Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 23 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 027

சாக்கிய நாயனார் !!

இயற்கை எழில் நிறைந்த திருச்சங்க மங்கை என்னும் நகரத்தில் வாழ்ந்து வந்த பல மரபுகளில் வேளாண் மரபில் தோன்றியவர் சாக்கியனார். இவர் இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார். இவர் தனது பிறவி கடனை இப்பிறவியோடு முடித்து முக்தி பெற வேண்டும் என்று விரும்பி அதற்காக தனது தேடல்களை தொடங்கினார். தேடலின் பலனாக அவர் பிறவி பெருங்கடலை அடைய சாக்கியர் நெறிகள் (பௌத்த மதம் சார்ந்த நெறிகள்) உதவும் என்னும் தகவல்களை அறிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சாக்கியர் நன்னெறி நூல்களைக் கற்க விரும்பினார்.

இதற்காக அவர்களை தேடும் பணியில் தனது முயற்சிகளை துவங்கினார். அவர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக சாக்கியர்கள் காஞ்சிபுரத்தில் இருப்பதைக் அறிந்துக் கொண்டார். பின்பு காஞ்சிபுரம் சென்று அவ்விடம் தங்கியிருந்து அங்கிருக்கும் சாக்கியர்களிடம் பழக துவங்கினார். அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் உதவியுடன் பல நூல்களைக் கற்றறிந்தார். அவர் பல நூல்களை கற்றும் அவர் தேடிய கேள்விக்கான பதில்களை அவரால் கண்டறிய முடியவில்லை.

சாக்கியர் (பௌத்த மதம்) நூல்களில் பலவற்றை கற்றும் விடை தெரியாமல் மற்ற சமய நூல்களை பயிலத் துவங்கினார். பின் சைவ, சமய நூல்களையும் கற்றறிய துவங்கினார். சைவ நூல்களில் உள்ள பொருள்களையும் அதில் கூறப்பட்ட கருத்துக்களை அறிந்ததும் பிறவி பெருங்கடலை கடக்க சிவநெறியே சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற உண்மையை உணர்ந்து புரிந்துக் கொண்டார். அதனால் அவர் மனத்தெளிவு பெற்றார். தெளிவு கிடைத்ததும் சித்தம் முழுவதும் எம்பெருமானை எண்ணத் துவங்கினார்.

தாம் இருந்த சாக்கிய கோலத்திலேயே சிவபெருமானை நித்தமும் பாராயணம் செய்வதையும், வணங்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். அதாவது மற்றவர்கள் யாவரும் அறியாவண்ணம் தனது அகத்தின் உள்ளே சிவநாமத்தை உச்சரித்த படியும், சிவலிங்க பூஜையும் நடத்தி வந்தார். அருவம், உருவம் என காணும் எல்லா பொருட்களிலும் சிவனையே கண்டவர். சிவனின் பெருமையை உணர்ந்து நாள்தோறும் அவரை வழிபட்ட பிறகே உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருமுறை பாறைகளும், கற்களும் நிறைந்த பகுதியின் வழியே நடந்துக் கொண்டு சென்றபோது வெட்டவெளியின் வழியே யாரும் கேட்பாரற்று பூஜை செய்ய வழியின்றி சிவலிங்கம் ஒன்று தனிமையில் இருந்ததை கவனித்தார்.

கேட்பாரற்று இருக்கும் சிவலிங்கத்தை பார்த்த சமயத்தில் அவர் அடைந்த மனவேதனை என்பது எல்லை இல்லாததாக இருந்து வந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். சிறிது நேரத்தில் நாம் ஏன் சிவலிங்கத்தை பூஜிக்கக்கூடாது என்று எண்ணத் துவங்கினார். ஆயினும் இறைவனை பூஜிக்க வேண்டும் என்ற மனம் இருந்ததே தவிர சிவபெருமானை பூஜை செய்ய தூய நீரோ, வாசனை நிரம்பிய மலர்களோ அவ்விடத்தில் இல்லை.

அருகில் மலரும், நீரும் இல்லாத நிலையில் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தப்படி கீழே கிடந்த கல்லை எடுத்து சிவலிங்கத்தின் மேல் எறிந்தார். அடியார்கள் அளிக்கும் பொருட்களை காட்டிலும் அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பிற்கு கட்டுப்பட்டவர் ஆயிற்றே சிவபெருமான். சாக்கியனார் தம் மீது கொண்ட அன்பினால் குழவியையும் தம் மீது பூஜிக்கப்படும் மலர்களை போன்று எம்பெருமானும் அதைக் ஏற்றுக் கொண்டார்.

இல்லையென்றால் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிலையில் தேவியுடன் அமர்ந்திருக்கும் எம்பெருமானின் திருவடிகளில் பொன் மலரென விழுமா? அன்பினால் நாம் செய்யும் காரியம் என்பது வீண் போவது இல்லை என்பது போல சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தை புரிந்து கொண்டு சிவபெருமான் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார்.

சாக்கிய நாயனார் அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எல்லையில்லா மகிழ்வு கொண்டார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார். சிவலிங்கத்தைக் கண்டதும் அவர் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்தது.

சாக்கியர் கோலத்தில் இருந்து கொண்டு நான் அழகிய மற்றும் வாசனையிடும் மலரால் சிவபெருமானை வழிபடுவதை கண்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அதுமட்டுமல்லாமல் என்னையும் ஏசுவார்கள். ஆனால் கல்லால் எறிவதை எவர் ஒருவர் கண்டாலும் இவர் சிவபெருமானின் மீது கொண்ட வெறுப்பின் மிகுதியால்தான் இவ்விதம் செய்து கொண்டு இருக்கின்றார் என்று எண்ணுவார். அவ்வேளையில் தாம் செய்யும் செயல்களை பற்றி எண்ணத் துவங்கினார். அதாவது இறைவனை அன்பினால் கல்லெறிந்து வழிபடும் செயலை எண்ணத் துவங்கினார்.

கல்லெறிந்து வழிபடும், தமக்கு இத்தகைய எண்ணத்தையும், மனப்பக்குவத்தையும் தந்தருளியது சிவபெருமானின் அருள் பார்வையே என்று எண்ணி மனம் மகிழ்ந்தார். சாக்கியனார் இச்செயலை இடையுறாது தொடர்ந்து செய்து கொண்டே வந்தார். அதாவது சாக்கியர் கோலத்தில் இருந்து கொண்டே கல்லைச் சிவலிங்கத்தின்மீது எறிந்துக் கொண்டே சிவபெருமானை வழிபட்டு கொண்டிருந்தார்.

இவ்விதமாக ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு விட்டுதான் தமது இல்லத்திற்குச் சென்று உணவு உட்கொள்ளும் செயலை மேற்கொண்டு வந்தார். எந்த நிலையிலும் சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் செய்து வந்தார். இவ்வராக தாம் செய்யும் செயலை மேற்கொண்டு வந்த தினங்களில் ஒரு நாள் இறைவன் திருவருளால் தாம் செய்து வந்த செயலை மறந்து திருவமுது செய்ய அமர்ந்துவிட்டார். உடனே என்ன நிகழ்ந்ததோ என அறியாமல் பதறிய மனதோடு எம்பெருமானின் நினைவு வர அவர் இருக்கும் இடத்தை நோக்கி மிகவும் பதற்றத்துடன் செல்லத் துவங்கினார்.

அவ்விதமாக செல்லும்போது இதுவென்ன சோதனை எம்பெருமானே.... எவ்வளவு பெரிய பிழையை செய்து விட்டேன். அடியேன் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என்று எண்ணியவாறு எம்பெருமான் வீற்றிருக்கும் பரந்த நிலவெளியை அடைந்து அங்கு கிடைத்த ஒரு கல்லை எடுத்து சிவலிங்கப் பெருமானின் மீது அன்பு மேலிட கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி எறிந்தார். அப்பொழுது சாக்கிய நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட நெற்றிக் கண்ணரான எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது அமர்ந்த கோலத்தில் அத்தொண்டரின் எதிரே பெரிய எல்லை இல்லாத வானில் தோன்றினார்.

இளமையுடைய காளையின் மீது எழுந்தருளி வந்த ஒப்பில்லாத செய்கையால் இறைவரின் திருவடியினை அடைந்த குற்றமற்ற சிறப்புடைய தொண்டரான சாக்கிய நாயனார் அவரை கண்டு கரம் குவித்து நிலந்தனில் வீழ்ந்து எம்பெருமானை பணிந்து விழுந்தார். எம்பெருமான் அவருக்கு அருள் கொண்ட பார்வையால் சாக்கிய நாயனாருக்கு பிறவா பேரின்பத்தைக் கொடுத்தருளினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக