Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 18 மே, 2020

பதினாறாம் நாள் போர்.! கர்ண பருவம்..!

பதினாறாம் நாள் போர் தொடங்குவதற்குரிய நேரமும் வந்தது. பீஷ்மர், துரோணர், ஜெயத்ரதன் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பின்பு கௌரவர் படை செயலிழந்து நின்றது. 

துரியோதனனின் தம்பியர்கள் பலரும், உதவிக்கு வந்த அரசர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் துரியோதனன் பழி வாங்கும் எண்ணம் மாறவில்லை. எப்படியாவது பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்று குறியாய் இருந்தான். 

அசுவத்தாமன் ஆலோசனைப்படி கர்ணன் கௌரவ படைக்கு தளபதியாக நியமிக்கப்பட்டான். கர்ணன் தலைமை ஏற்று செய்த போர் காலம் கர்ண பர்வம் என்று அழைக்கப்படுகிறது. 

கௌரவர்கள் படையை கர்ணனும், பாண்டவர்கள் படையை துஷ்டத்துய்மனும் போர்க்களத்தில் அணிவகுத்து தலைமை தாங்கினர். கர்ணனுடைய படை வீரர்கள் மகரமீனைப் போன்ற வியூகத்திலும், துஷ்டத்துய்மனுடைய படை வீரர்கள் சக்கரவியூகத்திலும் நின்றனர். விரைவில் இரு படைகளும் போரில் ஈடுபட்டன.

பதினாறாம் நாள் போரில் பீமன் யானை மேலேறிப் போர் செய்ய வேண்டும் என்ற ஆசையால், ஒரு பெரிய யானைமேல் ஏறிக் கொண்டு போருக்கு தயாராக இருந்தான். 

அப்போது காசிமன்னன் கோமதுர்த்தி ஒரு யானைமேல் ஏறித்தயாராக இருந்த பீமனுடன் போருக்கு வந்தான். இருவருடைய யானைகளும் ஒன்றோடு ஒன்று மோதிப் போர் செய்தன. காசிமன்னன் போர் செய்யும் போது தடுமாறிக் கீழே விழுந்தான். 

பின்பு கீழே இறங்கியதும் ஒரு வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு பீமனை எதிர்த்தான். உடனே பீமனும் தன் யானையிலிருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு காசியரசனை, எதிர்த்துப் போர் புரிந்தான். 

இறுதியில் பீமன் தன் கதாயுதத்தினாலேயே காசியரசனை கொன்றான். காசியரசன் போர்க்களத்தில் இறந்து விழுந்ததும் அவனுடைய படைகள் சிதறி ஓடிவிட்டன.

பிறகு கர்ணனுக்கும், நகுலனுக்கும் போர் நடந்தது. நகுலனும், கர்ணனும் ஒருவருக்கொருவர் நேர் எதிரெதிரே நின்று போர் புரிந்தார்கள். நகுலன் கர்ணனை சமாளிக்க முடியாமல் அடிக்கடி தளர்ச்சி அடைந்தான். 

கர்ணன் நினைத்திருந்தால் நகுலனை ஒரேயொரு அம்பினால் கொன்றுவிட முடியும். ஆனால் கர்ணன் குந்தி தேவிக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அவனை கொல்லாது விடுத்தான். 

நகுலனுடன் துணைக்கு வந்திருந்த விடதரன், மகதராசன் முதலியவர்களையெல்லாம் அஞ்சாமல் கொன்ற கர்ணன், நகுலனை மட்டும் கொல்லவில்லை. மேலும் நகுலனை துன்புறுத்த விரும்பாத கர்ணன் தன் படைகளையும், தேரையும் அர்ஜூனன் இருந்த பக்கமாகத் திருப்பி அவனை எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கினான்.

பிறகு வீரமுடைய அவர்கள் இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்தது. அர்ஜூனன் எய்த அம்புகளில் இரண்டு கர்ணனுடைய மார்புக் கவசத்தைப் பிளந்து கொண்டு தைத்தது. 

கர்ணனின் வேதனை நிறைந்த நிலையை உணர்ந்த அர்ஜூனன் அவனோடு மேலும் போர் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டான். போர்க்களத்தில் சகுனி பாண்டிய மன்னனோடும், சகாதேவன் துச்சாதனனோடும், அசுவத்தாமன் பீமனோடும், துஷ்டத்துய்ம்மன் கிருபாச்சாரியனோடும் போர் புரிந்து கொண்டிருந்தார்கள். 

வெற்றிக்கு தோல்வியா, தோல்விக்கு வெற்றியா என்று காணமுடியாதபடி போர்க்களத்தின் நிலை சோகத்தின் உருவத்தில் மூழ்கிக் கிடந்தது.

தர்மருக்கும், துரியோதனனுக்கும் போர் ஏற்பட்டது. இருவரும் கடுமையாகப் போர் புரிந்தார்கள். இருவர் படைகளிலும் குதிரைகளும், யானைகளும், காலாட் படைகளும் இறந்து விழுந்தனர். 

தர்மர் துரியோதனனுடைய தேரை வீழ்த்தி கீழே விழச் செய்தான். துரியோதனனின் தேரோட்டியையும் கொன்று விட்டான். தர்மர் துரியோதனனையும், அவன் படைகளையும் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்தார். 

தர்மரிடம், துரியோதனன் தோற்றுப் படைகளோடு பதறியடித்துக் கொண்டு இருப்பதை அறிந்த கர்ணன் தர்மரை எதிர்க்கச் சென்றான் கர்ணன்.

கர்ணனுக்கு துணையாக அசுவத்தாமனும் அங்கு வந்து சேர்ந்தான். பிறகு இவர்களுடன் தன் படைகளுக்கு துணையாக கிருபாச்சாரியாரும், சல்லியனும் வந்து சேர்ந்து கொண்டனர். 

ஆகவே, துரியோதனன், கர்ணன், அசுவத்தாமன், கிருபாச்சாரியர், சல்லியன் ஆகிய ஐந்து பேர்களும் சேர்ந்து கடல் போன்ற படைகளுடன் திரண்டு சென்று தர்மரை வளைத்துக் கொண்டு போரிடுவதற்கு முற்பட்டார்கள். 

இதனைக் கண்ட அர்ஜுனன் உடனே தன் படைகளோடு ஒன்று திரண்டு தர்மருக்கு உதவியாக வந்து நின்று கொண்டார்கள். இருவருக்கும் போர் ஆரம்பமாயிற்று. 

நீண்ட நேரம் போர் நடந்த பிறகு துரியோதனனுடைய படைவீரர்கள் தோல்வி அடைந்தனர். தர்மரின் வெற்றி சத்தியத்தின் வெற்றியாக நின்றது. சூரியன் மறைவுக்கு பின்பு அன்றைய போர் முடிந்தது. அனைவரும் பாசறைக்கு திரும்பினர்.

போர் முடிந்த இரவில் கர்ணனின் செயல் துரியோதனனுக்கு வருத்தத்தை அளித்தது. கர்ணன் நகுலனையாவது கொன்றிருக்கலாம் என்று எண்ணினான். 

துரியோதனன், கர்ணனிடம் சென்று அடுத்த நாள் போரில் அர்ஜூனனை போர்க்களத்தில் கொன்றுவிடுமாறு கேட்டுக் கொண்டான். ஆனால் கர்ணன் துரியோதனனிடம், அர்ஜுனனின் சாரதியாய் இருப்பவர், சகல உலகங்களை தனக்குள் அடக்கிய, தாய் தேவகியின் தெய்வீகப் புதல்வன் கிருஷ்ணர். 

மூவுலகுக்கும் கடவுள் ஆவார். மேலும் அந்த ரதம், அக்னி பகவானால், காண்டவ வனத்தை அழிப்பதற்காக வழங்கப்பட்ட தெய்வீக ரதம். அவனிடம் இருக்கும் குதிரைகள் மனோ வேகத்துக்கு ஈடான வேகம் கொண்டவை ஆகும். 

அர்ஜூனனிடம் இரண்டு அம்புறாத் துணிகள் உள்ளன. எடுக்க எடுக்க குறையாத அம்புகள் அதிலே நிறைந்து கொண்டே இருக்கும்.

எனக்கு மட்டும் கிருஷ்ணரைப் போல ஒரு சாரதி இருந்தால் என்னால் நிச்சயம் வெல்ல முடியும் என்று கூறினான். அதனால் சல்லியன் என் தேரை ஓட்டுவானானால் நான் நிச்சயம் அர்ஜூனனை தோற்கடிப்பேன் எனக் கூறினான். 

துரியோதனன் உடனடியாக சல்லியனிடம் சென்று, நீ தேரை ஓட்டுவதில் கிருஷ்ணரைவிட சிறந்தவன். அதனால் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து தனக்கு வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என வேண்டினான். 

சல்லியன் ஒரு நிபந்தனையுடன் தேரைச் செலுத்தச் சம்மதித்தான். போரில் கர்ணன் தவறிழைத்தால் தனக்கு அவனை கண்டிக்கும் உரிமை வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். துரியோதனனும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக