Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

மரத்தின் பாசம் !

ஒரு ஊரில் ராஜா என்னும் சிறுவன் இருந்தான். அவன் இருந்த வீட்டின் பக்கத்தில் பெரிய மரம் அழகுடன் காட்சி தந்தது. அச்சிறுவன் தினந்தோறும் அம்மரத்தில் ஏறி, பழங்களை பறித்து உண்பான். 

சிறிது நேரம் மரத்தின் கீழே அமர்ந்து இளைப்பாறுவான். பின்பு மகிழ்ச்சியுடன் அம்மரத்தில் ஏறி விளையாடுவான். இதைக் கண்டு அம்மரமும் மிகவும் மகிழ்ந்தது. நாட்கள் போகப்போக அம்மரமும் அச்சிறுவனின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும். அச்சிறுவன் வந்ததும் கிளைகளை அசைத்து தன் மகிழ்ச்சியை தெரிவிக்கும்.

நாளடைவில் அம்மரமும் அச்சிறுவனிடம் பேச ஆரம்பித்தது. மரமும், சிறுவனும் நண்பர்களாகி அன்புடன் பழகி வந்தார்கள். அதன்பின் சில மாதங்களாக அச்சிறுவன் வராதததை கண்டு மரம் ஏங்கியது. 

தினமும் அச்சிறுவனின் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழித்து அச்சிறுவன் மரத்தை காண வந்தான். மரம் அச்சிறுவனை கண்டதும், வா! வா! உனக்காக தான் இத்தனை நாட்கள் காத்து கொண்டிருக்கிறேன். 

ஏன் இத்தனை நாட்களாக என்னை பார்க்க வரவில்லை. வா! வந்து என்மேல் ஏறி விளையாடு. என் கனிகளை பறித்து உண் என்றது. சிறுவன், மரமே! எனக்கு அதில் விருப்பம் இல்லை. இப்பொழுது நான் வளர்ந்துவிட்டேன். எனக்கு விளையாட பொம்மைகள் தான் வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினான்.

மரம், சிறுவனின் வருத்தத்தை கண்டு தானும் வருந்தியது. பின் அச்சிறுவனிடம், நீ மரத்தில் இருக்கும் கனிகளை பறித்து சென்று சந்தையில் விற்றால், அதன் மூலம் பணம் கிடைக்கும். அதை வைத்து நீ பொம்மைகள் வாங்கி கொள்ளலாம் என்றது. 

அச்சிறுவனும் மரம் கூறியபடியே செய்தான். அதன்பின் நீண்ட நாட்களுக்கு அவன் மரத்தை காண வரவில்லை. மரமும், ஒவ்வொரு நாளும் அவன் வரும் வழி நோக்கிக் காத்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் மரத்தை காண வந்தான். 

மரம், அவனை கண்டவுடன், மிகவும் மகிழ்ந்தது. மரம், ஏன் இத்தனை நாட்களாக என்னை காண வரவில்லை எனக் கேட்டது. அவன், மரமே! நீ சிறிதும் மாறவில்லை. ஆனால் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. 

இப்பொழுது என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. வீடு கட்ட சிறிது மரங்கள் தேவை என வருத்தத்துடன் கூறியது. மரம், இதற்கு ஏன் வருந்துகிறாய்? என் கிளைகளை வெட்டி கொண்டு செல் என்றது. அவனும் மரத்தின் எல்லா கிளைகளையும் வெட்டிக் கொண்டு சென்றான்.

அதன்பின் பல வருடங்கள் அவன் மரத்தை காண வரவில்லை. மரமும் அவனது வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தது. மறுபடியும் பல வருடங்கள் கழித்து அவன் மரத்தை பார்க்க வந்தான். மரம் அவனை கண்டு மனம் மகிழ்ந்தது. 

அவன் மரத்திடம், எனக்கு படகு செய்ய வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினான். மரம் அவனிடம், நீ ஏன் வருந்துகிறாய்? என்னை வெட்டிக் கொண்டு சென்று படகு செய்து கொள் என்றது. அவனும் மரத்தை வெட்டிக் கொண்டு சென்றான். 

மரத்தின் அடிப்பகுதி மட்டும்தான் மீதம் இருந்தது. மறுபடியும் அவன் பல வருடங்கள் கழித்து மரத்தை காண வந்தான். அப்பொழுது அவன் முதுமை பருவத்தை அடைந்திருந்தான். மரம் அவனை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தது. மரம், அவனைப் பார்த்து, ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்? எனக் கேட்டது. 

அதற்கு அவன், எனக்கு வயதாகிவிட்டதால் சோர்வாக உள்ளேன். எனக்கு இப்பொழுது ஓய்வு தான் தேவை என்றான். மரம், இவ்வளவு தானே! வா என் மேல் அமர்ந்து கொள் என்று மகிழ்வுடன் கூறியது. பின் அவன் அந்த மரத்தின் அடிப்பகுதியில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுத்தான். இந்த அளவிற்காவது அவனுக்கு உதவ முடிந்ததே என்று மரம் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தது.

தத்துவம் :

பெற்றோர்களிடம் இருந்து நாம் எவ்வளவோ பெற்றுக் கொண்டிருக்கிறோம். பெற்றதில் மகிழ்கின்ற நாம் அவர்களுக்கு திரும்ப ஏதேனும் கொடுத்தது உண்டா? என்றால் இல்லை என்பது தான் பலரின் பதிலாய் இருக்கும். பெற்றதில் மகிழ்கின்ற நாம் முடிந்தவரை நம் அன்பையாவது அவர்களுக்கு கொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக