Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 1 ஜூன், 2020

சென்னையில் ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்பு: ஏற்பாடுகள் தீவிரம்!

கோப்புப்படம் 

சென்னையில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

அந்த வகையில், கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத்ம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது. ஆனால், உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியதையடுத்து, கடந்த 16ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கி வருகின்றன. ஆனால், பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படமாட்டாது என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான ஊரப்பாக்கம் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், தலைநகர் சென்னையில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகின. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் குறைவான நேரம் மட்டுமே டாஸ்மாக் திறக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்காக டாஸ்மாக் கடைகள் முன்பு சரீர இடைவெளியை கடைபிடிக்க தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின. ஆனால், சென்னையில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக