Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 மே, 2020

இராமர் இலங்கை அடைதல்!...

ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் ஜபம் செய்ய தொடங்கினார். 

நளன் என்னும் குரங்கு தான் எறியும் கற்கள் மூழ்காமல் மிதப்பதினால் விளையாட்டில் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த சாபத்தின் நன்மையால் தான், நளன் இடுகிற கற்கள் தண்ணீரில் மூழ்காமல் மிதக்கின்றன என்றார் ராமர். இவ்வாறு வானரங்கள் இரவு பகலாக வேலை செய்து ஐந்து நாட்களில் அணையைக் கட்டி முடித்தனர். 

அணை கட்டி முடிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் இராமர் அவர்களை கட்டி தழுவி பாராட்டினார். கட்டி முடித்த அணையின் அழகைக் கண்டு இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அதற்கு பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக வருண பகவான் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார். பிறகு அனைவரும் அங்கிருந்து இலங்கை நோக்கி செல்ல ஆயத்தமாகினர். வானரங்கள் பயணத்திற்கு தேவையான உணவு பொருட்களை சேகரித்து கொண்டனர். 

வானர சேனைகள் அணிவகுத்து புறப்பட்டன. சுக்ரீவனின் விருப்பப்படி அனுமன் இராமரையும், அங்கதன் இலட்சுமணரையும் தூக்கிக் கொண்டு சென்றான். இராமரும், வானர வீரர்களும் இலங்கை தீவை அடைந்தார்கள். அங்கு அவர்கள் ஒரு குன்றின் அடிவாரத்தில் தங்கினார்கள். சுக்ரீவனின் கட்டளைப்படி நளனும், நீலனும் தங்குவதற்கான பர்ணசாலையை அமைத்தனர். அன்றிரவு இராமர் சீதையை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது இராவணனால் ஏவப்பட்ட ஒற்றர்கள் சுகன், சாரணன் என்னும் இரண்டு அரக்கர்கள் இவர்களை அறிந்து கொள்ளும் வகையில் வானர உருவம் கொண்டு அங்கு வந்தனர். 

இவர்களை அடையாளம் கண்டுகொண்ட விபீஷணன், இவர்களை அடித்து, உதைத்து கயிற்றால் கட்டிக்கொண்டு இராமர் முன் நிறுத்தினான். 

இராமர், இவர்கள் வானரங்கள் என நினைத்து விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? இவர்களை ஏன் கயிற்றால் கட்டிக்கொண்டு வந்துள்ளாய்? என வினவினார். விபீஷணன், பெருமானே! இவர்கள் வானரங்கள் இல்லை. இராவணனால் ஏவப்பட்ட அரக்கர் குலத்தைச் சார்ந்த ஒற்றர்கள். 

இவர்கள் பெயர் சுகன், சாரணன். இவர்கள் நம்மை ஆராய்ந்து பார்க்க வந்துள்ளார்கள். உடனே அந்த ஒற்றர்கள், பெருமானே! நாங்கள் ஒன்றும் அரக்கர் குலத்தைச் சார்ந்த ஒற்றர்கள் இல்லை.

தங்கள் முன் நிற்கும் இந்த விபீஷணன் கபட நாடகமாடி தங்களை போரில் தோற்கடிக்க திட்டமிட்டுள்ளான். நாங்கள் உண்மையில் வானர வீரர்கள் என்று நாடகமாடினார்கள். 

விபீஷணன், இவர்களின் இந்த நாடகத்தை நிறுத்த ஒரு மந்திரத்தை உச்சரித்தான். பிறகு அவர்கள் சுய உருவத்தில் (அரக்க) தோன்றினார்கள். இவர்கள் இராவணனின் ஒற்றர்கள் என்பது உறுதியாகிவிட்டது என்றான் விபீஷணன். 

தன் சுய உருவத்தை பெற்ற அரக்கர்கள் இராமரை பார்த்து நடுங்கினார்கள். இராமர் அவர்களிடம், என்னை பார்த்து நீங்கள் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கு வருவதற்கான காரணம் என்ன என்று சொல்லுங்கள் என்றார். ஒற்றர்கள் இராமரை பார்த்து, வீரனே! சீதையை யாரும் இல்லாத நேரத்தில் கவர்ந்து வந்த இராவணனுக்கு அழிவு வந்துவிட்டது என்பதை உணராமல் தங்களை பற்றி வஞ்சனை செய்து ஒற்று பார்க்க அனுப்பினான் என்றார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக