Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 1 ஜூன், 2020

இராவணனும் அங்கதனும்...!

அங்கதன் இராவணனுடைய மணிமண்டபத்தை அடைந்தான். அங்கதனை பார்த்த அரக்கர்கள் அனுமன் தான் திரும்பி வந்துவிட்டான் என நினைத்து பயந்து ஓடினார்கள். இராவணனை பார்த்த அங்கதன், இவனை நம்மால் வெல்ல முடியுமா? இவனை இராமரை தவிர வேறு எவராலும் கொல்ல முடியாது என நினைத்துக் கொண்டான். 

பிறகு அங்கதன் இராவணன் முன்பு நின்றான். அங்கதனை பார்த்த இராவணன், மகோதரனிடம், மகோதரா! இந்த வானரம் நம் இலங்கை நகரை அழித்த வானரமா? எனக் கேட்டான். மகோதரன், அரசே! இந்த வானரம் இளம் வானரமாக இருக்கிறது. ஆதலால் இந்த வானரம் நம் இலங்கை நகரை அழித்த வானரம் இல்லை என்றான். பிறகு இராவணன் அங்கதனை பார்த்து, யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்? உன்னைக் கொன்று தின்பதற்கு முன் உண்மையைச் சொல் என்றான்.

இதைக் கேட்டு அங்கதன் பலமாகச் சிரித்தான். அனைத்திற்கும் தலைவனான, அனைத்துலகையும் வழி நடத்தும் ஸ்ரீஇராமன் அனுப்பிய தூதன் நான். அவர் உன்னிடம் சொல்லச் சொல்லி சில செய்திகளை கூறி அனுப்பிள்ளார். அதை உன்னிடம் சொல்லவே தூதனாக இங்கு வந்தேன் என்றான். இராவணன், வானரமே! உன் தலைவன் என்ன சிவபெருமானா? இல்லை திருமாலா? இல்லை பிரம்ம தேவனா? ஒரு வானரப்படையை கூட்டிக்கொண்டு கடலை தாண்டி வந்த இராமன் தானே உன் தலைவன். இராமன் உலகை ஆள்பவனா? எனக் கூறி கேலியாகச் சிரித்தான். வானரமே! அந்த சிவன் கூட இலங்கைக்குள் தைரியமாக நுழைய முடியாதபோது, கேவலம் ஒரு மனிதனுக்காக நீ தூதுவனாக வந்திருக்கிறாய். முதலில் நீ யார்? உன் பெயர் என்னவென்று கூறு என்று ஆணவத்தோடு கேட்டான்.

அங்கதன், தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அவர்கள் சோர்ந்து போன நிலையில், அவர்களுக்காக ஒருவனாகவே கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்த இந்திரன் மைந்தன் வாலியின் புதல்வன் நான். என் பெயர் அங்கதன் என்றான். வாலியின் பெயரைக் கேட்ட இராவணன், அடே! நீ வாலியின் புதல்வனா? நான் வாலியின் நண்பன் ஆவேன். உன் தந்தையை கொன்ற இராமனின் பின் நீ செல்லலாமா? இது உன் பெருமைக்கு இழிவல்லவா? நீ உற்ற நேரத்தில் தான் இங்கு வந்துள்ளாய். உன்னை நான் மகனாக பெற்றேன். அந்த மானிடர்கள் எப்படியும் ஒழிந்து விடுவார்கள். உன்னை நான் கிஷ்கிந்தைக்கு அரசனாக முடி சூட்டுகிறேன் என்றான். இராவணன் சொன்னதை கேட்ட அங்கதன், அவனைப் பார்த்து கேவலமாகச் சிரித்தான்.

நீ எனக்கு முடிசூட்டுகிறாயா? இங்கு உள்ள அனைவரும் அழிவது நிச்சயம் என்பதை மறந்து விடாதே. உன் தம்பி விபீஷணன், இராமரிடம் சரணடைந்ததை மறந்து விட்டாயா? இராமர், விபீஷணனை இலங்கையின் அரசனாக முடிசூட்டிவிட்டார். நீ வஞ்சனையாக பேசி என்னை உன் பக்கம் சாய்க்கலாம் என நினைக்காதே. அது ஒரு போதும் நடக்காது. தூதுவனாக வந்தவன் அரச பதவி ஏற்றுக் கொள்வது எவ்வளவு பெரிய துரோகம். அத்தகைய துரோகத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் எனக் கூறி நகைத்தான். அங்கதன் கூறியதைக் கேட்டு இராவணன் கடுங்கோபம் கொண்டான். உடனே இராவணன் இவனை கொல்ல முனைந்தான். ஒரு வானரத்தை தன் கையால் கொல்வதா? என நினைத்து கோபத்தை அடக்கிக் கொண்டான். இராவணன் அங்கதனிடம், நீ இங்கு எதற்காக வந்தாய்? என்பதைச் சொல் என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக