Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 1 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி032

தண்டி அடிகள் நாயனார் !!

சோழ நாட்டில் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் என்னும் தலம். அங்கு அடியார் கூட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் ஒருவர்தான் தண்டி அடிகள் என்னும் சிவனருட் செல்வர். இவர் பிறக்கும் போதே கண் பார்வையின்றி பிறந்தார். சிறுவயது முதலே எம்பெருமானின் பாடல்களில் அவர்தம் பெருமைகளையும் கேட்டு வந்தார் தண்டி அடிகள். இதன் மூலம் புறக்கண் கொண்டுதான் எம்பெருமானைக் காண வேண்டும் என்பதில்லை எனவும், அகக்கண்ணாலேயே இறைவனை காணமுடியும் என்பதை உணர்ந்தார். மேலும் திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வணங்கி அவருடைய மந்திரமான பஞ்சாக்ஷரத்தை மிகுந்த அன்போடும், பக்தியோடும் எந்த பொழுதாகினும் உச்சரித்துக் கொண்டே எந்நேரமும் இடைவிடாமல் வணங்கி வழிபட்டு வந்தார்.

தண்டி அடிகளார் வாழ்ந்து வந்த காலத்தில் திருவாரூர் நகரில் சமணர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருந்தது. சமணர்கள், சைவத்தை பின்பற்றும் அடியார்களுக்கு பலவிதமான வழிகளில் இன்னல்களையும் ஏற்படுத்திக் கொண்டே இருந்தனர். அதுமட்டுமல்லாது அடிகளார் நீராடும் கமலாலய குளத்திற்கு அருகில் சமணர்கள் பலர் பல மடங்களை கட்டிக் கொண்டு தங்கள் மதத்தைப் பற்றிய பிரச்சாரத்தையும் நடத்திக் கொண்டிருந்தனர். இதை கேள்விப்பட்டதும் தண்டி அடிகளார் மிகவும் மனம் வருந்தினார்.

இவர்கள் இதே போக்கை கையாண்டு கொண்டிருந்தால் சைவ குலத்தினை மண்மூடி விடுவார்களோ? என்று வேதனைப்பட்டு கொண்டிருந்தார். இனியும் பொறுத்திருந்தால் இறைவனுக்கு உருவாக்கப்பட்டுள்ள அந்த திருக்குளமானது இவர்களால் அழிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து குளத்தை காக்கும் பணியில் இறங்கினார். அதாவது, குளத்தின் பரப்பையும், ஆழத்தையும் தம்மால் இயன்ற அளவு பெரிதுப்படுத்தும் திருப்பணிகளை செய்ய வேண்டும் என எண்ணத் தொடங்கினார்.

அடிகளாரிடம் பார்வை மட்டுமே இல்லை. ஆனால், அவரிடம் நிறைந்த முயற்சிகளும், இறைவன் மீது கொண்ட அன்பும் அவரை வழி நடத்தத் தொடங்கியது. அதாவது, பார்வையற்ற அடிகளார் இறைவனின் அருளால் திருக்குளத்தின் பரப்பை அறிந்து, அதற்கு தகுந்தாற்போல் அடையாளமாக சில குச்சிகளை நட்டு, கயிறு கட்டி வேலியாக அமைத்துக் கொண்டார். பின்பு மண்ணை வெட்டி, கூடையில் சுமந்துக் கொண்டு வேலியாக உள்ள கயிற்றின் உதவியால் இந்த மண்ணை கொண்டு வந்து கொட்டுவார். இவருடைய செயல்களை புரிந்து கொள்ள முடியாத சமணர்கள் அவருக்கு பலவிதமான இடையூறுகளையும் விளைவிக்கத் தொடங்கினர்.

தண்டி அடிகள் நாயனார் சமணர்கள் செய்த பலவித இடையூறுகளையும் கடந்து தாம் செய்த பணிகளை மேற்கொண்டு செய்து கொண்டே இருந்தார். இவருடைய செயல்களால் பொறுமை இழந்த சமணர்களோ நேரடியாக நாயனாரை சந்தித்து தாங்கள் இவ்விதமாக செய்து கொண்டிருப்பதினால் இந்தக் குளத்தில் உள்ள சின்னஞ்சிறு ஜீவராசிகள் எல்லாம் அழிந்துப்போக நேரிடும். இது அறச்செயலுக்கு புறம்பாகும் என்று கூறினார்கள்.

சமணர்களின் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்த தண்டி அடிகள் தமது உள்ளத்தினுள்ளே புன்னகைத்துக் கொண்டிருந்தார். கல்லினுள் இருக்கும் தேரைக்கும், கருவிலிருக்கும் உயிருக்கும் நல்ல உணர்வுகளைத் தந்து அவைகளை காக்கும் எம்பெருமானுக்கு இந்த குளத்தில் இருக்கக்கூடிய இந்த ஜீவராசிகளை காக்க வேண்டும் என்பது தெரியாமலா இருக்கப் போகின்றது? என்றார். மேலும் கங்கையை முடியில் கொண்ட நாதனுக்கு நான் செய்யும் இப்பணிகள் சிறு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும், இனி வரவிருக்கின்ற சந்ததிகளுக்கும் எவ்வித தீங்கும் நேராது என்று கூறினார்.

இவரின் பேச்சைக் கேட்டதும் சமணர்கள் இந்நாள் வரை உம்மை கண் பார்வை தெரியாத குருடன் என்றுதான் எண்ணினோம். ஆனால் இப்பொழுதுதான் புரிகிறது உனக்கு காதும் கேட்கவில்லை என்று. இல்லாவிட்டால் நாங்கள் நீ செய்யும் இந்த செயல்களால் உயிர்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொல்லியும், அந்த உண்மையை புரிந்து கொள்ள முடியாமல் போகுமா என்ன? என்று உரைத்துக்கொண்டு இருந்தனர்.

அவ்வேளையில் யாவரும் எதிர்பார்க்காத வகையில் அவர்களின் நகைகளுக்கு பதில் உரைக்கும் விதமாக திரிபுரத்தை எரித்த முடியில் பிறை சூடிய எம்பெருமானின் திருவடிகளை யாம் தினமும் அகக்கண்களால் கண்டு மகிழ்கின்றோம். அவரது திருநாமத்தை என் நாவால் சொல்லி மகிழ்கின்றேன். ஆலயத்தில் ஒலிக்கின்ற வேத ஒலிகளையும், மந்திரங்களையும் என் காதுகளால் கேட்கின்றேன்.

ஒப்பில்லாத என் அப்பனின் அருளையும், அன்பையும் ஐம்பொறிகளாலும் அனுபவித்து ஆனந்தம் கொண்டு இருக்கின்றேன். ஆனால் நீங்கள்தான் கண்களிருந்தும் குருடர்களாகவும், கேட்பதற்கு செவிகள் இருந்தும் கேட்க முடியாத செவிடர்களாகவும், எம்பெருமானின் நாமத்தை உச்சரிக்க இருக்கின்ற நாவையும் இழந்து ஊமைகளாக இருக்கின்றனர் என்று அடிகளார் கூறினார்.

அடிகளார் மொழிந்ததைக் கேட்ட சமணர்கள் மிகுந்த கோபம் கொண்டு மேலும், அவரை பல வழிகளில் இகழுரை உரைத்து அவரை எள்ளி நகையாடி கொண்டிருந்தனர். இதனால் மிகுந்த கோபமும்... சினமும்... கொண்ட தண்டியடிகள் அவர்களை சோதிக்கும் பொருட்டு ஒரு கேள்வியும் கேட்கத் துவங்கினார். சமணர்களே....! எமக்கு ஒரு ஐயம். எம்பெருமானுடைய திருவருளினால் பார்வை இழந்த என் கண்களுக்கு ஒளி கிடைத்திருந்தால் நீங்கள் அனைவரும் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்டார்.

இவருடைய இந்த கேள்வியானது அவர்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும், இவருக்கு பதில் அளிக்கும் விதமாக நீர் வணங்கும் எம்பெருமானின் அருளினாலேயே கண்களை பெற்று இருந்தால் நாங்கள் கண்களை இழந்து இந்த ஊரிலேயே இருக்க மாட்டோம் என்று கோபம் மேலிடக் கூறினார்கள்.

இவருடைய இந்தக் கேள்வியினால் கோபம் கொண்ட சமணர்கள் தண்டியடிகளின் கரத்திலிருந்த மண்வெட்டியையும், மண்ணெடுத்து வந்த கூடைகளையும், அடையாளத்திற்காக அமைத்திருந்த கயிற்று வேலிகளையும் அறுத்து எறிந்தனர்.

இதை உணர்ந்த தண்டியடிகள் மிகவும் மனம் வருந்தி கவலையோடு திருத்தலத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானிடம் தமது துன்பத்தைப் போக்க அருள்புரியுமாறு வேண்டி நின்று கொண்டிருந்தார். பொழுது சாயும்போது எல்லாம் நல்லதே நடக்கும் என்று எண்ணிய வண்ணம் எம்பெருமானின் மீது முழு நம்பிக்கை கொண்டு தனது இல்லத்தை நோக்கி சென்று துயில் கொண்டார்.

துயில் கொண்டிருந்த நாயனாரின் அன்றிரவு கனவிலே எழுந்தருளிய எம்பெருமான் மனம் கலங்காதே... யாம் உம்மைக் காப்போம்... எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உம்மை இகழ்வது எம்மை இகழ்வதாகும். எமக்காக நீர் செய்து கொண்டிருக்கும் திருத்தொண்டை இடையுறாது செய்து கொண்டு இருப்பாயாக... உமது கண்களுக்கு யாம் ஒளி தந்து சமணர்களை ஒளி இழக்கச் செய்வோம் என்று திருவாய் மலர்ந்தார்.

இறைவன் அரசர் கனவிலும் அன்றிரவே தோன்றி... அரசரே, எம்மை வணங்கி வரும் திருத்தொண்டன் குளத்திலே திருப்பணி செய்து கொண்டிருக்கிறான். நீ அவனிடத்திலே சென்று அவனது எண்ணம் அறிந்து நிறைவேற்றுவாயாக. மேலும், அவனது நல்ல திருப்பணிக்கு இன்னல்கள் ஏற்படுத்தி கொண்டிருப்பவரை அறிந்து அவர்களை கண்டித்து அடியார்க்கு நீதி வழங்குவாயாக... என்று கூறி மறைந்தார்.

பொழுது விடிந்ததும் வேந்தன் இறைவன் தம் கனவில் கூறிய பணியை முதற்பணியாக தம் மனதில் கொண்டு அதை நிறைவேற்றத் துவங்கினார். சோழவேந்தன் திருக்குளத்தை வந்தடைந்தார். அந்த குளத்தில் ஒரு அடியார் மட்டும் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவர் கண் பார்வையற்ற நிலையில் தட்டு தடுமாறிக் கொண்டு திருக்குளத்தில் திருப்பணியை செய்து கொண்டிருந்தார். பின்பு அடிகளார் அருகில் சென்று அவரை வணங்கினார். எம்பெருமான் தம் கனவில் தோன்றி மொழிந்ததை கூறினார். வேந்தர் கூறியவற்றில் இருந்து தண்டியடிகள் மிகவும் மனம் மகிழ்ந்தார். தண்டியடிகளும் சமணர்களால் தமக்கு ஏற்பட்ட இடையூறுகளை ஒன்றுவிடாமல் மன்னனிடம் எடுத்துக்கூறி தமக்கு நீதி வழங்குமாறு கேட்டார்.

மன்னன் காவலாளிகளை அழைத்து சமணர்களை அழைத்துவர கட்டளையிட்டார். சிறிது நேரத்திற்குள் சமணர்களும் அவ்விடத்திற்கு வந்தனர். சமணர்கள் மன்னரிடம் தண்டியடிகளிடம் தாங்கள் சவால்விட்டு கோபத்துடன் பேசியதை பற்றி கூறினார்கள். பின்பு சமணர்கள் வேந்தரிடம் தண்டியடிகள் பார்வை பலம் பெற்றால் சமணர்களாகிய நாங்கள் இந்த ஊரை விட்டு செல்கிறோம் என்று கூறினார்கள். சமணர்கள் மொழிந்ததைக் கேட்ட வேந்தர் அடிகளாரையும், சமணர்களையும், தமது அமைச்சர்களையும், அவை ஆலோசகர்களையும் கலந்து ஓர் முடிவிற்கு வந்தார்.

தண்டியடிகளை நோக்கிய மன்னன் எந்நேரமும் பரம்பொருளான சிவபெருமானை வழிபடும் தவநெறிமிக்கவரே...! தாங்கள் எம்மிடம் உரைத்ததுபோல் எம்பெருமானின் திருவருளினால் கண்பார்வை பெற்று காட்டுவீராக! என்று பயபக்தியுடன் கேட்டார். மன்னர் மொழிந்ததை கேட்டதும் தண்டியடிகள் திருக்குளத்தில் இறங்கினார். மண்ணுற வீழ்ந்து கண்ணுதற் கடவுளை உள்ளக் கண்களால் கண்டு துதித்தார். எல்லாம் உணர்ந்த பரம்பொருளே...! யான் தங்களுக்கு அடிமை என்பதை உலகறியச் செய்ய எனக்கு கண்ணொளி தந்து அருள் காட்டுவீர்களாக... என்று பிரார்த்தித்தார். பின்பு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் துதித்த வண்ணம் கையிரண்டையும் தலைமீது கூப்பியவாறு அடிகளார் நீரில் மூழ்கினார்.

நீரில் மூழ்கிய தண்டியடிகள் இறைவனின் திருவருளால் கண் ஒளி பெற்று எழுந்தார். தண்டியடிகள் கண் ஒளி பெற்றதும் புளகாங்கிதம் மேலிட பூங்கோவில் திருக்கோபுரத்தைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். இருகரங்களை சிரம்மேல் தூக்கி வணங்கினார். அரசனை வணங்கினார். மன்னன் கரங்குவித்து சிரம் தாழ்த்தி தண்டியடிகளாரை வணங்கினார். அதே வேளையில் சமணர்கள் தங்கள் கண் பார்வையை இழந்தனர். சமணர்கள் அனைவரும் கண் பார்வையின்றி குருடர்களாக நின்று தவித்தனர்.

செங்கோல் ஏந்தி நீதி குன்றாமல் ஆட்சிபுரியும் அரசன் அவர்களை நோக்கிய வண்ணம் நீங்கள் கூறியபடி தண்டியடிகள் கண் பார்வை பெற்றால் ஒருவர்கூட இல்லாமல் அனைவரும் சென்று விடுவதாக கூறினீர்கள். அவரும் பார்வை பெற்றுவிட்டார். இனி திருவாரூரில் ஒரு சமணர்கள்கூட இருக்கக்கூடாது என்றுரைத்து அனைத்து சமணர்களும் வெளியேற கட்டளை பிறப்பித்தார். அமைச்சர்களிடம் சமணர்களைத் துரத்த ஏற்பாடு செய்யுங்கள் என்றும் கட்டளையிட்டார். தண்டியடிகள் குளத்தைப் பார்த்து மகிழ்ந்த வண்ணம் பூங்கோவிலை அடைந்து எம்பெருமானைக் கண்குளிர, மனம் குளிர கண்டு களித்தார்.

பின்பு தண்டியடிகள் எப்போதும்போல் தாம் செய்து கொண்டிருக்கும் திருப்பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அரசன் அவருக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து கௌரவித்தார். மன்னன் அளித்த பொருளையும், எம்பெருமானின் அருட்பார்வையால் கிடைத்த அருளாலும், தண்டியடிகள் தாம் எண்ணியபடியே திருக்குளத்தை மிகப் பெரிதாகக் கட்டி முடித்தார். அடிகளாரின் அறப்பணியை அரசரும், மக்களும் கொண்டாடி மகிழ்ச்சி கொண்டனர். நீண்ட காலம் இந்த பூவுலகில் வாழ்ந்து நெடுப்புகழ் பெற்று எம்பெருமானின் திருவடியை அடைந்து பேரின்ப நிலையை நாயனார் எய்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக