Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 043

சண்டேசுவர நாயனார்...!!

சோழ நாட்டில் பல வளமைமிக்க ஊர்கள் இருந்தாலும் திருச்சேய்ஞலூர் என்னும் ஊர் முக்கிய ஊராக திகழ்ந்தது. திருச்சேய்ஞலூரை சோழர்கள் தங்களின் தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்தார்கள். முன்னொரு காலத்தில் தாம் பெற்ற வரத்தினால் கிடைத்த சக்தியினால் அமரர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தி வந்தவர் சூரபதுமன் என்னும் அசுரன். இவ்வசுரனை போன்ற அரக்கர்களை வென்று தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தில் இருந்து அவர்களை காப்பாற்றினார் முருகப்பெருமான்.

மேலும் அமரர்களும், பூதகணங்களும் வழிபட காவிரியாற்றின் சிற்றாரான மண்ணியாற்றின் கரையை அடைந்து அங்கு அழகிய நகரத்தை உருவாக்கினார் முருகப்பெருமான். தாம் உருவாக்கிய அந்த நகரில் கந்தவேல், சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவ வழிபாடு செய்தார். சேய் (முருகன்) சிவபூஜை செய்த காரணத்தால் இந்த ஊர் திருச்சேய்ஞலூர் என்னும் பெயரை பெற்றது. இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த அழகிய ஊரில் பல அந்தணர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவ்விதம் வாழ்ந்து வந்த அந்தணர்களில் ஒருவர்தான் எச்சத்தன். அவரது துணைவியாரின் பெயர் பவித்திரை. எச்சத்தன், பவித்திரை தம்பதியரின் அன்புக்கு பரிசாக பிறந்தவர் விசாரசருமர்.

தம்பதியர்கள் தமது குழந்தையை மிகவும் அன்புடன் வளர்த்து வந்தார்கள். பொழுதொரு மேனியாக வளர்ந்து வந்த விசாரசருமர் ஐந்து வயதை அடைந்தார். இவர் முற்பிறவிலேயே வேத ஆகாமங்களை கற்று, தேர்ச்சி பெற்று இருந்தார். அந்த உணர்வின் தொடர்பினால் இப்பிறவியிலும் வேத ஆகாமங்களில் உள்ள உட்பொருள்களை அறிந்து கொள்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவற்றில் திறமையும் பெற்று விளங்கினார். ஆதவன் உதிக்கும் பொழுது வெளிப்படும் கதிர்கள் காலம் அதிகரிக்க அதிகரிக்க கதிரின் வேகமும், வெளிச்சமும் அதிகமாவது போல் சிறுவயதில் இருந்து அவரிடம் இருந்துவந்த சிவாகம உணர்ச்சியானது வயது அதிகரிக்க அதிகரிக்க வெளிப்பட துவங்கியது. இவரது சிந்தையில் எப்போதும் சிவனுடைய பொற்பாதம் மட்டுமே இருந்தது.

அந்தணர்களின் குலப்படி விசாரசருமருக்கு ஏழாண்டுகள் நிரம்ப பெற்ற உடன் அவரது பெற்றோர்கள் அவருக்கு உபநயனம் செய்து மகிழ்ந்தார்கள். விசாரசருமருக்கு அவர்களின் குல தர்மத்தின்படி வேதம் ஓதுவித்தார்கள். விசாரசருமருக்கு வேதம் ஓதுவித்த குருவே இச்சிறுவயதில் இவ்வளவு ஞானமா? என்று வியக்கும்படி அவரிடம் கற்ற மாணவர்களிலேயே சிறந்த மாணவனாக தேர்ச்சி பெற்றார். ஒரு நாள் விசாரசருமர் தம்முடன் வேதம் கற்கும் சக நண்பர்களுடன் மண்ணியாற்றின் கரை ஓரமாக சென்று கொண்டிருந்தார்.

மண்ணியாற்றின் கரை ஓரத்தின் அருகில் பசுமாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன. ஒரு சிறுவன் அவ்விடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு பசுக்களை ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவ்வேளையில் எதிர்பாராத விதமாக பசு ஒன்று அச்சிறுவனைக் கொம்பினால் முட்டியது. அதனால் கோபமுற்ற அச்சிறுவன் தன்னிடம் இருந்த கோலினால் அந்தப் பசுவை தன் கோபம் தீரும் வரை அடித்துக் கொண்டே இருந்தான். இக்காட்சியைக் கண்டதும் விசாரசருமர் அதிர்ச்சி அடைந்தார்.

இளகிய மனம் கொண்ட விசாரசருமர் இக்காட்சிகளை விழிகளால் பார்க்க இயலாமல் சிறுவனிடம் விரைந்து சென்றார். பசுவினை அடிக்காத வண்ணம் அவன் கரங்களை பிடித்து பசுவின் மகிமையை பற்றி கூறத் துவங்கினார். அதாவது, இறைவன் படைத்த இந்த உலகில் இருக்கும் உயிர்களில் மிகவும் உயர்ந்தது ஆவினங்கள்தான். சிவபெருமானை நினைத்து நெற்றியில் தரிக்கும் விபூதியை நாம் ஆவினங்களிடம் இருந்துதான் பெறுகிறோம். எம்பெருமானின் அபிஷேகத்தில் பஞ்சகவ்யம் அளிப்பதும் ஆவினங்கள்தான்.

எம்பெருமானும், தேவியாரும் எழுந்தருளும் காமதேனு ஆவினங்கள் குலமாயிற்றே. பால், தயிர், நெய் என்று மனிதர்களுக்கு அள்ளித்தருவதும் இவைதானே. இவ்வளவு ஏன் பசுக்களின் அங்கங்களில் முனிவர்களும், தேவர்களும் வசிப்பதாக கூறுகிறார்களே... அவற்றைப் போற்றி பாதுகாக்காமல் இப்படியொரு காரியத்தை செய்யலாமா? இத்தகைய தெய்வத்தன்மை கொண்ட ஆவினங்களுக்கு இன்னல்கள் நேரிடாத வண்ணம் பாதுகாப்போடு மேய்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். ஆவினங்களைக் காப்பது எம்பெருமானுக்கு செய்யும் அருந்தொண்டாற்றுவது போல் அல்லவா? உமக்கு இந்த பணியை செய்ய விருப்பம் இல்லை என்றால் இனிமேல் இந்த பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை தாமே பார்த்துக் கொள்கிறோம் என்று உரைத்தார்.

இவ்விதம் விசாரசருமர் ‌மொழிந்‌ததை கேட்டதும் ஆவினங்களுக்கு தான் இழைத்த பிழையை எண்ணி அச்சம் கொண்ட சிறுவன் விசாரசருமரிடம் தான் செய்த தவறுகளை மன்னிக்கும் வண்ணம் வணங்கி பசுக்களை மேய்க்கும் பணியை அவரிடமே விட்டு அகன்றான். மறையவர்களிடம் தானே முன் சென்று பசுக்களை மேய்க்கப் போகும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக உரைத்து அதற்கான ஒப்புதல்களையும் அவர்களிடம் இருந்து பெற்றார். நாள்தோறும் விசாரசருமர் தன் கரங்களில் ஆவினங்களை வழி நடத்துவதற்காக கோலும், கயிறும் ஏந்திக்கொண்டு மண்ணியாற்றின் கரைப்பகுதில் உள்ள பசுமையான புற்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்று ஆவினங்களை மேய விடுவார்.

ஆவினங்களுக்கு எவ்விதமான தீங்கும் நேரிடாத வண்ணம் கண்ணும், கருத்துமாக அதாவது... பெற்றோர்கள் தான் பெற்ற குழந்தை செல்வங்களை எவ்விதத்தில் காப்பார்களோ அவ்விதத்தில் கோகுலங்களை காத்து வந்தார் விசாரசருமர். இவர் ஆவினங்களின் மீது கொண்ட அன்பை புரிந்து கொண்ட ஐந்தறிவு படைத்த ஜீவன்கள் இவரின் அன்பிற்கு கட்டுபட்டு அவருடன் அன்பாக பழகின. பசுக்களை மேயவிட்டு மர நிழலில் தங்கி சிறிது நேரம் நிம்மதியாக படுத்து இளைப்பாறுவார் விசாரசருமர். பொழுது சாயும் வேளை வந்ததும் தமக்கு வேண்டிய அளவில் விறகுகளை எடுத்துக்கொண்டு ஆநிரைகளுடன் வீட்டிற்குப் புறப்படுவார்.

ஆநிரைகளை மேய்க்கும் பணிகளை மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுப்புடனும் செய்து வந்தார். விசாரசருமரின் பராமரிப்பில் இருந்துவந்த பசுக்கள் முன்பு இருப்பதைக் காட்டிலும் நல்ல வளமையோடு இருந்து வந்தன. அது மட்டுமின்றி முன்பு இருந்ததை விட அதிகமாக பாலையும் சுரந்தன. ஆநிரைகளான அவைகள் விசாரசருமரின் மீது அன்பு கொண்டு அவரின் அருகில் அடிக்கடி சென்று அவரை உராய்வதும், நாவால் நக்கிக் கொடுப்பதுமாக இருந்தன.

சில சமயங்களில் புல் மேயும் இடத்தில் நிழல் இல்லாமல் விசாரசருமர் வெயிலில் நின்று கொண்டிருந்தால் ஆநிரைகள் கூட்டமாகச் சென்று அவரின் அருகில் நின்று அவருக்கு உட்காருவதற்கான நிழலைத் தரும். நாளடைவில் விசாரசருமரைப் பார்த்ததும் எவ்விதம் கன்றைக் கண்ட தாய்பசு தன் கன்று அருந்துவதற்காக பால் சுரப்பது போல ஆவினங்கள் பால் பொழிந்தன. தம்மீது கொண்ட அன்பினால் பசுக்கள் பால் பொழிவதைக் கண்ட விசாரசருமர் எவரும் அருந்தாமல் வீணாகும் அப்பாலை நாம் ஏன் எம்பெருமானின் வழிபாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என்று எண்ணினார்.

மரங்கள் பல நிறைந்து இருந்தாலும் குளுமையான நிழல் எம்பெருமானுக்கு வேண்டும் என்பதை உணர்ந்து இருந்த விசாரசருமர் அத்திமரம் ஒன்றை அவ்விடத்தில் கண்டார். அம்மரத்தின் நிழல் தன்மையை அறிந்து இருந்தமையால் எம்பெருமானுக்கு அவ்விடத்தில் கோவில் ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார். மண்ணியாற்றங்கரை ஓரத்திலிருந்து கோவில் அமைப்பதற்காக நல்ல மணலைக் கொண்டு வந்து லிங்கம் ஒன்றை வடிவமைத்தார். தாம் கட்டிய கோவிலுக்கு ஆற்றங்கரையில் இருந்து எடுத்து வந்த மணலை கொண்டு மதிற்சுவர்களை எழுப்பி சிறு கோபுரங்களுடன் கூடிய சிறிய ஆலயத்தை அழகுற வடிவமைத்தார்.

கோவிலை சுற்றி நறுமண செடிகளையும், கொடிகளையும் கொண்டு எழில்மிகு தோற்றமாக அழகுப்படுத்தினார். தாம் எம்பெருமானுக்காக கட்டிய கோவிலையும், அக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தையும் கண்டு அவர் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லையில்லாத வகையில் இருந்தது. எம்பெருமானை காண காண அவரின் உள்ளத்திலும், உடலிலும் எம்பெருமானின் மீதான பக்தி அதிகரிக்க துவங்கியது. அவரின் மனமும் மகிழ்ச்சி கொள்ள துவங்கியது.

மகிழ்ச்சியான தருணத்தில் எம்பெருமானுக்கு பூஜையும், அபிஷேகமும் செய்ய வேண்டுமென்று எண்ணினார் விசாரசருமர். சிறிது நேரத்திற்குள் எம்பெருமானின் பூஜைக்கு தேவையான நறுமணம் கொண்ட மலர்களையும் பறித்துக்கொண்டு வந்தார். அபிஷேகம் செய்வதற்கு பசுக்கள் சுரந்த பாலை சேமித்தார். வேதங்கள் ஓதி லிங்க வடிவமாக காட்சியளித்து கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு பாலை கொண்டு அபிஷேகம் செய்து, நறுமண மலர்களை கொண்டு பூஜை செய்தார்.

விசாரசருமர் தம் சக்திக்கு இயன்ற அளவில் எம்பெருமானுக்காக ஒரு சிறிய கோவிலை நிறுவி அவ்விடத்தில் லிங்கத்தை அமைத்து வழிபட்டார். தாம் மேற்கொண்ட இந்த வழிபாடு எந்த வகையிலும் தடைபடாமல் இருக்கும் வகையில் நாள்தோறும் பூஜையும், அபிஷேகமும் தவறாமல் நடந்த வண்ணமாக இருந்தது.

விசாரசருமர் எம்பெருமான் வடிவில் இருக்கும் லிங்கத்திற்கு செய்து வந்த அபிஷேகமான பாலும், அர்ச்சனை செய்யும் மலரும் எம்பெருமானின் பாதங்களை அடைந்தது. பல வருடங்களாக தவம் மேற்கொள்ளும் பல தவசிகளுக்கும், முனிவர்களுக்கும் கட்டுப்படாத எம்பெருமான் தம் மனம் முழுவதும் தன்மீது அன்பு கொண்டு வழிபாடு செய்து வந்த விசாரசருமருக்கு கட்டுப்பட்டார். பெரிய பெரிய திருத்தலங்களில் எழுந்தருளியிருந்த எம்பெருமான், மண்ணியாற்றங்கரையிலுள்ள தம்மீது அன்பு கொண்டு தம்மை சிந்தையில் எண்ணி தமக்காக கட்டிய இச்சிறு மண்கோவிலிலும் எழுந்தருளினார்.

எம்பெருமானின் வழிபாட்டிற்காக பால் சுரக்கும் ஆநிரைகளும் வளமோடு வளர்ந்து வந்தன. அவைகள் வீட்டிற்குச் சென்ற பிறகும் கூட முன்னைவிட அதிகமாகவே பாலை சுரந்தன. இதனால் பசுக்களின் உரிமையாளர்களும் மனம் மகிழ்ச்சி கொண்டனர். எப்போதும் போல அன்றும் எம்பெருமானுக்கு பூஜை செய்வதற்காக மலர்களையும், அபிஷேகத்திற்கு தேவையான பாலையும் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தார்.

அவ்வேளையில் அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒருவர் இச்சிறுவனின் செயல்களை கண்டதும் வித்தியாசமாக இருப்பதாக எண்ணி இச்சிறுவன் என்ன செய்யபோகிறான் என்பதை காண மறைவாக இருந்து கவனித்துக் கொண்டிருந்தார். இதை பற்றி எதையும் அறியாத விசாரசருமர் வழக்கம்‌போல் தான் சேகரித்து வைத்திருந்த பாலை லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்வதும், பறித்து வந்த மணம் மிக்க மலர்களைக் கொட்டி அர்ச்சனை செய்வதுமாக இருந்தார். சிறுவனின் இச்செயலைக் கண்டதும் கோபம் கொண்டு பூஜை செய்து கொண்டிருந்த விசாரசருமரிடம் விரைந்து வந்தார்.

விசாரசருமரிடம் விரைந்து வந்து என்ன காரியம் செய்து கொண்டு இருக்கிறாய்? உன் மீது நம்பிக்கை கொண்டு மாடு மேய்க்க அனுப்பினால் நீயோ பசுவின் பாலை எல்லாம் வீணாக்குகிறாயே... என்று சினத்தில் பலவிதமான கேள்விகளை அடுக்க துவங்கினார் அந்த நபர். ஆனால் அவருடைய கேள்விகளுக்கு எவ்விதமான பதிலையும் உரைக்காமல் எம்பெருமானின் மீது பக்தியில் திளைத்திருந்தார் விசாரசருமர்.

அவருடைய கேள்விகளுக்கு பதில் ஏதும் உரைக்காமல் அமைதியாக அமர்ந்து வழிபாடு செய்து கொண்டிருந்தார் விசாரசருமர். தம்முடைய கேள்விகளுக்கு பதில் உரைக்காத விசாரசருமரை பார்க்க பார்க்க அவருக்கு கோபம் தலைக்கு ஏறியது. இனியும் பொறுமை காத்தல் கூடாது. உடனே ஊருக்குள் சென்று பசுவின் உரிமையாளர்களிடம் சென்று தான் மண்ணியாற்றின் கரையி‌ல் கண்ட காட்சியைப் பற்றி கூற வேண்டுமென எண்ணம் கொண்டு அவர்களிடம் கூறினார்.

வந்தவன் கூறியதை கேட்டதும் பசுவின் உரிமையாளர்களுக்கு விசாரசருமரின் மீது சினம் பொங்கியது. பசுவின் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விசாரசருமரின் தந்தையான எச்சத்தனை நேரில் சென்று உங்கள் மகன் செய்து கொண்டிருக்கும் காரியம் முறையானதல்ல. உங்கள் மகனுக்கு தகுந்த புத்திமதி கூறுமாறு ஆத்திரத்தோடு உரைத்தனர். இதனால் எச்சத்தன் கடும் கோபம் கொண்டிருந்தாலும் வந்தவர்கள் முன்னிலையில் எதையும் காட்டாமல் தம் மகனைக் கண்டிப்பதாகச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

மறுநாள் தம் மகனின் செயல்களை கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். மறுநாள் எப்போதும் போல காலை முதலே விசாரசருமர் வழக்கம்‌போல் ஆவினங்களை ஓட்டிக்கொண்டு மண்ணியாற்றின் கரைக்கு சென்று கொண்டிருந்தார். எச்சத்தன் தன் மகன் அறியாத வண்ணமாக அவருக்கு பின்னால் தொடர்ந்து சென்றார். மண்ணியாற்றின் கரையை அ‌டைந்த எச்சத்தன் கரையின் ஓரத்தில் இருந்துவந்த ஒரு மரத்தின் மீது ஏறி மறைவாக அமர்ந்து கொண்டார்.

விசாரசருமர் எப்போதும் போல் மண்ணியாற்றில் நீராடி எம்பெருமானின் மந்திரமான நமசிவாய மந்திரத்தை மனதில் ஜெபித்து, நெற்றியில் திருவெண்ணீறு பூசிக்கொண்டும், நறுமணம் மிக்க மலர்களை பறித்துக் கொண்டும், பச்சிலைகளையும் பறித்துக் கொண்டும், அபிஷேகத்திற்கு தேவையான பாலையும் பசுக்களில் இருந்து பெற்றுக் கொண்டு தம் அருகில் வைத்துக் கொண்டார்.

விசாரசருமர் மண்ணால் லிங்கம் ஒன்றை செய்தார். தாம் பறித்து வந்த மலர்களை இறைவனுக்கு சூடி வழிபட துவங்கினார். விசாரசருமர் பக்தியில் ஈடுபட்டு தம்மை மறந்து எம்பெருமானின் சிந்தனைகளில் மூழ்கி இருந்தார். மகனின் செயலை கண்டதும் எச்சத்தனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கோபத்தினால் அறிவை இழந்த எச்சத்தன் மரத்தின் குச்சியை ஒடித்து விசாரசருமரின் முதுகில் பலமாக தாக்க தொடங்கினார். பக்தியில் இருந்த விசாரசருமர் எதையும் உணரும் நிலையில் இல்லை.

விசாரசருமரின் மீது இருந்த கோபத்தில் எச்சத்தன் வசை சொற்கள் பேச தொடங்கினார். அவர் பேசிய பேச்சுக்கள் ஏதும் விசாரசருமரின் காதில் விழவில்லை. விசாரசருமர் தந்தையின் இடையூறுகளை சற்றும் உணராத நிலையில் பூஜையைத் தொடர்ந்து செய்தார். எச்சத்தனுக்கு மகனின் செயல் மேலும் ‌‌கோபத்தை உண்டு பண்ணியது. கோபத்தில் தாம் என்ன செய்கிறோம்? என்று தெரியாமல் பால் நிரப்பி வைத்திருந்த குடங்களை காலால் உதைத்துத் தள்ளினார்.

அதுவரை பக்தியில் ஆழ்ந்திருந்த விசாரசருமருக்கு தன் தந்தையின் செயல் கடுங்கோபத்தை வரவழைத்தது. தன்னுடைய வழிபாட்டிற்கு தடையாகவும், அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாலை உதைத்தது தந்தைதான் என்பதை உணர்ந்ததும் சிவ அபவாதம் செய்த அவரைத் தண்டித்தார். அதாவது, அருகே கிடந்த கோலை எடுத்து குடங்களை உதைத்துத் தள்ளிய தந்தையின் கால்களை நோக்கி வீசினார். அக்கணமே கோலும் மழுவாக மாறியது. எச்சத்தன் இரண்டு கால்களையும் வெட்டப்பட்ட நிலையில் நிலத்தில் விழுந்து உயிரை இழந்தார்.

நடந்ததை எதுவும் அறியாமல் மீண்டும் லிங்கத்தை பூஜிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார் விசாரசருமர். அவ்வேளையில் வான்வெளியில் ஒரு போராளி பிறந்தது. அவருடைய பக்தியில் கட்டுப்பட்ட சிவபெருமான் உமையாளோடு விடையின் மேல் எழுந்தருளினார். விசாரசருமர் பரமனின் காட்சியை கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்தார். இரு கரங்களையும் கூப்பி நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்தார்.

வான்வெளியில் எழுந்து அருளிய எம்பெருமானும், பார்வதி தேவியாரும் மண்ணுலகத்தில் எழுந்தருளி விசாரசருமரை வாரி அணைத்து... அன்பு மேலிட... மகனே...! என் மீது கொண்டுள்ள பக்தியால் தவறு செய்தவர் உம்மை ஈன்றவராக இருந்தபோதும் மழுவால் வீழ்த்திய உன் எல்லையில்லா பக்திக்கு யாம் கட்டுப்பட்டோம். உமக்கு இனி நானே தந்தை, நானே தாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். எம்பெருமான் கூறியதைக் கேட்டதும் எல்லையில்லா பேரானந்தம் கொண்டார் விசாரசருமர்.

ஆனந்தம் கொண்ட மகிழ்ச்சியாலே விழிகளில் இருந்து கண்ணீர் பெருகியது. சிவபெருமான், விசாரசருமருக்கு அடியார்களுக்கெல்லாம் தலைவனாகும் பேறை அளித்தார். சண்டி சபதம் என்னும் பதவியை அளித்தார். இனி யாம் சூடுவன, உடுப்பன, உண்ணுவன அனைத்து பரிகலமும் உனக்கே... என்று அருள் வழங்கி தம் திருமுடியிலிருந்த கொன்றை மலரை விசாரசருமருக்கு தம் திருக்கைகளாலேயே அணிவித்தார். சிவனது திருவாயால் சண்டிபதம் பெற்ற விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்பட்டார். விசாரசருமர் எம்பெருமானின் திருவருள் அணைப்பிலே... என்றும் அவரது புதல்வனாக தோன்றி பிறவாப் புகழ் பெற்று இறைவனது திருவடி நிழலை அடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக