தாயார் : சத்யதேவி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : அன்னாவரம்
மாவட்டம் : காக்கிநாடா
மாநிலம் : ஆந்திர பிரதேசம்
#மூலதோ_பிரஹ்மரூபாய
#மத்யதோ_சிவரூபிணே
#அக்ரதோ_விஷ்ணுரூபாய
#சத்ய_தேவாயதே_நம:
உற்சவம்:
வைகாசி வளர்பிறை தசமியில் திருக்கல்யாணம், ஆவணி வளர்பிறை துவிதியையில் ஜயந்தி உத்ஸவமும், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி ஆகியவையும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன
தல சிறப்பு:
கருவறையில் மிகவும் புதுமையான தோற்றத்தில் அடியில் பிரம்மாவாகவும், நடுவில் சிவனாகவும், உச்சியில் விஷ்ணுவாகவும் காட்சியளிக்கும் சத்யதேவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போல் அழகிய மீசையுடன் தோற்றமளிக்கிறார். இடதுபுறம் சத்யதேவியும், வலதுபுறம் லிங்க ரூபமாக பாணத்தில் முக அமைப்புடன் கூடிய கவசத்துடன் கயிலாசநாதரும் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 3.30 மணி முதல் இரவு 9.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சத்யதேவர் திருக்கோயில் அன்னாவரம், காக்கிநாடா ஆந்திரா.
பிரார்த்தனை
பக்தர்கள் சத்யநாராயணா பூஜை செய்து இங்குள்ள சத்யதேவரை வேண்டிக் கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், கேசரி என்னும் நைவேத்தியம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
இந்தப் புகழ்பெற்ற கோயில் ரத்னகிரி மலையின் அடிவாரத்தில் உள்ளது. மேருவின் மகனான ரத்னாகர் தவமிருந்து தன் இடத்தில் இந்தக் கோயிலை அமைத்தார் என்று தல புராணம் கூறுகிறது. ரத்னகிரி மலை, கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள பணக்காரர்கள் எப்போதும் அன்னதானம் அளித்துக்கொண்டே இருப்பதால் இவ்வூர் அன்னாவரம் என்ற பெயர் பெற்றது. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இங்குள்ள சத்யதேவர், கேட்கும் வரத்தை (அனின வரதம்) தருவதால் இவ்வாறு அழைக்கின்றனர். ராஜா ராமாராயணம் என்கிற மன்னரின் கனவில் இறைவன் தோன்றி ஆணையிட்டதற்கிணங்கி, ஒரு ஆவணி மாத வளர்பிறை துவிதியையில் இந்த இடத்தில் கோயிலை ஏற்படுத்தினார் மன்னர். சத்ய நாராயண பூஜை எப்படி வந்தது? பூவுலகில் மனிதர்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து மனம் நொந்த நாரதர் மகாவிஷ்ணுவிடம், அவர்கள் கடைத்தேறும்படியான ஒரு வழியைக் கூற வேண்டும் என முறையிடுகிறார். மக்கள் கடைத்தேற சத்யநாராயண பூஜையும் விரதமும் மேற்கொண்டாலே போதும் எனக் கூறும் மகாவிஷ்ணு, நானே ஹரிஹர பிரும்மரூபமாக அன்னாவரத்தில் சத்யநாராயணராக விளங்குகிறேன் என்றார். ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்படும் ஒரு கதை சுவாரஸ்யமானது. சதாவு, லீலாவதி என்ற வணிகர் குலத் தம்பதி தங்களுக்குக் குழந்தை பிறந்தால் சத்யநாராயணருக்கு விரதம் இருக்கிறோம் என வேண்டிக் கொண்டனர். சத்யநாராயணரின் அருளால் கலாவதி பிறந்தாள். குழந்தை பிறந்தால் விரதத்தை மேற்கொள்கிறேன் என்பதை மனைவி கணவனுக்கு எடுத்துரைத்தும், அவளுக்குத் திருமணம் நடைபெற்றதும் செய்யலாம் என்றான். சத்யநாராயணரின் அருளால் ரத்னாகர் என்பவருடன் அவளுக்குத் திருமணம் நடந்தது. இதன்பின்னரும் தந்தை பூஜையை மேற்கொள்ளாததால், சதாவுக்கும் அவனது மருமகனுக்கும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதுடன், அரச பழி, சிறைவாசம் என்று இன்னல்கள் தொடர்ந்தன. லீலாவதியும், கலாவதியும் பிச்சை எடுத்தனர். ஒரு வீட்டில் சத்யநாராயண பூஜையைக் கண்ணுற்று பிரசாதம் பெற்றனர். லீலாவதிக்கு ஞாபகம் வந்தது. பின் அந்த ஏழ்மை நிலையிலும் எளிமையாக விரதத்தைச் செய்ததால், இழந்த செல்வங்கள் திரும்பக் கிடைத்தன. இறுதியில் ரத்னாகர், குன்றாக மாறி தன்னில் சத்யதேவரை ஸ்தாபித்தான். கலாவதி பம்பா நதியாக மாறி எப்போதும் இறைவனை வலம் வருகிறாள் என்கின்றனர். சதாவுக்கு, கோயிலின் உட்புறம் சிலை இருக்கிறது.
ஆவணி மாத வளர்பிறை துவிதியை திதியில், மக நட்சத்திரம் கூடிய ஒரு சுப தினத்தில், புதன்கிழமையன்று பெருமாள் அன்னாவரத்தில் அங்குடு மரத்தின் அடியில் காட்சியளித்தார். அந்த மரம் நேரில்லம்மா என்ற கிராம தேவதையாக மாறியது. இன்றும் இந்த மரம் ஸ்தல விருட்சமாக, பிரம்மா, விஷ்ணு, சிவசக்தி ஸ்வரூபமாக வணங்கப்படுகிறது. மரத்தைச் சுற்றி தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றுகிறார்கள். இந்தக் கோயிலை ஒருமுறை தரிசித்தால் 108 முறை திருப்பதி சென்று வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்
இருப்பிடம் :
கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகரான காக்கிநாடாவிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அன்னாவரம் உள்ளது. விஜயவாடா - விசாகப்பட்டினம் ரயில் பாதையிலுள்ள அன்னாவரம் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. விசாகப்பட்டினம் அல்லது ராஜமுந்திரி விமான நிலையத்திலிருந்து 3 மணி நேரம் பயணித்தும் இந்தக் கோயிலை அடையலாம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக