இந்தியாவில் கொரோனா
தொற்றை
தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில்
இருக்கிறது. தற்போது படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதில்
மதுபானங்கள் விற்கும் கடைகளும் அடங்கும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்
திறக்கப்பட்டு பின்னர் உயர்
நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டன. மற்ற
மாநிலங்களில் மதுபானங்கள் விற்க
பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில்
ஸொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் உதவியை
மகாராஷ்டிர அரசு
நாடியுள்ளது. நாசிக்,
புனே
உள்ளிட்ட நகரங்களில் இ-டோக்கன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஆப் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை டவுன்லோடு செய்து கொண்டு அருகிலுள்ள கடைகளில் இருந்து மதுபானங்களை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம். பின்னர் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அப்போது சென்று சம்பந்தப்பட்ட கடைகளில் மது வாங்கிக் கொள்ளலாம்.
இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தில் மதுக்கடைகள் முன்பு கூட்டம் குவிந்ததால் சரீர இடைவெளி என்ற உத்தரவு காணாமல் போனது. இதனால் மதுக்கடைகள் மூட அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இ-டோக்கன், டோர் டெலிவரி உள்ளிட்ட வழிமுறைகளை மாநில அரசு பின்பற்றத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநில அரசைப் பொறுத்தவரை கலால் வரி என்பது மூன்றாவது பெரிய வருவாய் ஆகும். ஒவ்வொரு பொருளின் விற்பனையிலும் குறிப்பிட்ட சதவீத கலால் வரி மாநில அரசின் வருவாய்க்கு செல்கிறது.
ஊரடங்கால் கடந்த இரு மாதங்களில் மட்டும் ரூ.1,800 கோடியை மாநில அரசு இழந்துள்ளது. இதுபற்றி மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நம்பகமான கம்பெனி மதுபானங்களை மட்டும் விற்பனை செய்வதில் அரசு கவனமாக இருக்கிறது.
இதற்கான டெலிவரி சார்ஜ் அதிகப்படியாக இருக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது. கலால் துறையின் விதிமுறைகளின்படி ஒரு நபர் அதிகபட்சமாக 12 லிட்டர் மதுபானங்களை மட்டுமே விற்பனைக்காக கொண்டு செல்ல முடியும்.
எனவே வெவ்வேறு ஆர்டர்களுக்காக அதிகப்படியான டெலிவரி பாய்ஸ்களை வேலையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மதுவாங்கும் நபர்கள் தங்கள் வயது, தங்கியிருக்கும் வீட்டின் முகவரி சான்று ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.
மதுபானங்கள் விநியோகம், டெலிவரி ஆகியவற்றை ரியல் டைமில் அரசு கண்காணிக்க இயலும் என்றார். மேற்கு வங்கம், பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஆன்லைனில் மதுபானம் விற்கும் 4வது மாநிலமாக மகாராஷ்டிரா இணைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக