Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 10 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 039

திருமூல நாயனார்...!!

கங்கையை தன் திருமுடியில் வைத்திருக்கும்... கங்கை வேணியன் வீற்றிருக்கும்... கையிலை மலையில் முதன்மை பெரும் காவலராக திகழ்பவர் நந்தியெம்பெருமான். நந்தியெம்பெருமானின் பரிபூரண அருளைப் பெற்ற நான்மறைச் சிவயோகியார் பலர் கையிலை மலையில் வாழ்ந்து கொண்டிருந்தனர். 

அவ்விதம் வாழ்ந்து வந்தவர்களில் சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் நான்மறைகளிலும், சிவாகமங்களிலும் வல்லவராய் மேம்பட்டு விளங்கினார். அந்த நாட்களில் அகத்திய முனிவரை பற்றி கேள்வியுற்றார். அன்று முதல் அகத்திய முனிவரை காண வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் மேம்பட துவங்கியது. ஒருநாள் சுந்தரநாதர் கையிலை நாதரை வணங்கி பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்திய முனிவரைக் கண்டு அவருடன் சில நாட்கள் தங்கி மகிழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தமது பயணத்தை துவங்கினார்.

திருக்கையிலாயத்தை விட்டு அகன்று பொதிகை மலையை அடைய திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி, ஸ்ரீசைலம், ஸ்ரீகாளஹஸ்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவதிகை, சிதம்பரம் வழியாக பயணத்தை மேற்கொண்டு அவ்விடங்களில் உள்ள எம்பெருமான் வீற்றிருக்கும் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்தார்.

திருவாவடுதுறையில் உள்ள தலமானது உமாதேவியார் பசுவினுடைய கன்றாக வடிவம் கொண்டு தவம் மேற்கொண்ட பெருமைமிக்க திருத்தலம் ஆகும். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருநாமம் பசுபதியார் என்பதாம். இங்கு காவிரியாறு ஓடிக்கொண்டு இருப்பதால் வளமையும், செழிப்பும் அமையப்பெற்று இருந்தது.

பழம்பெரும் புண்ணிய தலமான திருவாவடுதுறையை வந்து அடைந்த யோகியார் அங்கு எழுந்தருளியிருக்கும் பசுபதிநாதரை உள்ளம் மகிழ வணங்கினார். அத்திருத்தலத்தில் கிடைத்த மகிழ்ச்சியும், அமைதியும் அவரை ஆட்கொள்ள திருவாவடுதுறை தலத்தில் சில காலம் தங்கியிருந்து அனந்தனான பசுபதியாரை வழிபட்டு வந்தார்.

சாத்தனூர் என்னும் ஊரில் மூலன் என்ற இடையர் குலத்தினை சேர்ந்தவர் தன் குலத்திற்கு உண்டான தொழிலை செய்து வந்தார். அதாவது, அந்தணர்களின் வீட்டு ஆநிரைகளை மேய்த்து வரும் தொழிலை மிகவும் மகிழ்வுடனும், மனநிறைவுடனும் செய்து கொண்டு வந்தார். மூலன் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். இவர் பசுக்களை எவ்விதத்திலும் துன்புறுத்தாமல் ஆதவனின் அனல் கதிரில் மேய்ச்சலை மேற்கொள்ளாமல் தம்மால் இயன்றளவில் நிழல் உள்ள இடங்களில் ஆநிரைகளை மேய விடுவான். 

ஆநிரைகளை அன்புடனும், மிகவும் பாதுகாப்பாகவும் பேணிக்காத்து வந்தார். இந்த தொழில் மூலம் நல்ல ஊதியம் பெற்று தனது மனைவி, மக்களோடு மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள சிவதலங்களை வழிபட வேண்டும் என்ற எண்ணம் சுந்தரநாதரிடம் ஏற்பட அவ்விடம் விட்டு புறப்பட்டு காவிரியாற்றின் கரை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அன்றும் எப்போதும் போல மூலன் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டு இருந்தான். அந்த வழியாக சென்று கொண்டு இருந்தபோது ஆநிரைகள் காவேரி ஆற்றின் பசுமை வாய்ந்த இடத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் எழில்மிகு காட்சியைக் கண்டு சிவயோகியரான சுந்தரநாதர் தம்மை மறந்த நிலையில் நின்று அந்த அழகிய காட்சிகளை கண்டுக் கொண்டிருந்தார்.

அவ்வேளையில் எதிர்பாராத ஒரு நிகழ்வால் அவ்விடத்தில் இருந்துவந்த எழில்மிகு காட்சியானது மறைய துவங்கியது. பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த மூலனுக்கு ஆயுள் முடிந்திட மூலன் இறந்துவிட்டார். இறந்து போன மூலனின் சரீரத்தை சுற்றி பசுக்கள் கூடின. மூலன் இறந்ததை அறிந்ததும் பசுக்களின் விழிகளில் இருந்து கண்ணீர் வர துவங்கின. மூலனின் சரீரத்தை நாக்கால் நக்கியும், கொம்பினால் உராய்ந்தும் பசுக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தின. 

பசுக்கள் அழுது கொண்டு அங்குமிங்குமாக சுற்றித் திரிந்தன. இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் இக்காட்சியைக் கண்டதும் யோகியார் மூலனைப் பிரிந்து துன்பத்தில் வாடும் இப்பசுக்கூட்டம் இனி மேல் ஆகாரம் உட்கொள்ளாது. மூலனை போல்தான் அவன் மீது அன்பு கொண்ட பசுக்கள் இறந்து போகும். எம்பெருமானின் கருணையால் இப்பசுக்கூட்டத்திற்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை அகற்றுவேன் என்று தமது மனதிற்குள் எண்ணினார். 

சுந்தரநாதர் கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை அறிந்திருந்தமையால் தமது உடலில் இருந்து, மூலனின் உடலுக்கு தமது உயிரை கூடுவிட்டு கூடு பாய்த்து, ஆநிரைகளின் துன்பத்தை நீக்கியவுடன் மீண்டும் தமது கூட்டிற்கு வந்து விடுவோம் என்று எண்ணினார். பின் ஒரு பாதுகாப்பான இடத்தில் தமது உடலை பாதுகாத்து, கூடுவிட்டு கூடு பாயும் வித்தையால் இறந்து கிடந்த மூலனின் உடலில் தமது உயிரைப் புகுத்தினார். சுந்தரநாதரின் உயிரானது இறந்து கிடந்த மூலனின் உடலை வந்தடைந்ததும் உறக்கத்தில் இருந்தவன் போல் சட்டென்று கண் விழித்து மூலனாய் சுந்தரநாதர் எழுந்தார். மூலன் அவ்விடத்தில் எழுந்ததைக் கண்டதும் பசுக்கள் மிகவும் மகிழ்ந்து அவரது... உடலினை நக்கி முகர்ந்து... களிப்போடு காணப்பட்டன. 

மூலன் உருவத்தில் இருந்த சுந்தரநாதர் பசுக்கள் அடைந்த மகிழ்ச்சியை கண்டு மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். எப்போதும் போல பசுக்கள் வயிராற மேய்ந்து காவிரியாற்றில் இறங்கி அங்கு ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரை பருகிவிட்டு கரையேறி பின்பு வழக்கம் போல் அவற்றின் ஊரான சாத்தனூரை நோக்கி நடக்க ஆரம்பித்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற மூலனாய் இருந்த சுந்தரநாதர் மேய்ச்சல் முடித்துக்கொண்ட ஒவ்வொரு பசுவும் அவரவர்களின் உரிமையாளர்களின் வீடுகளில் சேர்த்துவிட்டார். 

ஆநிரைகளை அவரவர்களின் இல்லங்களில் சேர்த்த மூலன் மட்டும் தன்னுடைய இல்லத்திற்கு செல்லாமல் தனியாக அமர்ந்து, என்ன செய்வது? என்று சிந்தித்து கொண்டிருந்தார். ஏனெனில் தன்னுடைய ஞானப்பார்வையால் மூலனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை அறிந்து கொண்டார். பொழுது சாய்ந்து வெகு நேரமாகியும் தனது கணவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று எண்ணி மூலனின் மனைவி தனது கணவரைத் தேடி புறப்பட்டாள். 

அவ்விதம் சென்று கொண்டிருந்த வழியில் ஓரிடத்தில் தன்னந்தனியாக தனது கணவர் அமர்ந்திருப்பதை கண்டு வியப்புற்று அவள் அருகில் சென்று ஏன்? என்னவாயிற்று? தனியாக இவ்விடத்தில் அமர்ந்து இருக்கின்றீர்களே...! என்று வினாவினாள். ஆனால் மூலன் உடலில் இருந்த சுந்தரநாதர் எவ்வித பதிலும் உரைக்காமல் அமைதியுடன் இருந்து கொண்டிருந்தார். இதை கண்டதும் மூலனின் மனைவி தங்களுக்கு என்னவாயிற்று? ஏன் எதுவும் பேசாமல் அமைதியுடன் அமர்ந்துள்ளீர்கள்?. வாருங்கள் நாம் வீட்டிற்கு செல்வோம் என்று மூலனின் கரங்களை பிடிக்க மூலனின் மனைவியார் முயற்சி செய்தார்.

மூலன் மனைவியாரின் முயற்சியை அறிந்ததும் மூலன் உருவத்தில் இருந்த சுந்தரநாதர் அம்மையாரின் செய்கையை கண்டு கையில் இருந்து விலகி பின்நோக்கி சென்றார். இதை கண்டதும் மூலனின் மனைவியருக்கு மனதில் ஒருவிதமான பயமும், அச்சமும் அவ்விடத்தில் ஏற்படத் துவங்கியது.

மூலனின் மனைவியோ தன் கணவரிடம் தங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் இப்படி என்னை விட்டு விலகி செல்கிறீர்கள்? என்று மன வருத்தத்தோடு கேட்டாள். மூலன் உடலில் இருந்த சுந்தரநாதர் மூலனின் மனைவிடம் இனி என்னால் உன் வீட்டிற்கு வர இயலாது. உமக்கும், எமக்கும் இனி மேற்கொண்டு எவ்வித உறவும் இல்லை. ஆகையால் நீர் திருத்தலம் சென்று எம்பெருமானை வழிபட்டு அமைதி கொள்வாயாக... என்று கூறியதுடன், அவ்விடத்தில் நிற்க மனமில்லாத சிவயோகியார் அத்தலத்திலுள்ள திருமடம் ஒன்றுக்குச் சென்று சிவயோகத்தில் அமர்ந்தார்.

கணவரின் இந்த நிலையைக் கண்டதும் அவருக்கு என்னவாயிற்று... ஏன்...? இவ்விதம் நடந்து கொள்கிறார் என்று எதுவும் புரியாமல் மனதில் இனம் புரியாத கவலையோடு வீடு திரும்பினாள். அன்று இரவெல்லாம் தன் கணவரின் நிலையை எண்ணி ஆறாத்துயரம் கொண்டாள். மறுநாள் பொழுது விடிந்ததும் தமது சுற்றத்தாரை அழைத்துக்கொண்டு தம் கணவர் இருக்குமிடத்திற்கு வந்தாள்.

யோக நிலையில் அமர்ந்திருக்கும் மூலனை கண்டதும் வந்தவர்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர். ஏனென்றால் இதுவரை தாங்கள் கண்ட மூலன் முகத்தினைவிட இன்று அவர்கள் காணும் முகத்தில் பொலிவும், பிரகாசமும் பெற்று ஆச்சர்யம் அடைந்தனர். இவரிடம் இந்த நிலையில் பேசி எவ்விதமான பயனும் இல்லை என்பதை வந்தவர்கள் அறிந்திருந்தாலும் அவருடைய மனைவிக்காக மூலன் உடலில் இருந்த சுந்தரநாதரிடம் தங்கள் வாதங்களை தொடர்ந்தனர்.

அவர்களுடைய வாதமானது மூலனின் உடலில் இருந்த சுந்தரநாதரிடம் எடுபடாமல் போகவே... இனியும் இவரிடம் பேசி எவ்வித பயனும் இல்லை என்பதை உணர்ந்த மூலனின் சுற்றத்தார், மூலனின் மனைவியாரிடம் சென்று இனி உன் கணவன் முற்றும் துறந்த முனிவரைப் போல அனைத்து பந்த, பாசங்களையும் துறந்து... பற்றற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார். இனி உன் கணவனிடம் வாழ வேண்டும் என்று நினைத்தால் அது இயலாத காரியம் ஆகும் என்றனர். மூலனின் சுற்றத்தார்கள் இனி இவரிடம் பேசி எவ்வித பயனும் உனக்கும், எங்களுக்கும் ஏற்படப்போவதில்லை. ஆகவே அவன் பாதங்களில் விழுந்து ஆசிப்பெற்று இல்லத்திற்கு செல்வாயாக என்றனர்.

மூலனின் சுற்றத்தார்கள் மூலனின் மனைவியிடம் ஆறுதலும், நிகழ்ந்த உண்மையையும் எடுத்துரைத்தனர். அவர்கள் உரைத்ததைக் கேட்ட மூலனின் மனைவி என்னவனுக்கு என்னவாயிற்று...? என்று புரியாமல் தனக்குள் எண்ணியவாறே அவரது பாதங்களில் விழுந்து வணங்கி மனவருத்தத்தோடு வீடு திரும்பினாள். 

தம்மை காண வந்தவர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு சென்றவுடன் மறைத்து வைத்திருந்த தமது உடலை தேடி அவ்விடத்திற்கு சென்றார். ஆனால் அவ்விடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த அவரது உடல் அங்கு இல்லாததை கண்டு வியப்புற்றார். மீண்டும் யோக நிலையில் அமர்ந்து தமது மேனியைப் பற்றிய உண்மைப் பொருளை அறிய எண்ணம் கொண்டார்.

தம்மிடம் இருக்கும் தவ வலிமையால் சிவபெருமான் ஆதிகாலத்திலேயே தோற்றுவித்த காமிக முதலிய சைவ ஆகமங்களில் பேசப்பட்ட மெய்ப்பொருளை தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு பயன்படும் பொருட்டுத் தமிழினாலே ஒரு நூல் இயற்றும் பொருட்டு தம்முடைய சரிதத்தை மறைத்தருளினார் என்பதை உணர்ந்து கொண்டார். 

அவ்விதத்தில் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணம் கொண்டார் மூலன் உடலில் இருந்த சுந்தரநாதர். சாத்தனூரிலிருந்து புறப்பட்டவர் மீண்டும் திருவாவடுதுறையிலுள்ள கோமுத்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்து மூலவர் பெருமானைப் பணிந்துவிட்டு திருத்தலத்திற்கு வெளியே மேற்கு பக்கமாக அமைந்துள்ள அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகம் செய்யத் தொடங்கினார். அன்று முதல் மூலன் திருமூலர் என்று அழைக்கப்பட்டார். சிவயோகத்தில் நிலைத்து நின்று பெருமானுடன் ஒன்றி உணர்வு மயமாய்த் திகழ்ந்தார்.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் கண் விழித்து ஒரு பாடல் எழுதிவிட்டு மீண்டும் தியானத்தில் இருப்பார். இவ்வாறாக மூவாயிரம் ஆண்டுகள் தியானம் செய்து, உலகோர் பிறவி துன்பத்திலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் மூவாயிரம் பாடல்களாக வழங்கினார். மூவாயிரம் பாடல்கள் முதலில் 'தமிழ் மூவாயிரம்" என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது. 

பிற்காலத்தில் வந்த சான்றோர்கள் அதன் உட்பொருளை அறிந்ததும் அதை 'திருமூலர் அருளிய திருமந்திரம்" என்று மாற்றி வைத்தார்கள். இவ்விதம் உலகோர் உய்யும் பொருட்டு திருமந்திர மாலையை அருளிய திருமூல நாயனார் நெற்றிக் கண்ணனாருடைய பொற்றாமரை பாதங்களை பற்றிக் கொள்ளும் ஒப்பற்ற பெருவாழ்வைப் பெற்று உய்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக