையை தேடிய பின்பு மகேந்திர மலையை அடைவீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக