Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஜூன், 2020

வெயில் கொளுத்துதுன்னு குழந்தையை ஏஸி ரூம்ல தூங்க வைக்கிறீங்களா, முதல்ல இதைப் படியுங்க!


அத்தியாவசியமான பொருள்களின் பட்டியலில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே ஏ.சியும் இடம்பிடித்துவிட்டது. வெப்பநிலை உயர உயர எப்பாடுபட்டாவது ஏ.சியின் பயன்பாட்டையும் தவிர்க்கமுடியாததாக்கி கொண்டோம். இந்நிலையில் பிறந்த குழந்தையும் பிறந்த நாள் முதலே ஏ.சியின் குளிரை அனுபவிக்க தொடங்குகிறது. தாயின் வயிற்றில் கதகதப்பான சூழலில் இருந்த குழந்தை வெளியில் வந்ததும் இந்த ஏ.சி பயன்பாட்டில் பழக்கும் போது என்ன மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை 30 டெம்ப்ரேச்சர் அளவில் தான் இருந்திருக்கும். இந்நிலையில் குழந்தை வெளியே வந்ததும் ஏ.சி பயன்படுத்தும் போது அந்த வெப்பநிலைக்கு குழந்தையின் உடல் பழகுவதற்கு ஏற்றாற்போல் கதகதப்பாக வைக்க வேண்டும். அதற்கு முன் ஏ.சியில் படுக்கும் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

ஏ.சி தரும் நன்மை

குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். இதனால் வியர்வை வெளியேறும் போது சூடு கொப்புளம், வியர்க்குரு, சரும பிரச்சனைகள் பலவும் உண்டாகும். இதை தவிர்க்க ஏ.சி அறை தூக்கம் உதவுகிறது.

மாறிவரும் வெப்பநிலையாக இல்லாமல் சீரான வெப்ப நிலை குழந்தைக்கு கிடைப்பதால் குழந்தைக்கு ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது. இந்த இரண்டு நன்மைகளை குழந்தைகள் பெறுகிறார்கள். ஆனால் ஏ.சியினால் குழந்தைக்கு உண்டாகும் பாதிப்பு குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏ.சி தரும் தீமைகள்

ஏ.சி அறையை பொறுத்தவரை வெளியிலிருந்து வெளிச்சம், போதுமான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் இருக்கும். வெளியிட்ட காற்றையே குழந்தையும் சுவாசிக்க செய்யும்.

ஏ.சியின் குளிர் குழந்தைக்கு தாங்காது என்று குழந்தையின் உடலை கதகதப்பாக்குகிறேன் என்று போர்வை கொண்டு போர்த்தி விடுவதால் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் மேலும் கிடைக்காமல் போகும்.

குழந்தையின் பட்டான சருமம் ஏ.சி காற்றால் வறண்டு போக செய்யும். ஏசியின் பில்டரில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தூசிகள் குழந்தையின் மூச்சுக்குழாய்க்குள் சென்று நுரையீரல் வரை செல்லவும் வாய்ப்புண்டு. இதனால் குழந்தைக்கு சளி உற்பத்தி அதிகமாக இருக்கும். குழந்தைக்கு அடிக்கடி சளி பிடிக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

ஏ.சியில் பழக்கப்படுத்திய குழந்தையை வெளி இடங்களுக்கு அழைத்து செல்லும் போது குழந்தையின் உடலானது அந்த வெப்பநிலைக்கு சட்டென்று ஏற்றுகொள்வதில் சிரமம் இருக்கும். இதனால் குழந்தை ஒருவித உடல் அசெளகரியத்தை அனுபவித்து அழத்தொடங்கும்.

ஏ.சி அறையில்வரும் குளிர்காற்று சில குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறுகளை உண்டாக்கவும் செய்யும். குறிப்பாக குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை எடை குறைந்த குழந்தைகளை ஏ.சி அறையில் தூங்க வைப்பது நிச்சயம் ஆரோக்கிய குறைபாட்டையே உண்டாக்கும்.

என்ன செய்யலாம்?

அதிக வெப்பநிலையில் தவிர்க்கமுடியாமல் ஏ.சி பயன்படுத்துவதாக இருந்தால் நீங்கள் இதை செய்தால் ஓரளவு பாதுகாப்பாக இருக்கும். முதலில் நாள் முழுக்க குழந்தையை ஏ.சியில் படுக்க வைக்காதீர்கள். குழந்தையின் முகத்தை நேரடியாக தாக்கும் வகையில் ஏ.சியின் காற்று படவேண்டாம். குழந்தைக்கு கைகளிலும் கால்களிலும் உறைகளை மாட்டி விடுங்கள். இரவு நேரங்களில் ஏ.சி பயன்பாட்டின் போது பருத்தி ஆடைகளை சற்று கனமான கதகதப்பாக இருக்க கூடிய ஆடைகளை அணிவியுங்கள்.

காலை நேரங்களில் குழந்தையை சிறிது நேரமாவது சூரிய ஒளியில் வைத்திருங்கள். அதே போன்று ஏ.சி பயன்படுத்தும் அறையிலும் நாள் முழுக்க சூரிய ஒளி படும்படி கதவு, ஜன்னல், திரைச்சீலைகளை திறந்துவிடுங்கள். இதனால் கிருமிகள் அறைக்குள் தங்காமல் அழியக்கூடும்.
ஏ.சிக்கு முன்பு வரை இதை மூடி வைக்காமல் இருப்பது மிக மிக நல்லது. பகல் நேரங்களில் அதிக வெயில் இருக்கும் போது இரவு நேரங்களில் என்று ஏ.சியை தொடர்ந்து இயக்காமல் ஒரு மணி நேரம் இயக்கிய பிறகு மின் விசிறி பயன்படுத்துங்கள். மீண்டும் தேவையெனில் ஏ.சி பயன்படுத்தலாம்.

ஏ.சி அறையில் குழந்தையின் தொட்டி.ல், ஆடைகள், பொருள்கள் வைக்க வேண்டாம். அப்படி இருந்தால் வாரத்துக்கு இரண்டு முறை தவிர்க்காமல் அந்த இடத்தை சுத்தம் செய்துவிடுங்கள்.
வாரத்துக்கு ஒரு முறை ஏ.சி பில்டரை சுத்தம் செய்து தூசியை அகற்றுங்கள். இவ்வளவு பாதுகாப்பையும் தவிர்க்காமல் சரியாக செய்வதாக இருந்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு ஏ.சி யினால் பாதிப்பு உண்டாகாமல் பாதுகாக்க முடியும்.

சரி ஏ.சி யை விட குறைந்த விலையான ஏர் கூலர் பயன்படுத்தலாமா என்கிறீர்களா, அவற்றால் நிச்சயம் குழந்தைக்கு ஆரோக்கிய குறைபாடுதான் உண்டாகும் என்பதால் அதை தவிர்ப்பதே நல்லது. இயற்கை காற்றை காட்டிலும் செயற்கையாய் பெறும் எதுவுமே ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக