Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 18 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 022

கூற்றுவ நாயனார் !!

வளமையும், செழுமையும் கொண்ட பல வீரம் மிக்க குறுநில வேந்தர்களால் ஆளப்பட்ட தலங்களில் திருக்களந்தை என்ற தலமும் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் வாழ்ந்து வந்த பல மரபில் களப்பாளர் என்னும் மரபில் தோன்றியவர் கூற்றுவர். வாளெடுத்தும், வில்தொடுத்தும் தமது நகரத்தில் வாழ்ந்த மக்களிடத்தில் வீரம் வளர்த்து வெற்றிகள் பல பெற்ற கூற்றுவர் பகைவர்களுக்கு, எமன் (கூற்றுவன்) போன்றவர் என்ற காரணத்தாலேயே இவருக்கு இப்பெயர் உரியதாயிற்று. இதுவே அவரது இயற்பெயர் மறைவதற்கும் காரணமாக இருந்தது.

வாள் சுழற்றும் வீரத்தோடு எம்பெருமானின் மீது மிகுந்த பக்தியையும் பெற்றிருந்ததால் களந்தை நாட்டை எம்பெருமானின் அருளோடு... பெரும் வெற்றிகளைப் பெற்று அறம் பிறழாது புகழ்பட ஆட்சியும் புரிந்து வந்தார். சிவனருட் செல்வர்களின் திருவடிகளைப் பணிந்து அவர்களுக்கு உயர்ந்த திருத்தொண்டுகள் மற்றும் பல உதவிகள் புரிந்து வந்தார். இவ்வரசர் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையுறாது ஓதிவரும் பக்தி படைத்தவர். அவ்வொழுக்கத்தின் வலிமையாலேயே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார்.

இக்குறுநில மன்னர் தம்மிடமுள்ள படைகளான தேர், புரவி, ஆட்பெரும் படை கொண்டு பல நாடுகளை வெற்றி கொண்டு தமது கொடியின் கீழ் கொண்டு வந்தார். மன்னர் தும்பை மாலை சூடிப் போர் செய்து பெற்ற வெற்றிகளால் குறுநிலம் விரிநிலமானது. முடியுடைய மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையும் வென்றார்.

இவ்வாறு எட்டுத்திக்கும் தமது வெற்றி முரசு கொட்டிய காவலனுக்கு ஓர் எண்ணம் உருவாகியது. தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கு மட்டும் உரிய மணிமகுடத்தை தாமும் அணிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் தோன்றியது. சோழ மன்னர்கள் தில்லை, திருவாரூர், உறையூர், பூம்புகார் என்னும் இடங்களில் தான் முடி சூட்டிக் கொள்வது என்பது வழக்கமாக வைத்துக் கொண்டு இருந்தனர். மணிமகுடம் என்பது சோழர் குலத்தை சேர்ந்த மன்னர்களுக்குரிய சிறப்புப் பொருளாகவே இருந்து வந்தது.

இம்மணிமகுடத்தைப் பாதுகாத்து வரும் தில்லை வாழ் அந்தணர்கள் இம்மணிமகுடத்தைத் தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர். இந்த தகவல்கள் அனைத்தையும் நன்கு தெரிந்து வைத்திருந்த கூற்றுவர் தில்லைவாழ் அந்தணர்களை சந்தித்து அவர்களிடம் தமது மனதில் எழுந்த எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து எதிர்பாராத விதமாக ஒருநாள் தில்லைக்குப் புறப்பட்டுச் சென்றார். தில்லை நகரத்தை வந்தடைந்ததும் தில்லை நடராஜப் பெருமானை வணங்கி வழிபட்டு பின்பு தில்லைவாழ் அந்தணர்களைச் சந்தித்தார். தில்லைவாழ் அந்தணர்கள் மன்னரைக் கண்டதும் பணிந்து நின்றனர். பின்பு மன்னரோ தமது மனதில் உள்ள அதாவது, தமக்கு மணிமுடி சூட்ட வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

மன்னர் உரைத்ததை கேட்டதும் தில்லைவாழ் அந்தணர்கள் திகைத்து நின்றனர். மேலும் வேந்தரிடம் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அஞ்சி நடுங்கினர். அந்தணர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்ட கூற்றுவரோ அவர்களை நோக்கி உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை என்னிடம் வெளிப்படுத்திக் கூறலாம் என்று கூறினார். மன்னர் இவ்விதம் உரைத்த பின்னரே அந்தணர்கள் திகைப்பில் இருந்து வெளிவந்தனர். பின்பு மன்னரை நோக்கி நாங்கள் தங்களுக்கு முடிசூட்ட விரும்பவில்லை என்று மறுத்து கூறினர்.

மேலும் நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் சோழ குலத்திலே பிறந்த மன்னர்களுக்குத்தான் முடிசூட்டி வருவது என்பது எங்களின் வழக்கம் ஆகும். மற்றபடி வேறு மன்னர்களுக்கு இத்திருமுடியைச் சூடுவதற்கில்லை என்று மனதைரியத்தோடு விடையளித்து மன்னரின் கோரிக்கையை நிராகரித்தனர். அந்தணர்கள் எவ்விதமான அச்சமுமின்றி உரைத்ததைக் கேட்டதும் கூற்றுவருக்கு என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்றார். முடியரசு ஆவதற்கு குடியொரு தடையா? எனத் தமக்குள் எண்ணி வருந்திக் கொண்டு இருந்தார்.

அந்தணர்கள் தங்கள் மனதில்பட்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறினாலும் கூற்றுவ வேந்தரைக் கண்டு அச்சம் கொண்டனர். மன்னரின் கோரிக்கையை நிராகரித்த காரணத்தால் ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்று தங்களுக்குள் தவறான எண்ணம் கொண்டனர். இந்த இன்னல்களை தவிர்க்க சோழ மன்னர்களிடம் அடைக்கலம் அடைந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று எண்ணி தில்லையின் எல்லையில் இருந்து வெளியேறி சேர மன்னரிடம் சென்று வாழ எண்ணினர். மணிமகுடத்தை தங்கள் மரபில் வந்த ஒரு குடும்பத்தாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து மகுடத்தை பாதுகாக்கும்படி செய்யத்தக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டு சென்றனர்.

வேந்தரின் மனமோ! தில்லைவாழ் அந்தணர்களை துன்புறுத்தியோ, வற்புறுத்தியோ அல்லது அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் துன்பம் இழைத்து அம்மகுடத்தைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. மாறாக கூற்றுவர் தமக்கு திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு கிட்டவில்லையே என்று மனவேதனையோடு திருக்கோயிலுக்குச் சென்றார்.

திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனிடம் பணிந்து, உலகை ஆளும் அருட்புனலே! ஆடும் ஐயனே! உமது திருவருளால் இந்த பூவுலகில் உள்ள பல நாடுகள் யாவும் எனது குடைக்கு கீழ் கொண்டு வர அருள்புரிந்தீர்கள். ஆனால் தில்லைவாழ் அந்தணர்கள் மட்டும் அந்த மகுடத்தை எனக்குச் சூட்ட மறுத்து விட்டனர் என்றும், ஐயனே! இந்த எளியோனுக்கு முடியாக உமது திருவடியினைச் சூட்டி அருள்புரிதல் வேண்டும் என்று மனதார முழு அன்புடனும், பக்தியுடனும் வேண்டினார். பின்பு தமது இருப்பிடத்தை அடைந்து துயின்றார்.

அன்புக்கும், பக்திக்கும் அடிபணிந்த அன்றிரவு காணுவதற்கு அரிதான எம்பெருமான் மன்னன் கனவிலே எழுந்தருளினார். தமது திருவடியை கூற்றுவரின் சென்னியின் மீது திருமுடியாகச் சூட்டி அன்பு அடியாரின் ஆசையை நிறைவேற்றி அருள்புரிந்து மறைந்தார். நித்திரையில் ஆழ்ந்து கொண்டு இருந்த கூற்றுவர் துயிலில் இருந்து கண்விழித்தெழுந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சி என்பது அவர் போர்க்களத்திலே பல நாடுகளை வெற்றி பெற்ற போதும் கிடைக்காத எல்லையில்லாத மகிழ்ச்சியாக இருந்தது.

தில்லைவாழ் அந்தணர்கள் தமக்குச் சூட்ட மறுத்த மணிமகுடத்தை மறுத்தபோதும் தில்லைப் பெருமானே! தம் பொருட்டு கனவிலே எழுந்தருளி திருமுடி சூட்டினார் என்பதை எண்ணிப் பார்த்துப் பேரானந்தமுற்றார். சிரசின் மீது கைகூப்பி நிலத்தில் வீழ்ந்து வீழ்ந்து எம்பெருமானை பணிந்து எழுந்தார் கூற்றுவர். எம்பெருமானுடைய திருவடியையே மணிமகுடமாகக் கொண்டு உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் கொண்டுவந்து அரசு புரிந்தார் கூற்றுவ நாயனார்.

அறநெறி நிறைந்த கூற்றுவ நாயனார் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கெல்லாம் பொன்னும் மணியும் வாரி வாரிக் கொடுத்தார். தன்னந்தனியே ஒவ்வொரு கோயில்களுக்கும் நித்திய நைமித்திய வழிபாடுகள் தங்கு தடையின்றி தட்டாமல் இனிது நடைபெறுவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்தார். இவ்வாறு உலக மக்கள் மகிழ நல் அரசாட்சி புரிந்திருந்து திருவடி சேர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக