குறிஞ்சிப்பாடி அருகே நடந்த சாலை விபத்து மருத்துவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகாசி மாவட்டம், ஆலமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் ஆறுமுகம் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளானதில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அவர். சிவகாசியில் தொடர்ந்து 15 நாட்கள் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய ஆறுமுகம், தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்காக கடலூரில் உள்ள வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து அவர் தனது காரில் பணிக்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் அந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. கடலூரில் மாவட்ட பயிற்சி அதிகாரியாக இருந்த அவர், மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றவர். அதற்காகப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே அவர் சிவகாசி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இடம்மாற்றப்பட்டிருக்கிறார்; நெருக்கடியான பணி, தூரத்துப் பணியிடம் காரணமாகக் கடும் மன உளைச்சலில் இருந்ததாகச் சொல்கிறார்கள் அவரது மருத்துவ நண்பர்கள்.
பழிவாங்கும் நடவடிக்கை
அரசு மருத்துவர்களைப் பணியிட மாற்றம் செய்வது வழக்கமான ஒன்றுதானே என்ற கேள்வியும் எழலாம். முதலில், அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்குத் தண்டனையாகவே பணியிட மாற்ற நடவடிக்கைக்கு ஆளானவர்கள். இரண்டாவதாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு நிபுணர்களாகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவர்கள், வட்டார மருத்துவமனைகளில் சாதாரண சிகிச்சைப் பணிகளுக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மருத்துவப் படிப்புக்கு ஐந்தரை ஆண்டுகள், அதற்குப் பிறகு மேற்படிப்புக்கு 3 ஆண்டுகள், சிறப்பு நிபுணராவதற்கு மேலும் 3 ஆண்டுகள் என்று சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் ஆவதற்கு ஏறக்குறைய 12 ஆண்டுகள் படிக்கிறார்கள். மருத்துவப் படிப்பு முடித்ததும் கிராமப்புறக் கட்டாயச் சேவை இருக்கிறது, மேற்படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும். இப்படிப் பார்த்தால், 20 ஆண்டுகள் ஆகிவிடும். சிறப்பு நிபுணராவதற்கு இவ்வளவு ஆண்டுகள் செலவழித்தவர்களுக்கு அவர்களுக்கு உரிய பணியை வழங்காமல், இப்படி அலைக்கழித்து அவமதிப்பது அரசியல் அசிங்கமே அன்றி வேறில்லை.
பாதிக்கப்படும் மக்கள்
அரசின் பழிவாங்கும் நடவடிக்கையில் மருத்துவர்கள் மட்டுமில்லை, மக்களும் சேர்ந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சேலத்தில் பணியில் இருந்த இதய அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் இப்போது உதகமண்டலத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவர் சேலத்தில் இருந்தவரை சுற்றியுள்ள நான்கைந்து மாவட்டத்து மக்கள் பயனடைந்துவந்தார்கள். அவரது பணியிட மாற்றத்தால் சேலம் மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உதகமண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பயனில்லை. நலத் திட்ட உதவிகள் மட்டுமில்லை, கரோனா துரிதப் பரிசோதனை வரை தன்னுடைய சொந்த ஊரான சேலத்திலிருந்து தொடங்குவதுதான் முதல்வரின் வழக்கம். தன்னுடைய சொந்த மாவட்டத்து மக்கள் பாதிக்கப்படுவது அவரது கவனத்துக்குச் சென்று சேரவில்லையோ என்னவோ?
அரசு மருத்துவர்களுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்படும் ஊதியப் பட்டியல் 4-ஐ அவர்கள் 12 ஆண்டுப் பணிக்குப் பிறகே அளிக்க வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று. இந்த ஊதியப் பட்டியலை நடைமுறைப்படுத்தினால், அவர்களது ஊதியமாக ரூ.1,23,000 கிடைக்கும். அமெரிக்கா, பிரிட்டன் என்று வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பைத் தேடிச் சென்றால், மருத்துவர்கள் இதைவிடவும் பல மடங்கு ஊதியத்தைப் பெற முடியும் என்ற நடைமுறை யதார்த்தத்தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் தங்களை உருவாக்கிய மண்ணுக்கே சேவை செய்ய வேண்டும் என்றால், இந்த ஊதிய இழப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிலை இருக்கிறது.
மனது வைப்பாரா முதல்வர்?
ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து 2019 ஆகஸ்ட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தையும், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தையும் நடத்தினார்கள் மருத்துவர்கள். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சுகாதார அமைச்சர் வாக்குறுதி அளித்து, இரண்டு மாதங்களாகியும் அவற்றை நிறைவேற்றாததுதான் அக்டோபரில் அவர்கள் தொடங்கிய காலவரையற்ற போராட்டத்துக்கான காரணம்.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று உடனடியாகப் போராட்டம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படவில்லை. தண்டனை அளிக்கும் நோக்கத்தோடுதான் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, இடமாற்றத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும் பிப்ரவரி 28-ல் உத்தரவிட்டிருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஒருபுறமிருக்க, முதல்வர் தான் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார் அல்லவா?
மருத்துவர்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மாதம் ஒன்றுக்குக் கூடுதலாக ரூ.20 கோடி தேவைப்படும். கரோனாவையொட்டி ஓய்வுபெறும் மருத்துவர்களின் பணிக்காலத்தை நீட்டிக்கவும் 530 புதிய மருத்துவர்களை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறார் முதல்வர். ‘இவையெல்லாம் வரவேற்கத்தக்க முடிவுகள். அதைப் போலவே, 6 மாதங்களுக்கு முன்பு அவர் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை இப்போதாவது நிறைவேற்றுவாரா? கரோனா பரவும் என்ற அச்சத்தில் சிறைக் கைதிகளைக்கூட விடுவிக்கிறது அரசு. உயிரையும் பொருட்படுத்தாது சிகிச்சையளிக்கும் எங்கள் மீது கருணை காட்டி இடமாற்றத்தை ரத்துசெய்யக் கூடாதா?’ என்பது மருத்துவர்களின் எதிர்பார்ப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக