புதன், 10 ஜூன், 2020

இராவணனின் கவலை!...

தோல்வி என்பதை அறியாத இராவணன் இன்று தன் வீரத்திற்கு இழுக்கு நேர்ந்துவிட்டதை நினைத்து இராவணனால் ஒன்றும் பேச முடியவில்லை. இன்று ஒரு மனிதன் தன்னை 'இன்று போய் நாளை வா" என்று சொல்லும் அளவிற்கு தன் நிலைமை தாழ்ந்து போனதை நினைத்து ஏளனமாக சிரித்தான். பிறகு இராவணன் நிலத்தை பார்த்தவாறே தன் அரண்மனையை நோக்கிச் சென்றான்.

முதல் போர் முடிவு பெற்றது.
இறுதியாக இராவணனிடம் இருந்தது வீரம் மட்டும் தான். இராவணன் போரில் தன் பெருமைகளை இழந்துவிட்டு, இராமர் கொடுத்த உயிர் பிச்சையை மட்டும் வைத்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். 

இராவணன் இலங்கைக்குள் நுழையும் போது சூரியன் மறைய தொடங்கியது. இராவணன் இலங்கையில் நுழையும் போது அவன் எத்திசையும், யாரையும் பார்க்கவில்லை. தலையை குனிந்தவாறு அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்தான். அரண்மனையில் இராவணன் வரும்போது இருக்கும் பரபரப்பு அன்று அங்கு தென்படவில்லை. 

அங்கு இராவணனின் மனைவிமார்களும், உறவினர்களும், சேனைத்தலைவர்களும் நின்று கொண்டிருக்க அவன் யாரையும் பார்க்காமல் நேராக தன் அறைக்குச் சென்று போரில் எவ்வாறு வெல்வது என்பதைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.

இராவணன் மெய்க்காப்பாளனை அழைத்து தூதர்கள் நால்வரை அழைத்து வரும்படி சொன்னான். உடனே தூதர்கள் நால்வரும் அங்கு வந்துச் சேர்ந்தார்கள். அவர்கள் மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்பவர்கள். 

இராவணன் அவர்களிடம் நான்கு திசைகளுக்கும் சென்று அரக்கர்களை ஒன்று திரட்டி வரும்படி கூறினான். பின் இராவணன் யாரையும் பார்க்க விருப்பமின்றி தன் படுக்கைக்குச் சென்றான். சீதையை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டிருந்த இராவணனுக்கு இப்பொழுது கவலை தொற்றிக் கொண்டது. 

கவலையால் இராவணனுக்கு தூக்கம் வரவில்லை. நான் பெற்ற தோல்வியைக் கண்டு தேவர்கள் சிரிப்பார்கள். என் பகைவர்களும், மண்ணுலகத்தில் உள்ளோரும் சிரிப்பார்கள்.

அது மட்டுமின்றி அழகும், அன்பும், மென்மையும் உடைய சீதை என்னைப் பார்த்து சிரிப்பாளே என நினைத்து கவலை கொண்டான். இராவணன் தூக்கம் வராமல் தன் படுக்கையில் இருந்து எழுந்து அரசவைக்குச் சென்று தன் அரியணையில் அமர்ந்தான். 

இராவணன் கவலையுடன் இருப்பதைக் கண்டு இராவணனின் பாட்டன் மாலியவான், எழுந்து அன்புடன் கேட்டார். பேரப்பிள்ளையே! உன் முகம் ஏன் இவ்வளவு வாடி இருக்கின்றது. உன் துன்பத்திற்கான காரணம் என்னவென்று கேட்டார். 

இராவணன், பல வெற்றிகளை கண்ட நான் இன்று ஒரு மனிதனிடம் தோற்றுவிட்டேன். இராமன் என் சேனைகள் அனைத்தையும் அழித்து விட்டான். இந்திரன், சிவன், திருமால் ஆகிய மூவரையும் வென்ற பேராற்றல் உடைய நான், இராமனிடம் இன்று தோற்றுவிட்டேன்.

நான் திக் விஜயம் செய்தபோது இந்திரன், திருமால், பிரம்மன், ஈசன் என அனைவரையும் வென்று விட்டேன். ஆனால் இன்று ஒரு மனிதனான இராமனை என்னால் வெல்ல முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். இராமன் வீரம் நிறைந்தவன். 

அவன் என்னுடன் போர் புரியும்போது கோபமோ, பரபரப்போ தெரியவில்லை. மிகவும் நுணுக்கமாக போர் புரிந்தான். இன்று அவன் மிகுந்த கோபத்துடன் போர் புரிந்திருந்தால் நான் இன்று தங்கள் முன் பேசி கொண்டிருக்கமாட்டேன். 

இராமனின் போரின் வீரத்தை நான் என்னவென்று சொல்வது? இராமனின் பாணங்கள் அனைத்தும் எரிக்கும் வல்லமை உடையது. இராமரிடம் தன் பெருமைகள் அனைத்தையும் இழந்துவிட்டு, இங்கு வந்துள்ளேன் என மிகவும் வருத்தத்துடன் கூறினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்