Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 1 ஜூன், 2020

திருடிய பைக்கை கொரியரில் அனுப்பி வைத்த நபர்!

stolen bike to the courier
கோவையில் திருடிய பைக்கை ஒருவர் மீண்டும் கொரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக பொது போக்குவரத்து தடைபட்டிருந்த நிலையில் பொது போக்குவரத்து பல்வேறு நிபந்தனைகளுடன் குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதி இல்லாமல் கால்நடையாகவும், சைக்கிளிலும் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இந்நிலையில் கோவையில் தங்கி பணியாற்றிவந்த பிரசாந்த் என்பவர் நூதன முறையைக் கையாண்டு வீடு திரும்பியுள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர் பள்ளப்பாளையம் என்ற பகுதியில் வசிக்கும் சுரேஷ் குமார் (34) என்பவரது இரு சக்கர வாகனம் மே 18ஆம் தேதி கண்ணம்பாளையம் பிரிவில் உள்ள லேத் பட்டறை அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்து வாகனம் காணாமல் போயுள்ளது. இதனால் வாகனத்தை தேடியலைந்த அவர் கிடைக்காததால் காவல் துறையிடம் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

காவல்துறையினர் தாங்கள் கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக செயலாற்றி வருவதால் பொது முடக்கம் முடிந்தபின்னரே இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் சுரேஷ் குமாரே அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளார். மேலும் அது குறித்த காட்சிகளை அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். அப்போது வாகனத்தை எடுத்துச் சென்றது மன்னார்குடியைச் சேர்ந்த பிரசாந்த் என்பது தெரியவந்தது.

கண்ணம்பாளையம் பிரிவில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்த பிரசாந்த் கொரோனா பொதுமுடக்கத்தால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளார். இதனால் சுரேஷ்குமாரின் வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார்.
வாகன உரிமையாளர் தன்னைத் தேடுவதை அறிந்த பிரசாந்த் மன்னார்குடியிலிருந்து வாகனத்தை கொரியரில் சூலூருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

சனிக்கிழமை மதியம் தனது வீட்டைத் தேடி வாகனம் வந்ததும் சுரேஷ்குமார் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினரிடமும் தெரிவித்துள்ளார். இனிமேல் இந்தப் பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக