Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 ஜூன், 2020

இரணசிங்க ஈஸ்வரர்அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டம் செட்டித் திருக்கோணம் கிராமத்தில் உள்ள இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில், புராணச் செய்திகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டு பழமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஜென்ம பகை போக்கும் இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில்

பரம்பொருளாகிய இறைவன், உலகத்தில் உள்ள உயிர்களையெல்லாம் படைத்தான். அவ்வுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் பெற்று உய்யும் வகையில்.....

தன்னுடைய அருவ நிலையில் இருந்து இறங்கி, இந்த மண்ணுலகில் ஆங்காங்கே கோவில்களில் உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளி, தன் அடியாளர்களுக்கு அருள்புரிகிறான். 

அந்த வகையில் இறைவனை வணங்குவதற்கு நம்முடைய முன்னோர்கள் வழி வழியாக போற்றி வந்த அருள் நிறைந்த இடங்களே ஆலயங்கள் ஆகும்.

*‘தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!’* என்ற மாணிக்கவாசகரின் வரிகளுக்கு ஏற்ப, தென்னாடாகிய தமிழகத்தில் சிவபெருமான் உறையும் திருக்கோவில்கள் பல உள்ளன. 

சைவ சமய குரவர்கள், இறைவன் எழுந்தருளிய இடங்களுக்கு நேரடியாக சென்று இறைவனை வணங்கி, போற்றிப் பாடிய திருத்தலங்கள் ‘தேவாரத் தலம்’ என்று அழைக்கப்படுகின்றன. 

அதே போல் தேவாரம் பாடியத் திருத்தலங்களில் இருந்தபடியே, அருகில் உள்ள ஆலயங்களில் வீற்றிருக்கும் இறைவனையும் போற்றிப் பாடியிருக்கிறார்கள். 

அப்படி தேவாரத் தலத்தில் இருந்து மற்றொரு இடத்தில் உள்ள இறைவனை நினைத்து பாடப்பெற்ற இடங்கள், ‘தேவார வைப்புத் தலம்’ என்று அழைக்கப்படுகின்றன.

உலக உயிர்களையெல்லாம் காக்கும் பொருட்டு, இறைவன் எழுந்தருளிய இடங்களிலெல்லாம் கோவில்கள் கட்டப்பட்டு, அங்கு புராணங்கள், இறை மூர்த்தங்கள், இறைவன் திருவிளையாடல்கள் என்று அனைத்திற்கும் உயிர் கொடுக்கப்பட்டு, பக்தி மார்க்கமும் இறை நம்பிக்கையும் வளர்க்கப்பட்டன. 

அந்த வகையில் அரியலூர் மாவட்டம் செட்டித் திருக்கோணம் கிராமத்தில் உள்ள இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில், பிற்கால சோழர் கலைக்கு சான்றாகவும், புராணச் செய்திகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டும் பழமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

முதலாம் ராஜாதி ராஜனின் (1018-1044) ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோவில், சுமார் 973 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. 

மேலும் இந்தப் பகுதியில் புதிய கற்கால கருவிகள், முதுமக்கள் தாழி என்று வரலாற்று சான்றுகள் கிடைக்கப் பெற்றிருப்பதால், இவ்வூர் புராணக் காலத்திலிருந்து குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வந்துள்ளதை அறியமுடிகிறது.

செட்டித்திருக்கோணம் என்று அழைக்கப்படும் இவ்வூர், பிற்கால சோழர் காலத்தில் திருக்குன்றம் என அழைக்கப்பட்டு, விஜய நகர தெலுங்கு மன்னர்களின் ஆட்சி காலத்தில் திருக்கோணம் என வழங்கப்பட்டுள்ளது. 

வணிக நகரமான இப்பகுதி செட்டியார்கள் வாழ்ந்த பகுதியாதலால் இவ்வூர் ‘செட்டித்திருக்கோணம்’ என பெயர் பெற்றது.

இங்குள்ள கல்வெட்டுகள் இத்தல இறைவனை ‘இரண சிங்க ஈஸ்வரமுடைய மகா தேவர், இரணடூசுபறன்’ என்றும், அம்பாளை அறம் வளர்த்தவள் என்றும் குறிப்பிடுகின்றன. 

ஆனால் இப் பகுதி மக்களாலும், வழி வழியே வந்த கோவில் குருக்களாலும் இத்தல இறைவன் ‘இரண்யேஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகிறார். 

மகா விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரர் குல தலைவன் இரணியனை வதம் செய்தார். அந்த பாவம் நீங்குவதற்காக இத்தல இறைவனை வணங்கினார் என்று கூறப்படுகிறது.

வைகுண்ட காவலர்களான ஜய, விஜயர்கள் இருவரும், சனகாதிய முனிவர் அளித்த சாபத்தின் விளைவாக இரணியாட்சன், இரணியன் என்ற அசுரர்களாக அவதரித்தனர். 

இரணியாட்சன் பூமியை பாயாக சுருட்டி பாதாள உலகில் பதுங்கினான். மகா விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து அவனை வதைத்தார். அதனால் கோபமுற்ற அவனது சகோதரன் இரணியன், மகா விஷ்ணுவை எதிரியாகக் கருதினான். 

கடுமையான தவம் இருந்த இரணியன், சிவபெருமானிடம் இருந்து ‘தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ, இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக்கூடாது’ என்ற அரிய வரத்தைப் பெற்றான்.

தான் பெற்ற வரத்தின் காரணமாக, தன்னை எதிர்ப்பவர் எவரும் இல்லை என்று ஆணவம் கொண்டான். 

அதன் காரணமாக தன்னையே கடவுள் என்றும், அனைவரும் தன்னைத் தான் வணங்க வேண்டும் என்றும் சொல்லி அனைவரையும் கொடுமைப்படுத்தினான். 

இந்த நேரத்தில் இரணியனுக்கு, பிரகலாதன் என்ற மகன் பிறந்தான். தன் மகனையும் விஷ்ணுவுக்கு எதிரியாகவே வளர்க்க நினைத்தான் இரணியன். 

ஆனால் விதி வேறு கணக்குப் போட்டது. மகாவிஷ்ணுவின் திருவருளால், பிரகலாதன் உள்ளத்தில் அரி பக்தி தோன்றியது. வைகுண்ட வாசனே அனைத்து உலகிற்கும் ரட்சகன் என்று நம்பினான்.

தினந்தோறும் ‘ஓம் நமோ நாராயணா’ என்று கூறி, திருமாலை வழிபட்டு வந்தான். அதனை விரும்பாத இரணியன், ‘நானே கடவுள்.. என்னையே வணங்க வேண்டும்’ என்று மகனிடம் வற்புறுத்தினான். 

பிரகலாதனோ, ‘திருமாலே தன் தெய்வம்’ என்றான்.

எவ்வளவு சொல்லியும் தன் பேச்சைக் கேட்காத பிரகலாதனை, மகன் என்றும் பாராமல் அழித்திட முடிவு செய்தான். 

ஆனால் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் அவனை ஸ்ரீமன் நாராயணன் காத்தருளினார்.

ஒரு கட்டத்தில் பிரகலாதனிடம் ‘உன் நாராயணன் எங்கிருக்கிறான்?’ என்று இரணியன் கேட்க, ‘அவர் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார்’ என்றான் பிரகலாதன். உடனே இரணியன் ஒரு தூணை சுட்டிக்காட்டி.. ‘இந்தத் தூணில் இருக்கிறானா?’ என்றபடியே அந்தத் தூணைப் பிளந்தான்.

அப்போது தூணில் இருந்து நரசிம்ம உருவத்துடன் திருமால் வெளிப்பட்டார். இரணியனை தன் மடி மீது வைத்து, அந்திம நேரத்தில் வீட்டின் வாசல்படியில் நின்று தன்னுடைய கூரிய நகங்களைக் கொண்டு வதம் செய்தார். 

அதன்பிறகும் நரசிம்மரின் சினம் அடங்கவில்லை. இதனைக் கண்ட தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் இதுபற்றிக் கூறினர். 

அவர் சரபப் பட்சியாக உருவெடுத்து, சிறகுகளால் நரசிம்மரை அடித்து களைப்படையச் செய்தார். தனது அலகினால் அவரை ரணம் செய்து, தோலை உரித்து தன் உடம்பில் போர்த்திக்கொண்டார்.

இதையடுத்து சினம் தணிந்த மகாவிஷ்ணு, தன்னை மன்னித்தருளும்படி இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 

அவர் முன் தோன்றிய ஈசன், இரணியனை கொன்ற ஜென்ம பகை பாவத்தை போக்கி, திருமாலுக்கு அருள்புரிந்தார். 

மகா விஷ்ணு ரணம் அடைந்த நரசிம்மராக (சிங்க), ஈஸ்வரனை வழிபட்டதால் இத்தல இறைவன் ‘ரணசிங்க ஈஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ஆலயம் ஜென்ம பகை மற்றும் பாவம் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்கு இறைவனுக்கு 32 விளக்குகள் ஏற்றி வழிபட்டால் தங்களது ஜென்ம பாவம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்திருக்கோவிலில் அறம் வளர்த்தவள் எனப்படும் அம்பாள், தையல்நாயகி, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், ஜேஷ்டா தேவி, பிரம்மன், ஐயனார் போன்ற சிற்பங்கள் கலையழகோடு தரிசிக்கும் பக்தர்களை பரவசப் படுத்துகிறது. 

இரண சிங்க ஈஸ்வரருக்கு நாள்தோறும் இருகால பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

வியாபார நஷ்டம் தீர்க்கும் தலம்

இந்த ஆலயம் வியாபார நஷ்டம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது. முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் இவ்வூர் மதுராந்தகபுரம் என்ற பெயரோடு பெரிய வணிக நகரமாக திகழ்ந்தது. 

இப்பகுதியில் வாழ்ந்த எண்ணெய் வியாபாரம் செய்யும் செட்டியார் ஒருவர், தன்னுடைய வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, குடும்ப பாரம் தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார். 

சிறந்த சிவ பக்தரான அவரது கனவில் தோன்றிய இத்தல இறைவன், ‘மகா சிவராத்திரி அன்று என்னை பூஜித்து அருள் பெருவாயாக!’ என்று கூறி மறைந்தார். 

மறுநாள் சிவராத்திரி என்பதால் அந்த வியாபாரி, இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தார். 

இதையடுத்து அவரது வியாபாரம் பெருகி, நஷ்டத்தை ஈடுகட்டியதுடன் பெரும் பொருள் சேர்த்தார் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.

எனவே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள், பொருள் சேர்க்க நினைப்பவர்கள் மகா சிவராத்திரி அன்று, இங்குள்ள அடியார் தீர்த்தத்தில் நீராடி தல இறைவனை பூஜிப்பதால் வியாபார நஷ்டம் தீர்ந்து வியாபாரம் இரட்டிப்பாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

இத்திருக்கோவிலில் அரியலூர் பாளையக்காரர் விசய ஒப்பிலாத மழவராயர் (கிபி 1809) ஆட்சி காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 

சுமார் 208 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்த ஆலயத்தில் திருப்பணிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தத் திருப்பணியில் ஆன்மிக அன்பர்கள் பங்கேற்று இத்தல இறைவனின் அருளைப் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக