Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 048

புகழ்ச்சோழ நாயனார்...!

அமராவதி என்னும் வற்றாத ஜீவநதி ஓடிக்கொண்டு இருக்கும் நாடு கொங்கு நாடு. அங்கு உள்ள கருவூரில் ஆனிலை என்னும் ஓர் ஆலயம் நந்தவனம் நிறைந்த பகுதியில் அமைந்திருந்தது. அந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானுக்கு பசுபதீஸ்வரர் என்றும், ஆனிலையுடைய மகாதேவர் என்றும் திருநாமங்கள் இருந்து வந்தன. அன்பின் வடிவமாக விளங்கும் சிவபெருமானை, காமதேனு வழிபட்டமையால் எம்பெருமானுக்கு இப்பெயர் உண்டாயிற்று.

எம்பெருமானை வழிபடும் அடியார்களில், சோழநாட்டு உறையூரை தலைநகரமாக கொண்டு அரசாண்ட மன்னர் புகழ்ச்சோழர் ஆவார். தமது உடல் மற்றும் படை வலிமையால் பல மன்னர்களை போரில் வெற்றி கொண்டு அவர்கள் அனைவரையும் தமது கட்டளைக்கு கீழ் நடக்கும் வண்ணம் செங்கோல் ஆட்சி புரிந்து வந்தார்.

எம்பெருமானிடத்தும் பக்தியும், அன்பும் கொண்டு அவரை வணங்கி வந்தார். சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு தேவையான தொண்டுகளை புரிந்தால் சிவனுக்கே செய்த பெருந்தொண்டு என்பதை உணர்ந்தவர் புகழ்ச்சோழ நாயனார். அதனால் சிவனடியார்களிடம் அன்பும், பக்தியும் கொண்டிருந்ததோடு சிவாலயங்களுக்கு தேவையான திருப்பணிகள் செய்வதையும் வழக்கமாக்கியிருந்தார். இவருடைய ஆட்சியில் நான்கு புறமும் சைவம் தழைத்தது. 

புகழ்ச்சோழர் கொங்கு நாட்டு அரசரும், மேற்கு திசையில் உள்ள மற்ற நாட்டு அரசர்களும் கப்பம் கட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் தமது தலைநகரை மலைநாட்டுப் பக்கம் உள்ள கருவூருக்கு மாற்றி கொண்டார். கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த புகழ்ச்சோழர் அங்கு எழுந்தருளியிருக்கும் பசுபதீஸ்வரரை தினந்தோறும் சென்று வழிபாடு செய்து வந்தார். புகழ்ச்சோழரின் பக்தி மற்றும் அன்பினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த பசுபதீஸ்வரர் புகழ்ச்சோழரின் பக்தியை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டார். அதற்கான சூழலும் அவ்விடத்தில் தோன்ற துவங்கியது.

ஆனிலைப் பெருமானை கண்டு வழிபடும் பல கோடி பக்தர்களில் எறிபத்தர் ஒருவராவார். இவர் எம்பெருமானை காண வரும் பக்தர்களுக்கும், அடியார்களுக்கும் ஏதேனும் ஒருவகையில் எவர் மூலமாவது துன்பங்கள் ஏற்படுமாயின் அவ்விடத்திற்கு விரைந்து சென்று அடியார்களுக்கு துன்பம் ஏற்படுத்தியவர்களை கண்டு அவர்களை தண்டிக்கக்கூடியவர் ஆவார்.

அடியார்களுக்கு துன்பம் ஏற்படுத்தியவரை தண்டிப்பதற்காகவே தனது கரங்களில் எப்பொழுதும் மழு என்ற ஆயுதத்தை கொண்டிருப்பார். ஆயுதத்தினால் அடியார்களுக்கு துன்பம் ஏற்படுத்தியவர்களை தான் கொண்டிருக்கும் ஆயுதத்தை எறிந்து அடியார்களின் துன்பத்தை போக்கக்கூடியவர். தான் கொண்டுள்ள மழு என்ற ஆயுதத்தை எறிந்து அடியார்களின் துன்பத்தை போக்கக்கூடிய பக்தர் என்னும் காரணப் பெயரே இவரது இயற்பெயராக காலப்போக்கில் உருவாகத் துவங்கியது. அதாவது எறிபத்தர்.

எறிபத்தர் எம்பெருமானின் மீது கொண்டிருந்த அன்பில் மட்டுமல்லாது வீரத்திலும் சிறந்து விளங்கினார். கயவர்களை கண்டும் எவ்விதமான அச்சமுமின்றி அவர்களுடன் மிகுந்த வீரத்துடன் போராடக்கூடியவர். அடியவர்களுக்குத் துன்பம் ஏற்படுத்தக்கூடியவர் எவராயினும் அது வேந்தன் ஆயினும் அவர்களையும் தண்டிக்கும் வீரத்தை கொண்டிருந்தவர். எறிபத்த நாயனார் எம்பெருமான் மற்றும் எம்பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு மட்டுமே அடிபணிந்து நடக்கக்கூடிய சிறந்த அடியார் ஆவார்.

அதே ஊரில் எம்பெருமானின் மீது கொண்டுள்ள எறிபத்த அடியாரின் பக்தியை போன்றே இன்னொரு அடியாரும் எம்பெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். அவர் சிவகாமியாண்டார் என்ற அடியார் ஆவார். இவர் தனக்கு விவரம் தெரிந்த நாட்கள் முதல் தனது கரங்களினால் மலர்களை பறித்து அவைகளை மாலைகளாகத் தொடுத்து எம்பெருமானுக்கு சமர்ப்பிப்பதை தனது இன்றியமையாத பணிகளில் ஒன்றாக கருதி அனுதினமும் செய்து கொண்டு வந்தார். இந்த அரும்பணியானது வயது என்னும் வித்தியாசத்தை கடந்தும் வயோதிகம் அடைந்த நிலையிலும் அவர் மேற்கொண்டு வந்தார்.

ஆதவன் உதிக்கும் முன்பே எழுந்து புனித நீராடி திருநீற்றை எம்பெருமானின் திருநாமங்களை எண்ணி நெற்றியிலும், மேனியிலும் பூசிக்கொண்டு எம்பெருமானுக்கு மலர்களை சமர்ப்பிப்பதற்காக மலர்பறிக்க நந்தவனம் செல்வார். எம்பெருமானுக்கு அணிவிக்கப்படும் மலர் மாலையானது வண்டுகளும் தீண்டக்கூடாது என்பதற்காக விரைந்து சென்று வண்டுகள் தீண்டாத மலர்களைப் பறிப்பார்.

சிவகாமியாண்டார் மலர்களை பறிக்கும்போது தனது மூச்சுக்காற்று கூட மலர்களின் மீது பட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டு தனது முகத்தில் முகத்திரை அணிந்து கொண்டு மலர்களை பறித்து எம்பெருமானுக்கு சாற்றக்கூடியவர். எவ்வளவுதான் கூடைகளில் மலர்கள் இருந்தாலும் கூடையே வழிந்து நிரம்பியிருந்தாலும் எம்பெருமானுக்கு குறைந்த அளவே மலர்களை பறிக்க முடிந்ததே என்ற எண்ணம் மட்டும் உடையவர். 

இங்கு பூக்கள் நிறைந்த கூடைகளை ஒரு நீண்ட குச்சியின் இருபுறங்களில் வைத்துக்கொண்டு திருக்கோவிலுக்குச் சென்று அங்கு தான் பறித்த மலர்களைக் கொண்டு மாலைகளாக உருவாக்கி அதை எம்பெருமானுக்கு அழகுற சாற்றக்கூடியவர். அன்றைய தினம் பசுபதீஸ்வரருக்கு திருவிழாவும் கூட. திருவிழா என்ற பொழுதிலே கோவில்கள் முழுவதும் வாழை மரங்களும், தென்னங்குருத்துத் தோரணங்களும், மாவிலைத் தோரணங்கள் என பிரம்மாண்டமான அலங்காரத்துடன் திருக்கோவிலானது காட்சியளித்தது.

மக்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களான சிறு கடைகளும், வேடிக்கை பொருட்கள் நிரம்பிய கூடங்களும் அங்கு ஏராளமாக இருந்தது. பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டு கொண்டிருந்தன. இத்திருவிழாவை காண வெளியூரில் இருந்து மக்கள் அலையெனத் திரண்டு வந்து கொண்டிருந்தனர். மக்களின் வெள்ளத்தில் பசுபதீஸ்வரரை காண திருக்கயிலாயமே கருவூரில் நிலைகொண்டிருக்குமோ என்ற எண்ணமும் தோன்றும் அளவிற்கு எழில் மிகுந்த அழகிய காட்சியாக இருந்து வந்தது. 

எப்பொழுதும் போலவே திருவிழாவில் எம்பெருமானுக்கு தனது கரங்களால் பறித்த மலர்களை சாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவகாமியாண்டார் மலர்களைப் பறித்துக் கொண்டு தனது மனம் முழுவதும் நிறைந்த சிவ எண்ணத்துடன் பூக்களை கூடையில் நிரப்பிக் கொண்டு திரு ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவ்வேளையில் அரண்மனையின் சேவகர்கள் பட்டத்து யானையை அமராவதி ஆற்றில் நீராட்டி, யானைக்கு சாற்ற வேண்டிய அணிகலன்கள் யாவற்றையும் சாற்றி, அழைத்து வந்து கொண்டு இருந்தனர்.

பட்டத்து யானையை அலங்கரித்துக் கொண்டு வந்த சமயத்தில் திடீரென்று என்ன நிகழ்ந்ததோ? என்ன மாயமோ? என்று எவரும் அறிய இயலாத வகையில் எம்பெருமானின் திருவிளையாடலானது அவ்விடத்தில் நிகழத் தொடங்கியது. அதாவது, அணிகலன்கள் சாற்றிய மிகப்பெரிய களிறானது என்ன காரணத்தின் பொருட்டு அறியாது மதம் பிடிக்கத் துவங்கியது. களிறின் மதத்திற்கு முன்பு எவராலும் நிற்க இயலுமோ?

மதம் கொண்ட களிறானது எவருக்கும், ஏன் பாகனுக்கும் அடங்காமல் ஓட துவங்கியது. களிறுக்கு மதம் பிடித்து வருகின்ற செய்தியானது மக்களின் மத்தியில் பரவத் தொடங்கியதும் திருவிழாவை காண வந்த அனைத்து மக்களும் கண்ணுக்கு தெரியும் பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினர். 

களிற்றின் மீது அமர்ந்து கொண்டிருந்த பாகனும் எவ்வளவு முயற்சி செய்தும் களிற்றின் மதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பாகன் முயன்றதோடு மட்டுமல்லாமல் களிற்றுடன் வந்திருந்த காவலர்கள் கூட முயற்சி செய்தும் களிற்றை அடக்க இயலவில்லை. பாகனும், காவலர்களும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவ துவங்கின.

அவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக எண்ணத்தொடங்கியது. மதம் பிடித்த களிறானது வருவதை அறிந்ததும் மக்களும் ஓடத்துவங்கினர். ஓட்டத்தின் இடையிலேயே சிவகாமியாண்டார் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். மக்கள் ஓடுவதை அறிந்ததும் யாது? என்ன நிகழ்ந்தது? என்று புரிந்துகொண்டு அவரும் பூக்கள் நிரம்பிய கூடைகளை ஏந்திய வண்ணம் ஓடத் துவங்கினார்.

இருப்பினும் வயது முதிர்ச்சியின் காரணமாக அவரால் யானை வருவதற்கு முன்னால் வேகமாக செல்ல இயலவில்லை. மதம் கொண்ட களிறானது அவரை நெருங்கி நொடிப்பொழுதில் அவரிடமிருந்து பூக்கள் நிரம்பிய கூடைகளை மட்டும் பறித்து வீதியில் தூக்கி எறிந்தது. ஆனால் அவரை மட்டும் ஒன்றும் செய்யாமல் சென்றது. மேலும் தனது வழியில் கண்ட பொருட்கள் யாவற்றையும் தூக்கி எறிய தொடங்கியது. களிறானது தன்னிடமிருந்த, எம்பெருமானுக்கு சாற்றுவதற்காக பறித்து வந்திருந்த பூக்கள் நிரம்பிய கூடைகளை பறித்து தூக்கி எறிந்ததும் பூக்கள் யாவும் நிலத்தில் கிடந்ததை கண்டு மிகுந்த கோபம் கொண்டார் சிவகாமியாண்டார்.

சிவகாமியாண்டார் என்ன செய்வது? என்று தெரியாமல் மகாதேவா...! என்று அலறிக் கொண்டு வீதியில் பூக்களை ஏந்தி செல்ல உதவியாக இருந்த குச்சியை எடுத்துக் கொண்டு யானையை அடிப்பதற்காக அதன் பின்னால் ஓடத் தொடங்கினார். அவர் ஓட துவங்கிய பொழுதில் யானையானது வெகுதூரம் சென்றுவிட்டது. அதைக் கண்டதும் என்ன செய்வது? என்று புரியாமல் எம்பெருமானே உமக்கு சாற்றுவதற்காக எடுத்துவந்த பூக்கள் யாவும் அநியாயமாக நிலத்தில் கூடையோடு கொட்டிவிட்டது இறைவா? மகாதேவா! ஆனிலைப் பெருமானே...!! என்று முறையிடத் துவங்கினார்.

இனியும் இந்த உடலில் இவ்வுயிர் இருக்க வேண்டுமா? என்று கூறிக்கொண்டே சிறு குழந்தை போல அழத் துவங்கினார். அந்தச் சமயத்தில் எம்பெருமானைக் காண எறிபத்தர் வந்து கொண்டிருந்தார். சிவகாமியாண்டார் அழுவதை கண்டதும் என்னவாயிற்று? அடியாரே... என்று அவரின் அருகில் மிகுந்த வேகத்தில் நெருங்கினார். சிவகாமியாண்டார் அவரிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தார். 

அடியார் உரைத்ததை கேள்வியுற்றதும் அடியார் கொண்ட சினத்தை காட்டிலும் மிகுந்த சினம் கொண்டு... பொங்கி எழும் எரிமலைக் குழம்பின் அனலை போன்று... கண்கள் சிவக்க துவங்கின... பின்பு எம்பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு துன்பம் விளைவிக்கக்கூடிய எவராயினும் அவர் தண்டிக்கப்படக்கூடியவர். அது யானை ஆயினும் தண்டிக்கப்பட வேண்டியதாகும் என்று கூறிக்கொண்டு தனது தோளின் மீது இருந்த மழுவாயுதத்தை கரங்களில் தூக்கிப் பிடித்தார். 

சிவனடியார்களுக்கு துன்பம் இழைத்த அந்த யானையை இக்கணமே கொன்று விடுகின்றேன் என்று சூளுரைத்து பட்டத்து யானை எந்தத் திசையை நோக்கி ஓடியது என்று அடியாரிடம் வினவினார். அடியாரும் யானை சென்று கொண்டிருந்த திசையை காட்டவே எறிபத்தனாரும் புயல் காற்றின் வேகத்தை போன்று மிகுந்த வேகத்துடன் ஓடிச்சென்று யானையின் முன்பு நின்றார்.

சிவபக்தர்களுக்கு இன்னல்களை விளைவித்த யானையை கொல்வதற்கு சிங்கத்தைப் போன்று விரைந்து பாய்ந்தார் எறிபத்தர். மதம் கொண்ட யானை, எதிரில் தன்னைக் கொல்ல வரும் எறிபத்தரை தனது துதிக்கையால் தூக்கி வீச முயற்சி செய்ய... எறிபத்தரோ தனது கரங்களில் இருந்த மழு ஆயுதத்தினால் யானையின் துதிக்கையை துண்டித்தார்.

யானையின் துதிக்கை அதன் உடலில் இருந்து விழுந்த நொடிப்பொழுதில் மிகுந்த வலியுடன் கூடிய சத்தத்துடன் யானையின் மதமும் இறங்கி ரத்தம் வெளியேற என்ன செய்வது? என்று புரியாமல் நிலத்தின் மீது விழுந்து மடிந்தது. யானையின் நிலையைக் கண்ட பாகனும் என்ன செய்வது? என்று புரியாமல் யானையின் அருகில் வரத் துவங்கினார். அவ்வேளையில் யானையின் முன்னே கையில் மழு ஆயுதத்துடன் எறிபத்தர் சிவந்த கண்களுடன் நின்று கொண்டிருந்தார். 

நீர் வளர்த்த யானையினால் இன்று எத்தனையோ அடியார்களுக்கு இன்னல்களை விளைவிக்க காரணமாக இருந்தவனே நீதான்... யானையை விட கொடிய பாவம் இழைத்தவன் நீயே, நீ வாழ தகுதியற்றவன் என்று கூறி பாகனையும் தனது ஆயுதத்தினால் தாக்கி வதம் செய்தார்.

பாகன் தாக்கப்படுவதை அறிந்ததும் பாகனுடன் வந்து கொண்டிருந்த காவலர்களும் அவனை காக்கும் பொருட்டு எறிபத்தருடன் சண்டையில் ஈடுபட்டனர். எறிபத்தரின் வீரத்திற்கு முன்பு காவலர்களின் வீரமும் செயலற்று போகவே யானையை சரியான முறையில் பராமரிக்க இயலாத காவலர்களும் இருந்து என்ன பயன்? என்று உரைத்த வண்ணம் காவலர்களையும் அவ்விடத்திலேயே தனது ஆயுதத்தினால் வெட்டி வீழ்த்தினார். 

திருவிழா நிகழ்ந்த இடத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் யானையின் நிலை உட்பட அனைத்தும் மன்னரான புகழ்ச்சோழருக்கு தெரிவிக்கப்பட்டன. இதை அறிந்ததும் மன்னர் மிகுந்த கோபம் அடைந்தார். தன்னுடைய யானையை கொல்வதற்கு அவருக்கு அவ்வளவு தைரியம் உண்டா? என்று உரைத்த வண்ணம் சினத்துடன் அவ்விடத்திற்கு செல்ல தனது படைகளுடன் புறப்பட ஆணையிட்டார்.

மன்னர், தனது யானையை கொன்றவர் யார்? என்றும், அவர்களுடைய பெயர் என்ன? என்பதையும் அறிந்து கொண்டு அவர் இருக்கும் இடத்தை நோக்கி செல்லத் துவங்கினார். மன்னருடன் படைகளும் போருக்கு செல்வதற்கு தயார் ஆவது போல தயாரான நிலையில் இருந்தன. வீரர்கள் யாவரும் கரங்களில் ஆயுதங்களுடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.

பின்பு தனது படையை ஊருக்கு வெளியே சிறிது தொலைவில் நிறுத்தி வைத்துவிட்டு புகழ்ச்சோழர் மட்டும் புரவியில் ஏறி மிகுந்த வேகத்துடன் யானை வெட்டி வீழ்த்திய அவ்விடத்திற்கு சென்றடைந்தார். புரவியில் இருந்து இறங்கி இறந்த யானையின் உடலில் அருகில் சென்றார். யானையின் அருகில் யானையின் பாகனும், அவருக்கு காவலாக இருந்தவர்களும் இறந்து கிடந்தனர். அவர்களின் அருகில் மழுவாயுதத்துடன் எறிபத்தர் மிகுந்த சினத்துடன் நின்று கொண்டு இருந்தார். 

எறிபத்தரை அந்த கோலத்தில் கண்டதும் மன்னர் அதிர்ச்சி அடைந்தார். மேலும்

நெற்றியிலே திருநீறும்...

மேனியிலே திருநீறும்...

தலையிலும்... கையிலும்... கழுத்திலும் ருத்ராட்ச மாலை...

சிவக்கோலத்துடன் நின்று கொண்டிருக்கும் எறிபத்தரை பார்த்தார்.

இவ்வாறு நின்று கொண்டிருக்கும் எறிபத்தரைப் பார்த்தும் மன்னருக்கு எதுவுமே சரியாக விளங்கவில்லை. மன்னர் அவரைத் திருத்தொண்டராக எண்ணினாரே தவிர, இந்த பாதக செயலை செய்த கொலைக்காரராக மட்டும் சிறிதளவும் எண்ணவில்லை.

புகழ்ச்சோழரோ அங்கு கூடியிருந்த மக்களிடம் இந்த பாவச்செயலை செய்தது யார்? என்று கேட்டார். அங்கு கூடியிருந்த அனைவரும் எறிபத்தரை சுட்டிக்காட்டி அரசே...! இவர்தான் இந்த பாவச்செயலை செய்தவர் என்று கூறினார்கள். புகழ்ச்சோழரோ அதிர்ச்சியும், வியப்பும் கொண்டு எறிபத்தரை பார்த்தார்.

வீரமும், கோபமும் இருந்தாலும் அவருடைய கருணை முகத்தை கண்டதும் புகழ்ச்சோழருக்கோ இத்தகைய பாதக செயலை செய்யும் அளவிற்கு இவ்வடியாருக்கு சினம் ஏற்பட்டு இருக்குமாயின் தன்னுடைய பட்டத்து யானை எவ்வளவு பெரும் தவறு இழைத்திருக்கும்?. இல்லையென்றால் இத்தகைய கொடும் செயலை ஏன் இவ்வடியார் செய்ய போகின்றார்? என்பதை யூகித்துக் கொண்டார். நிகழ்ந்தவற்றை யூகித்துக் கொண்ட புகழ்ச்சோழர் எறிபத்தர் முன்னால் சென்று அவரை வணங்கினார்.

எறிபத்தரிடம் சென்று அடியாரே... இங்கு நடந்தவை பற்றி எதுவும் சரியாக என்னால் அறிய இயலவில்லை. ஆனால் உங்களது கருணை நிறைந்த முகத்தைக் காணும் வேளையில் இங்கு நிகழ்ந்தவைகள் என்னவென்று என்னால் புரிந்துக்கொள்ள முடிகின்றது. தங்களின் உள்ளம் பாதிக்கும்படியான நிகழ்வு ஒன்று இவ்விடத்தில் நடந்துள்ளது என்பதை மட்டும் என்னால் அறிந்து கொள்ள இயல்கின்றது. நடந்த தவறுக்காக பாகனையும், யானையையும் தண்டித்தது தங்களது மனதிற்கு போதுமானதாக தோன்றவில்லை என்றால் உத்தரவிடுங்கள்... யான் என்ன செய்ய வேண்டும்? என்று மன்னரான புகழ்ச்சோழர் பணிவுடன் கேட்டார்.

மன்னா...!! மதம் கொண்ட களிற்றையும், பாகனையும், காவலர்களையும் கொன்றேன். அதற்கெல்லாம் காரணம் என்ன? என்று தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதாவது, பட்டத்து யானையானது இறைவனுக்கு சாற்றுவதற்காக பூக்களை பறித்து சென்று கொண்டிருந்த சிவகாமியாண்டார் என்னும் அடியாரின் கையிலிருந்த மலர்க்கூடையை பிடித்து இழுத்து நிலத்தில் கொட்டி சேதத்தை ஏற்படுத்தியது. 

இத்தகைய முறையில்லாத செயலை பட்டத்து யானையையும், அதற்கு காரணமாக இருந்த மற்றவர்களையும் கொன்றேன் என்றார் எறிபத்தர். அவர் உரைத்ததை கேட்டதும் மன்னர் மிகவும் வருந்தினார். பின்பு மிகுந்த பக்தியோடும், பயத்தோடும் அவரை வணங்கினார். நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் அறிந்துகொண்ட மன்னரான புகழ்ச்சோழருக்கு தன் மனதில் பெரும் பாரம் கொண்டது போல் தோன்றியது. 

ஏனெனில் பட்டத்து யானை தன்னுடையதாகும். அந்த யானை எந்த வேலைகளைச் செய்தாலும் அதற்கு முழு பொறுப்பும், காரணமும் தானே. என்னுடைய யானையினால் சிவனை வழிபடும் பக்தர்களுக்கு பல இன்னல்களும், இடர்களும் ஏற்பட்டதிற்கான முழுப்பொறுப்பும் யாமே...! ஆகவே தன்னையும் தண்டிக்குமாறு அடியாரிடம் வேண்டி நின்றார். மேலும் தன்னை தன்னிடமுள்ள மழுவாயுதத்தை கொண்டு தண்டிக்காமல் தன்னிடம் உள்ள உடைவாளை எடுத்து அவரிடம் கொடுத்து இந்த வாளினால் எனக்கு உண்டான தண்டனையை தாங்கள் அளிக்க வேண்டும் என்று உரைத்து அவரை நோக்கி உடைவாளை நீட்டி அவர் அளிக்கும் தண்டனைக்காக காத்துக் கொண்டிருந்தார் மன்னர்.

மன்னரான புகழ்ச்சோழரின் செயலை கண்டதும் என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார் எறிபத்தர். ஏனெனில் அவர் கொண்டுள்ள பக்தியும், அன்பும் தனது பக்தியைக்காட்டிலும் உயர்ந்து விளங்கியதை அவர் புரிந்து கொண்டார். பின்பு மன்னரிடம் இருந்து அவரது உடைவாளை எடுத்துக்கொண்ட எறிபத்தர் யாது புரிவது? யாது செய்வேன்? என்று தனக்குள்ளே நினைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தார்.

தன்னுடைய கரங்களிலிருந்து உடைவாளை எடுத்ததும் புகழ்ச்சோழருக்கோ தனக்கான தண்டனை அளிக்க அடியார் முடிவுக்கு வந்துள்ளார் என்பதையும், தான் செய்த இந்த குற்றத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைக்கப்போகிறது என்றும் எண்ணி தலை வணங்கி நின்று கொண்டிருந்தார். 

மன்னருடைய இந்த செயலை கண்டதும் ஒரு கணம் மனம் பதறி நின்றார் எறிபத்தர். அவருடைய செயல்பாடுகள் யாவற்றையும் நினைத்த மாத்திரத்தில் தன் உடலில் ஒருவிதமான பதற்றமும், தடுமாற்றமும் ஏற்படத் துவங்கியது. தனது மனதில் இனம் புரியாத ஒரு உணர்ச்சி வெள்ளத்தில் அகப்பட்டது போல என்ன செய்வேன்? என்னுடைய இச்செயலால் சமன் செய்ய இயலாத ஒரு மாபெரும் குற்றத்தை செய்துள்ளோம் என்றும், நேர்மை கொண்டு ஆட்சிப்புரியும் மன்னருடைய குணத்தை உணராது இருந்துவிட்டேனே என்று தனக்குத்தானே மனம் நொந்து கொண்டிருந்தார் எறிபத்தர்.

அடியார்களுக்கு நிகழ்ந்த இச்செயலை கண்டதும் தனது உயிரையும் பொருட்படுத்தாது தனது உயிரையும் எடுத்துக்கொள்ள தலை குனிந்து நிற்கும் இவர் அரசர் அல்ல? அடியார்களின் அன்பர். இவரது யானையையும், யானைக்கு உதவியாக இருந்த பாகனையும், காவலர்களையும் கொண்ட என்னை கொள்ளாது யானை செய்த அனைத்திற்கும் தானே பொறுப்பானவன் என்று கருதி தனக்கும் தண்டனை அழித்து விடுங்கள் என்று கூறி நிற்கின்ற இவரை எவ்விதம் என்னால் கொல்ல இயலும்?. இவர் அன்பின் வடிவம் ஆவார். இவ்வுலகமே போற்றுதற்குரிய சிறந்த அரசன் என்றும் கூறினார்.

எறிபத்தரோ உண்மையிலேயே இங்கு தவறிழைத்தவன் நானே. நான் இவ்வுலகில் வாழ தகுதி இல்லாதவன் என்றெல்லாம் தனக்குள்ளே எண்ணியவாறு தனது மனதில் பலவிதமான குழப்பங்களுடன் நின்று கொண்டிருந்த எறிபத்தர். பின் தன் கையில் இருந்த உடைவாளால் தம் கழுத்தையே அறுத்துக் கொள்ள முற்பட்டார்.

அடியாரின் செயலைக் கண்டதும் திடுக்கிட்ட புகழ்ச்சோழரோ அவரது கரங்களை இழுத்து பிடித்தவாறு, கற்றறிந்த அடியாரே...!! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? இது தவறல்லவா? என்று கூறி அவரது கையில் இருந்த உடைவாளை பற்றிக் கொண்டார். இது முறையான செயல் அல்ல என்று கூறும்பொழுது அங்கு நிகழ்ந்த காட்சி என்பது யாவரும் அணுவளவும் எண்ணிப் பார்க்காத ஒரு அரிய காட்சியாக அவ்விடத்தில் இருந்தது.

அப்பொழுது மேகக்கூட்டங்களுக்கு இடையே ஒரு பொன்னிறமான அழகிய ஒளியானது உருவாகத் துவங்கியது. ஒளியிலிருந்து எம்பெருமானின் அசரீரி வாக்கானது மண்ணுலகில் வாழும் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் எழுந்தது. அன்பிலும், பக்தியிலும் சிறந்த அடியவர்களாகிய உங்களின் பெருமைகளை உணர்த்தவே இந்த நிகழ்ச்சிகள் யாவும் நிகழ்ந்தன என்று அசரீரி எடுத்துரைத்தது.

அசரீரி கூறியதை கேட்டதும் எறிபத்தனாரும், புகழ்ச்சோழரும் எம்பெருமானை மனதில் எண்ணியபடி அசரீரி வந்த திசையை நோக்கி தரையில் விழுந்து வணங்கினார்கள். எம்பெருமானின் கருணை பார்வையினால் எறிபத்தரால் இறந்த உயிர்கள் யாவும் உயிர்பெறத் துவங்கின. யானையின் செய்கையினால் சாலையில் விழுந்த பூக்கள் யாவும் பழைய பொலிவுடன் சிவகாமியாண்டார் கூடையில் நிரம்பத் துவங்கியது.

பின்பு அசரீரியானது இவ்வுலகில் பல காலம் வாழ்ந்து தொண்டுகளையும், அரசாட்சியும் புரிந்து எம்மை வந்து அடைவீர்களாக...! என்று உரைத்து மறைந்தது. சிவகாமியாண்டார் எம்பெருமானின் கருணையை நினைத்து மகிழ்ந்தவாறே எம்பெருமானை வழிபட புறப்பட்டார். இந்த நிகழ்ச்சியினால் எறிபத்த நாயனாரும், மன்னரும் மிகுந்த நண்பர்கள் ஆனார்கள்.

எறிபத்தர் தனது கோபத்தை களைந்து சோழ மன்னரிடம் பணிந்து நின்றார். சோழ மன்னனும் அவர் அடி வீழ்ந்து வணங்கினார். பின்பு உயிர்பெற்று எழுந்த தனது பட்டத்து யானையின் மீதேறி அமர்ந்து புகழ்ச்சோழர் அரண்மனைக்குப் புறப்பட்டார். எம்பெருமானின் அருளால் நல்முறையில் ஆட்சிப்புரிந்து வந்து கொண்டிருந்த புகழ்ச்சோழர் மீண்டும் சோதனைகள் ஏற்படத் துவங்கியது.

அதாவது நாட்டை வளமுடன் ஆட்சி செய்ய தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அரசர்கள் அனைவருக்கும் கப்பம் விதிக்கப்பட்டது. அரசர்கள் கப்பமாக கொண்டு வந்து கொடுக்கும் யானைகள், குதிரைகள், பொற்குவியல்கள், ரத்தின குவியல்கள் முதலிய திரைப்பொருட்களை எல்லாம் பெற்று, அந்தந்த அரசர்களுக்கு அவரவர்களின் நிலைமைக்குத் தக்க அரசுரிமைத் தொழிலினைப் நல்லமுறையில் புரிந்து வருமாறு பணிந்தார். இவ்விதமாக எண்ணற்ற மன்னர்கள் கப்பம் செலுத்தி வரும் வகையில் அதிகன் என்னும் அரசன் மட்டும் மன்னருக்கு கப்பம் கட்டாமல் இருந்தான். அதிகன் கப்பம் செலுத்தாமல் இருக்கும் செய்தியை அமைச்சர் மூலம் அறிந்துகொண்டார் மன்னர். 

கப்பம் கட்டாமல் இருக்கும் அதிகனை வென்று வர அமைச்சர்களிடம் ஆணையிட்டார் புகழ்ச்சோழ நாயனார். மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்த அமைச்சர்கள் ஒரு மாபெரும் படைகள் சூழ சென்று அதிகனை வென்றார். ஆயினும் அதிகன் தப்பி காட்டிற்குள் ஓடிவிட்டான். போரில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் அங்கிருந்த பொருள், செல்வங்கள், படைகள் கொண்டு வந்ததோடு போரில் மாண்ட யானை, குதிரை, பெண்கள் தலைகள், வீரர்கள் தலைகளையும் எடுத்து வந்தனர்.

தமது படை வீரர்களின் வீரம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த மன்னர் கண்ணில் ஒரு தலையில் மட்டும் சடைமுடி இருப்பது தென்பட்டது. அந்த தலையை கண்டதும் அவர் கொண்ட மகிழ்ச்சியானது நொடி பொழுதில் காணாமல் போனது.

அரசரின் உடல் அவரையும் அறியாமல் நடுக்கம் கொள்ள துவங்கியது. மனதில் ஒருவிதமான பதற்றத்துடன் காணப்பட்டார். அவர் விழிகளில் இருந்து நீர் வர துவங்கியது. அங்கிருந்த அனைவரும் அரசரின் இந்த நிலையை கண்டதும் மன்னருக்கு என்னவாயிற்று என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர். மன்னரோ தம் மனதில் பெரும் பிழை நடந்துவிட்டதாக மிகவும் வருத்தம் கொண்டார். எனது ஆணையானது அடியார்களுக்கு தீங்கிழைக்கும் படி ஆனதே என்று அழுது மனம் ஆற்றியவர் அமைச்சரிடம் என் ஆட்சியில் சைவ நெறிக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே. திருமுடியில் சடைமுடி ஏந்திய அடியாரை நானே கொன்றுவிட காரணமாகிவிட்டேனே. எம்பெருமானுக்கு எத்தகைய தீங்கை யாம் செய்துவிட்டோம்.

சைவ நெறியை காப்பாற்ற வேண்டிய நானே சைவ நெறியை வழிபடும் அடியாரை கொன்றுவிட காரணமாகிவிட்டேன். நான் ஒரு அரசனல்லன். செங்கோல் ஏந்திய கொடுங்கோலனாக இருந்துவிட்டேன். இவைகள் அனைத்தையும் அறிந்த நான் இன்னும் இந்த உலகில் உயிருடன் இருப்பதா? என்றெல்லாம் பலவாறு சொல்லி மனம் புண்பட்டார். 

இனி மக்களை வழிநடத்தவோ அல்லது அவர்களைக் காப்பாற்றவோ எனக்கு எவ்வித தகுதியுமில்லை என்று கூறியவர் தன்னுடைய அரசாட்சியைத் தமது மகனுக்கு அளித்து தீக்குளித்து இறக்கத் துணிந்தார். மன்னரின் இந்த முடிவை கேட்டதும் அவ்விடத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய முடிவை மாற்ற பலவாறாக முயற்சி செய்தும் அவை அனைத்திலும் தோல்வியை கண்டனர். மன்னரின் முடிவே இறுதியானது. பின்பு அவரின் ஆணைப்படியே புதல்வனை அரசுக்கட்டிலில் உட்கார வைப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டன.

மன்னர், தான் இறப்பதற்கு நெருப்புக்குண்டலத்தை வளர்க்க ஆணையிட்டார். பின்பு திருச்சடையையுடைய தலையை ஓர் பொற்தட்டில் சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே அழற்குண்டத்தை வலம் வந்தார் மன்னர். பொற்றாமரைக் குளத்தில் குளிப்பார் போல் உள்ளக்களிப்போடு தீப்பிழம்பினுள்ளே புகுந்தார் மன்னர். பின் புகழ்ச்சோழ நாயனாரை எம்பெருமான் தம் திருவடி நிழலில் அணைத்துக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக