திங்கள், 4 மே, 2020

ஒன்பதாம் நாள் போர்...!

பீஷ்மர், ஒன்பதாம் நாள் போரில் புதுமுறை அணிவகுப்பை மேற்கொண்டார். துரியோதனனை களத்தின் நடுப்பகுதியிலும், அலம்பசன் என்னும் அரக்கனும், பகதத்தனும் முன்னணியிலும் சர்வதோபத்திரம் என்ற முறையில் படைகளை நிறுத்தினார். 

பாண்டவர்கள் தங்கள் படைகளை திரிசூல வியூகமாக நிறுத்தினர். திரிசூலத்தின் மும்முனைகளிலும் சிறந்த வீரர்களான, அர்ஜுனன், திருஷ்டத்துய்மன், பீமன் ஆகியோர் நின்றனர். 

போர் தொடங்கியதும் அலம்பச அரக்கனுக்கும், பீமனுக்கும் போர் நடந்தது. அரக்கன் அலம்பசன் வாளை எடுத்துக்கொண்டு வாள் போருக்கு வருமாறு பீமனை அழைத்தான்.

பீமனும் வாளை எடுத்துக் கொண்டு அலம்பசனுடன் வாள் போருக்கு சென்றான். இருவருக்கும் நடந்த வாள்போரில் அலம்பசனுக்கு நிறையக் காயங்கள் ஏற்பட்டது. 

அதனால் அலம்பசன் வாள் போரை நிறுத்திவிட்டு மற்போருக்கு வருமாறு அழைத்தான். பீமனும் மறுக்காமல் சம்மதித்து அலம்பசனோடு மற்போருக்கு சென்றான். சிறிது நேரம் இருவருக்கும் கடுமையான மற்போர் நடந்தது. மற்போரிலும் அலம்பசனை பீமன் வென்றான். 

மீண்டும் திடீரென்று அலம்பசன் மற்போர் போதும்! வாள்போர் புரிவோம் என்றான். அலம்பசன் பீமனை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கக் கருதி மீண்டும் திடீரென்று வாள்போர் போதும் மீண்டும் மற்போர் செய்யலாம் என்றான்.

பீமனும் அதை ஏற்றுக்கொண்டு மற்போருக்கு சம்மதித்தார். மற்போர் நடந்து கொண்டிருக்கும் போதே போர் முறையை மீறி அலம்பசன் ஒரு பெரிய கல்லைத் தூக்கி பீமன் மேல் எறிந்தான். இதை அறிந்த அபிமன்யு இரண்டு மூன்று அம்புகளை அந்தக் கல்லின் மேல் தொடுத்து அதைத் தூள் தூளாக நொறுக்கிக் கீழே விழுமாறு செய்தான். 

இனிமேல் அலம்பசனை உயிரோடு விட்டால் பீமன் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று எண்ணி அபிமன்யு அலம்பசனோடு போர் புரிய ஆரம்பித்தான். அபிமன்யுவும் போரில் பல வீரர்களைக் கொன்றான். பாண்டவர்களும் அபிமன்யுவுக்கு துணையாக இருந்தனர்.

அபிமன்யுவிற்கும், அலம்பசனுக்கும் பெரும்போர் நடந்தது. மாயாவியான அலம்பசனின் அனைத்து மாயங்களும் அபிமன்யுவிடம் தோற்றது. எங்கும் இருள் சூழும்படி அம்பு மழை பொழிந்தான். 

அபிமன்யு மாற்றுப் படையால் மாயையை விலக்கி அலம்புசனைத் தாக்கினான். அபிமன்யு எறிந்த அம்பு அலம்பசனின் மார்பில் பாய்ந்தது. அலம்பசன் உடனே மயக்கம் அடைந்து கீழே மாண்டு வீழ்ந்தான். 

துரியோதனனின் நம்பிக்கை பெற்ற மாயாவியான அலம்பசன் தனது தேரினை இழந்து போர்க்களத்தில் வீழ்ந்தான். அன்றைய போரில் அபிமன்யு கௌரவ சகோதரர்களில் மேலும் மூவரை கொன்றான்.

பின்பு, சாத்தியகிக்கும், அசுவத்தாமனுக்கும் போர் நடந்தது. இருவரும் சரிசமமாக போர் புரிந்தனர். அசுவத்தாமன் எய்த அம்பு சாத்தியகியின் தேரின் சக்கரத்தை முறித்தது. 

பதிலுக்கு சாத்தியகியும் அசுவத்தாமனின் தேர் கொடியை அறுத்தான். அதனால் சினம் கொண்ட அசுவத்தாமன் சாத்தியகியின் குதிரைகளை காயப்படுத்தினான். அடுத்து துரோணரும், அர்ஜூனனும் போரில் ஈடுபட்டனர். 

அர்ஜூனன், போரில் துரியோதனனுக்குத் துணையாக வந்திருந்த பத்தாயிரம் அரசர்களைத் தோற்கடித்தான். அதனால் பீஷ்மர், அர்ஜூனன் மீது கடும் சினம் கொண்டார். 

சினம் கொண்ட அவர் தன் படைகளை அழைத்துச் சென்று போர் புரிய ஆரம்பித்தார். பின்பு பாண்டவர்கள் ஒன்று கூடிப் பீஷ்மரை எதிர்த்தனர்.

ஆனால் பீஷ்மரை போரில் வெல்ல முடியாமல் வருந்தினர். பீஷ்மரை எதிர்த்த பாண்டவர்களை விரட்டியடிக்க துரியோதனன், துச்சாதனனை அனுப்பினான். பாண்டவர் படையில் கடும் சேதத்தை பீஷ்மர் விளைவித்தார். 

கௌரவர்கள் அனைவரும் அழிந்தாலும் பீஷ்மர் ஒருவர் மட்டும் அவர்களை வெற்றி பெற செய்துவிடுவார் என்பதை பாண்டவர்கள் உணர்ந்தனர். சூரியன் மறைவுக்கு பின்னர் அன்றைய போர் முடிவடைந்தது. 

அன்றைய இரவு பாண்டவர்கள், கிருஷ்ணரிடம் நடைபெற்ற போரில் பீஷ்மரை வெல்ல முடியவில்லையே என்று வருத்தத்துடன் கூறினார்கள். பிறகு பீஷ்மரை வெல்வது குறித்து பீஷ்மரிடம் கேட்க முடிவெடுத்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

பீஷ்மர் அனைவரையும் அன்புடன் தழுவிக் கொண்டார். பிறகு அர்ஜூனன், பீஷ்மரிடம் போர் தொடங்குவதற்கு முன்பு உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று வாழ்த்தினீர்கள்.

ஆனால் தங்களை வென்றால்தானே எங்களுக்கு வெற்றி. தங்களை வெல்வது எப்படி என்று கேட்டான். அதற்கு பீஷ்மர் நான் போரில் புறமுதுகு காட்டி ஓடுபவரோடும், ஆயுதம் இல்லாதவரோடும், பெண்ணோடும், போரிட மாட்டேன். 

அப்போது என் ஆயுதம் பலனின்றி போய்விடும் என்றார். பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியை என் முன்பு நிறுத்தி நாளை என்னுடன் போரிடுங்கள். சிகண்டியின் முன்னாள் என் ஆயுதம் பலனின்றி போய்விடும். அப்போது நீங்கள் என்னை எதிர்த்துப் போரிட்டால் வெற்றி உங்களுக்கு தான் என்று கூறினார். 

பீஷ்மர் கூறியதை கேட்டவுடன் பாண்டவர்கள் அமைதியாகப் பாசறைக்குத் திரும்பினர். சிகண்டியை முன்னிறுத்த கிருஷ்ணர் திட்டம் வகுத்தார். தனது முடிவு நெருங்கி விட்டதை பீஷ்மர் உணர்ந்து மகிழ்ச்சியடைந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்