Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 10 ஜூன், 2020

அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்

இறைவன் பெயர்

ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்

இறைவி பெயர்

கிரிராஜ கன்னிகாம்பாள்

தேவாரப் பாடல்கள்

சம்பந்தர்

மாறில் அவுணரரணம்

எப்படிப் போவது

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருமாற்பேறு அருகில் இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்
தக்கோலம் அஞ்சல்
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN - 631151

தொடர்பு: 04177 - 246427
இவ்வாலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

தல வரலாறு

மக்கள் வழக்கில் தக்கோலம் என்று வழங்கப்படுகிறது.

தக்கன் தலையைக் கொய்த தலம் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு ஓலமிட்டதால் 'தக்கன் - ஓலம் ' மருவி 'தக்கோலாம் ' என்றாயிற்று என்று உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது. (இதற்கு அரண்போல் தேரடிக்கு அருகில் வீரபத்திரர் கோயில் உள்ளது.)

கோவில் அமைப்பு

குசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரளவில் சுற்றிலும் மதிற்சுவருடன் கூடிய மேற்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும் தனிக்கோயிலாகவுள்ளது. நந்திக்கு எதிரில் உள்சுற்றுச் சுவரில் ஒரு சாளரம் உள்ளது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கிய அம்பிகை சந்நிதி தனிக் கோவிலாக ஒரு முன் மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுட்ன காட்சி தருகிறாள். இச்சந்நிதிக்குப் பக்கத்தில் தனியே உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி கம்பீரமாக உள்ளது. அம்பிகை சந்நிதிக்கு எதிரே சுவாமி சந்நிதிக்குச் செல்ல பக்கவாயில் உள்ளது. இதன் வழியே உள்ளே சென்று மேற்கிலுள்ள உள்வாயில் வழியே துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால் ஒரு புறத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன. அடுத்துள்ள மேற்கு நோக்கிய உள் வாயிலைக் கடந்து சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். நேரே மூலவர் தரிசனம். சிவலிங்கத் திருமேனி மணலால் ஆனது. தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.

உள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் கொண்டு, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலை. விஷ்ணுதுர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும் அழகான வேலைப்பாடுடன் உள்ளது. இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிஷத்தை காலூன்றி, (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம் காணத்தக்கது.

தல புராண வரலாறு

நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல் என்று பெயர். மேலும் இறைவனை அழைக்காமல் அவமதித்து தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம் இதுதான் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு "ஓ" என்று ஓலமிட்டதால் தக்கோலம் என்று பெயர் பெற்றதாக உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது. வடக்கு மதிலோரத்திலுள்ள கங்காதரர் சந்ந்தியின் மேற்குப் பிராகாரத்தில் சத்யகங்கை தீர்த்தம் உள்ளது. இதன் கரையிலுள்ள நந்தியின் வாயிலிருந்து தான் கங்கை நீர் பெருகி வந்தது. உததி முனிவர் வழிபட்டு அவர் வேண்டிக்கொண்டபடி நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம். இப்போதும் கல்லாற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள்.

சிறப்புகள்

கோபுரத்தில் பலவகைச் சிற்பங்கள் உள்ளன; அவற்றுள் மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத்தருளும் காட்சி காணத்தக்கது.

மூலவர்

சிவலிங்கத் திருமேனி; பிருதிவி (மணல்) லிங்கம்; தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம்; பழமையான மூர்த்தி.

கோஷ்ட மூர்த்தங்களில் - தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குற்றுக்காலிட்டு அபூர்வ காட்சி தருகின்றார்.

சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார்.

அருகில் ஓடும் கல்லாற்றின் கரையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் (கங்காதரேஸ்வரர்) கோயில் மிகவும் பழுதடைந்த நிலையில் பூஜைகளின்றி உள்ளது. இதன் மேற்கில் உள்ளது சத்திய கங்கை தீர்த்தம். கிழக்கில் உள்ள நந்தி வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்துகொண்டிருந்தது; தற்போது இல்லை. நந்தி வாயிலிருந்து விழும் நீர், சிவலிங்கத்தைச் சுற்றிச் சென்று வெளியில் வந்து, மீண்டும் மற்றொரு நந்தி வாயிலிருந்து விழுந்து, குளத்தில் நிரம்பி பின்னர் ஆற்றில் ஓடும் அமைப்பில் இது அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக