தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பொடிச்சன் பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிக்ஷபதி. இவருடைய மைத்துனர் கோவர்தன். கோவர்தனின் மூன்று வயது மகன் சாய்வர்தன். இந்நிலையில் பிக்ஷபதி வீட்டிற்கு சிறுவனின் குடும்பத்தினர் சென்றுள்ளனர். நேற்று மாலை வீட்டிற்கு வெளியே சாய்வர்தன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் கால் தவறி விழுந்து விட்டான்.
கோடைக்காலம் என்பதால் நிலத்திற்கு அதிகளவில் தண்ணீர் தேவைப்படுவதை ஒட்டி, நேற்று முன் தினம் இரவு பிக்ஷபதி ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார். இரண்டு இடங்களில் தோண்டியும் தண்ணீர் வராததால் மூன்றாவது இடத்தில் தோண்டியுள்ளார்.
அதில் தண்ணீர் வந்ததால் மற்ற இரண்டு ஆழ்துளை கிணறுகளையும் அப்படியே விட்டுவிட்டார். இந்த சூழலில் மூடப்படாமல் இருந்த 120 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சாய்வர்தன் விழுந்துவிட்டான்.
இதுபற்றி தகவலறிந்து ஓடிவந்த உறவினர்கள் துளையின் அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் சிறுவன் 17 அடி ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. உடனே மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இரவு முழுவதும் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் ஆழ்துளைக் கிணற்றுக்கு இணையாக 17 அடி ஆழத்திற்கும் மேலாக பள்ளம் தோண்டப்பட்டது. இதையடுத்து பக்கவாட்டில் துளையிட்டு இன்று அதிகாலை சிறுவனை மீட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோடைக்காலம் என்பதால் பூமிக்கடியில் நிலவும் அதிகப்படியான வெப்பம், சிறுவனுக்கு ஏற்பட்ட அச்சம் ஆகியவற்றின் காரணமாக சாய்வர்தன் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெலங்கானா மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக