Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி024

கோட்புலி நாயனார் !!

காவிரி பாயும் சோழவள நாட்டில்... நாட்டியத்தான் குடியில்... சிவத்தலத்தில் வீரவேளாளர் மரபில் கோட்புலியார் என்ற நாயனார் வாழ்ந்து வந்தார். இவர் சோழருடைய போர்ப்படையில் சேர்ந்து படைத்தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் எந்த சூழ்நிலையாயினும், எதற்கும், எவருக்கும் அஞ்சாமல் அவர்களையும், அந்த சூழ்நிலைகளையும் நேர்கொண்டு எதிர்கொள்ளும் சிறந்த வீரர் ஆவார்.

புலியை போன்று வேட்டையாடுவதில் பெரும் வல்லவராக இருந்த காரணத்தினாலும், புலி போன்ற குணம் மிக்கவராக இருந்ததாலும் இவருக்கு கோட்புலியார் என்ற காரணப்பெயர் ஏற்பட்டது. நாட்டிற்காகவும், தான் அன்பு கொண்ட நாட்டு மக்களுக்காகவும் எண்ணற்றப் போர்க்களம் சென்று பகையரசர்களை வென்று மன்னருக்கு எல்லையற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அதனாலும் இவருக்கு இச்சிறப்புப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

வீரம் கொண்டு எதிரிகளை கொன்றது மட்டுமல்லாமல் தனது வயது ஒத்த பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாகவும் இருந்து வீரம் வளர்த்த கோட்புலியார், சிவபெருமானின் மீது எல்லையில்லா பக்தி பூண்டிருந்தார். இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற நிதிகள் அத்தனைக்கும் நெல் வாங்கி வீட்டில் மலை மலையாகக் குவித்தார். சேமித்த நெற்குவியலைக் கோவில் திருப்பணிக்குப் பயன்படுத்தினார்.

ஒருமுறை கோட்புலியார் எதிரிநாட்டுக்குச் சென்று போர் புரிய வேண்டிய நிர்பந்தம் வந்தது. தொலைதூரம் என்பதால் வீட்டில் இருப்பவர்களிடம் விடைபெற்று போருக்குப் போகும் முன்னே தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும் சென்று எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை யாரும் தன் சொந்த உபயோகத்திற்காக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு எடுப்பது சிவ துரோகமாகும் என்றும், இது இறைவன் ஆணை என்றும், யாம் இல்லாத இவ்வேளையில் கோவில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொடுக்கலாம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு புறப்பட்டார்.

கோட்புலியார் எதிரிகளை வீழ்த்த போர்க்களம் நோக்கி சென்ற சில நாட்களில் நாட்டில் பஞ்சம் ஏற்படத் துவங்கியது. அந்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் வாடினார்கள். கோட்புலியாரின் வீட்டிலும் பஞ்சம் தாண்டவமாடியது. அந்த காலக்கட்டத்தில் மக்கள் எல்லோரும் உணவு கிடைக்காமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாயினர். அந்த சூழலில் கோட்புலியாரின் சுற்றத்தினர் பசியின் கொடுமை தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லை எடுத்து தாராளமாகச் செலவு செய்தனர்.

நாட்கள் கடந்து சென்றன. ஒரு வழியாக எதிரிகளை கொன்று குவித்து வெற்றி பெற்று திரும்பினார். ஊர்மக்கள் அனைவரும் அவரை இன்முகத்தோடு வரவேற்றனர். கோட்புலியார் மிகவும் மகிழ்ச்சியுடனும் தமது ஊர் மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு தனது மனதில் கோவில் திருப்பணிக்காண வேலைகளை செய்ய வேண்டும் என்று மகிழ்ந்தபடி வீட்டுக்குள் நுழைந்தார். கோட்புலியாரின் கண்களில் முதலில் மலை போல் இருந்த நெற்குவியலானது மடு போல் குறைந்திருப்பது கண்ணில் தென்பட்டது. நெற்குவியல் குறைந்திருப்பதை கண்டதும் மிகுந்த சினம் கொண்டவராய் வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அழைத்தார்.

அவர்கள் அனைவரும் வந்ததும் மிகுந்த சினம் கொண்ட பார்வையுடன் வீட்டில் இருந்த நெற்குவியலானது குறைந்திருக்கின்றது... ஏதேனும் திருப்பணிகளை மேற்கொண்டீர்களா? என்று வினவினார். ஆனால், அங்கிருந்த உறவினர்களோ அவரது கோபத்தைக் கண்டு அஞ்சினார்கள். பின்பு அவரிடம் தைரியம் கொண்டு நிகழ்ந்தவற்றை எடுத்து கூறத் துவங்கினார்கள். அதாவது, நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அனைவரும் உணவின்றி பலவிதமான இன்னல்களை அனுபவித்ததையும், அதனால் உறவினர்கள் மற்றும் சுற்றம் என அனைவரும் நெல்மணிகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்கள்.

இதைக் கேட்டதும் கூத்தப் பெருமானின் திருப்பணிக்காக வைத்திருந்த அனைத்து நெல்மணிகளையும் உண்டதை அறிந்ததும் அவர் கொண்ட சினமானது எல்லை இல்லாத அளவில் பலமடங்கு அதிகமானது. ஆனால் தாம் கொண்ட சினத்தை வெளிக்காட்டாமல் எதுவும் பேசாமல் நெல்மணிகளை எவர் எவர் உண்டனர் என்ற விவரங்களை அறிந்து கொண்டு அவர்கள் அனைவரையும் தம்முடைய இல்லத்திற்கு வரவழைத்தார்.

நாயனார் வைத்திருந்த நெல்மணிகளை உண்டவர்கள் அனைவரும் வந்த பின்னர் எவரும் தப்பி ஓட முடியாதவாறு காவல் ஏற்பாடுகளை செய்துவிட்டு அவர்களிடம் சென்று சிவ சொத்துக்களை தமது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவது என்பது சிவ துரோகமாகும் என்று உரைத்த வண்ணம் அங்கு நின்று கொண்டிருந்த அனைவரையும் வெட்டி சாய்க்க துவங்கினார்.

இவரது செயல்களை கண்டதும் மற்ற உறவினர்கள் அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் அங்கும் இங்கும் ஓட துவங்கினர். ஆயினும் எவராலும் அங்கிருந்து தப்பித்து செல்ல முடியவில்லை. தாய், தந்தை, மனைவி, மக்கள், உடன்பிறந்தார், உறவினர் என்று அனைவரையும் கொன்று குவித்தார் ஓர் ஆண் குழந்தையை தவிர. அப்பிள்ளையைக் கண்ட காவலன் ஐயனே இந்த பாலகன் மட்டுமே நம் குடிக்கு உரிய ஒரே புதல்வன் ஆவான். இவன் அன்னத்தை உண்ணவே இல்லை. இக்குழந்தையை மட்டுமாவது கொல்லாமல் உயிர் வாழ அருள்புரிய வேண்டும் என்று பணிவோடு வேண்டினான்.

காவலன் மொழிந்ததைக் கேட்டும் இன்னும் கோபம் ஏற்பட இந்த பாலகன் அன்னத்தை உண்ணாமல் இருந்தாலும் அன்னத்தை உண்ட அன்னையின் தாய்ப்பாலை உண்டவன் என்று கூறி சிறிதும் யோசிக்காமல் தமது குடிக்கு கடைசி புதல்வனாக இருந்த அக்குழந்தையையும் கணப்பொழுதில் தமது வாளினால் இரு துண்டாக்கினார். அப்பொழுது மிகுந்த பேரொளியுடன் சிவபெருமான் விடையின் மீது எழுந்தருளினார். எவருக்கும் காணக்கிடைக்காத அருங்காட்சியை கண்டதும் பிறவி பெரும் கடலை கடந்த பேரின்பம் கொண்டார் கோட்புலியார்.

பின்பு விழிகளில் நீர் வலிய தனது கரத்தில் இருந்த வாளை நிலத்தில் விட்ட வண்ணம் தம்முடைய இருகரங்களையும் சிரத்தின் மீது கொண்டு சென்று வணங்கினார். எம்பெருமான் கோட்புலியாரை நோக்கி உன் உடைவாளால் உயிர்நீத்த அனைவரும் பிறவி என்னும் பாவத்தை விட்டு அகன்று அவர்கள் எம்மிடத்தில் இன்பமாக வாழ்வார்கள். நீயும் எம்முடன் இணைவாய் என்று அருள் புரிந்தார் சிவபெருமான். கோட்புலியார் காட்டிய பக்தியின் சக்தி அனைவருக்கும் பிறவாப் பெருவாழ்வைக் கொடுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக