Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 மே, 2020

கும்பகர்ணனின் ஆலோசனை!

கும்பகர்ணன், அரசே! சீதையை இராம இலட்சுமணரிடம் ஒப்படைத்து நல்லது செய்வாயாக! இல்லையேல் இராமன் நிச்சயம் நம்மை வெல்வான். அப்படி இல்லையேல் இதற்கு மற்றொரு வழியும் உண்டு. 

இராமனுக்கு முன்பு நாம் நம் அரக்க படைகளை அழைத்துக் கொண்டு இராமனிடம் போர் புரிந்து இராம இலட்சுமரையும், அவர்களுடன் இருக்கும் வானர படைகளையும் அழித்து விடலாம். 

இது தான் சரியான வழி என்றான். இப்படி கும்பகர்ணன் பேசியதை கேட்டு கோபங்கொண்ட இராவணன், அவன் கடைசியாக கூறிய ஆலோசனையை மட்டும் ஏற்றுக் கொண்டான். தம்பி கும்பகர்ணா! நீ நல்லது சொன்னாய். நாம் உடனே போருக்கு புறப்படுவோம். பகைவர் அனைவரையும் அழித்துவிட்டு திரும்புவோம். 

நம் படைகள் அனைவரையும் போருக்கு தயாராகும்படி கூறினான். அப்போது இந்திரஜித் எழுந்து, அரசே! புழுக்களை கொல்வதற்கு தாங்கள் செல்வதா? எனக்கு அனுமதி கொடுங்கள். நான் சென்று அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு வருகிறேன் என்றான்.

அப்போது இராவணனின் தம்பியான விபீஷணன் எழுந்து! மகனே, இந்திரஜித்! நீ சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறாய். நீ இன்னும் அரச நீதிகளை நன்கு உணரவில்லை. 

அனுபவம் உடையவர்கள் முடிவு செய்வதை நீ முடிவு செய்யலாமா? என்றான். விபீஷணன் இராவணனை பார்த்து, அண்ணா! எனக்கு தாய், தந்தை, அண்ணன், கடவுள் எல்லாம் நீங்கள் தான். 

உனக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் நான் இல்லை என்றாலும், இவர்கள் கூறிய ஆலோசனை அனைத்தும் தங்களுக்கு தீமை அளிக்கக்கூடியவை. ஆதலால் நான் சொல்வதை கோபப்படாமல் கேட்க வேண்டும். 

இலங்கையை ஒரு வானரம் தான் எரித்தது என தாங்கள் நினைப்பது தவறு. சீதையின் கற்பின் திறன் தான் இலங்கை நகரை எரித்துள்ளது. தாங்கள் அதனை நன்கு உணர வேண்டும். 

இதை நீங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் ஒருவனின் பெருமை இழப்பதற்கு காரணம் பெண்ணாகத் தான் இருக்கக் கூடும்.

அண்ணா! குரங்குகள் என்று நீ அலட்சியம் செய்வது தவறு. குரங்காகிய வாலியினால் நீ அடைந்த துன்பங்களை நினைத்துப் பார். அவர்கள் மனிதர்கள் தான் என அலட்சியம் செய்கிறீர்கள் தானே? கார்த்தவீர்யார்ஜுனன் உன்னை சிறை வைத்ததை மறந்து விட்டாயா? கார்த்தவீர்யார்ஜுனனை கொன்ற பரசுராமனை இராமன் வென்றதையும் நீ மறந்து விட்டாயா? இராம இலட்சுமணரை பகைப்பது உனக்கு தீங்கை விளைவிக்கும். 

உன் புகழும், உன் குலமும் அழிவதற்கு முன் நீ சீதையை இராம இலட்சுமணரிடம் ஒப்படைத்து விடு. அவ்வாறு செய்வது தான் உனக்கு நன்மை என்றான். இதைக் கேட்ட இராவணன், கோபத்தில் குலுங்க குலுங்க சிரித்தான். 

பிறகு இராவணன், என் வலிமையைப் பற்றி நீ அறிந்திருந்தும் அந்த மனிதர்கள் என்னை வெல்வார்கள் எனக் கூறுகிறாய். நீ அவர்களை பார்த்து பயப்படுகிறாயா? இல்லை அவர்கள் மீது அன்பு காட்டுகிறாயா? என்றான்.

இராவணன், வாலியை வலிமைமிக்கவன் எனக் கூறினாய். ஆனால் அவனிடம் போர் புரியும் எதிரியின் வலிமையை பாதி பெற்றவன் என்பதை மறந்து விட்டாயா? அவனிடம் யார் போர் புரிந்தாலும் அவன் அவர்களின் வலிமையை பாதி பெற்று விடுவான். 

இராமனும் வாலியை மறைந்து இருந்து தான் கொன்றான் என்பதை நீ மறந்து விட்டாயா? நீ மட்டும் தான் அந்த மனிதர்களுக்காக மனமிறங்கி பேசிக் கொண்டிருக்கிறாய். உன் பேச்சை கேட்பதில் ஒரு பயனும் இல்லை. ஆதலால் நான் போருக்கு செல்வது நிச்சயம். படைகளே போருக்கு செல்ல தயாராகுங்கள் என்றான். 

விபீஷணன் மறுபடியும் இராவணனிடம், அண்ணா! நான் சொல்வதை கேளுங்கள். ஒப்பற்ற திருமால் தான் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அரக்கர்களாகிய நம்மை அழிக்க அவதாரம் எடுத்து உள்ளான். ஆதலால் தாங்கள் போருக்கு செல்ல வேண்டாம் என்று இராவணனிடம் கெஞ்சிக் கேட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக