கருங்கல்லால் ஆன பிரமிடு வடிவ கருவறைக் கோபுரங்கள் கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள சாயா சோமேஸ்வரர் திருக்கோவில்.
பகல் நேரம் முழுவதும் தூணின் நிழல் சிவபெருமான் மீது விழும் அதிசயக் கோவில், சூரியனின் மனைவி சாயா வழிபடும் இறைவன், சிவன் - விஷ்ணு - சூரியன் ஆகிய மூவருக்கும் முக்கோண அமைப்பில் அமைந்த ஆலயம், கருங்கல்லால் ஆன பிரமிடு வடிவ கருவறைக் கோபுரங்கள் கொண்ட கோவில், ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் தூணில் சிற்பங்களாக அமைந்துள்ள திருத்தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள சாயா சோமேஸ்வரர் திருக்கோவில்.
புராண வரலாறு :
இக்கோவிலை சூரியனின் மனைவியான சாயாதேவி வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. ‘சாயா’ என்பதற்கு ‘நிழல்’ என்று பொருள். அதன் படியே சுவாமி சன்னிதியின் எதிரே சூரியன் பயணம் செய்ய, ஏழு குதிரைகளுடன் கூடிய பீடம் மட்டுமே அமைந்துள்ளது. சிலை வடிவம் இல்லை. இந்த ஐதீகத்தில் குண்டூர் சோழர்கள் ஆட்சியில் எழுப்பப்பட்டதுதான் இந்த பனகல் சாயா சோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
கி.பி. 1040 முதல் 1290-ம் ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ஆட்சி செய்த குண்டூர் சோழர்கள் காலத்தில், இங்கு எண்ணற்ற ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அதில் பனகலில் மட்டும் இரண்டு சிவாலயங்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்று சாயா சோமேஸ்வரர் திருக்கோவில். இது முக்கோண வடிவிலும், மூன்று கருவறை விமானங்கள், மூன்று பிரமிடு வடிவிலும் கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
களப்பிரர்கள் காலத்தில் தமிழகத்தில் இருந்து தெலுங்கு தேசத்திற்குச் சென்றவர்கள் சோடர்கள் எனும் தெலுங்குச் சோழர்கள். சிற்றரசர் களான இவர்கள் பொத்தப்பி, வெலநாண்டு, நெல்லூர் முதலிய இடங்களில் ஆட்சி செய்தனர்.
இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தெலுங்கு சிற்றரசர்களான இவர்களில் ஒருவரே குண்டூர் மாவட்டத்தில் ஆட்சி செய்த மகாமண்டலீசுவர பல்லய சோட மகாராஜா ஆவார். இவரின் வழிவந்தவர்களே குண்டூர் சோழர்கள் என கூறப் படுகிறது. இவர்கள் பனகலைத் தலைநகராகக் கொண்டு, நல்கொண்டா, மெகபூப் நகர் மற்றும் கம்பம் மாவட்டங்களில் ஆட்சி செய்து வந்தனர்.
பனகலில் கலைநயம் கொண்ட சாயா சோமேஸ்வரர் மற்றும் பச்சலா சோமேஸ்வரர் திருக்கோவில்கள் எழுப்பப்பட்டன. அதேபோல, விவசாயத்திற்காக உதய சமுத்திரம் என்ற பிரமாண்ட ஏரியும் உருவாக்கப்பட்டது.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக