திருக்குடமூக்கு (கும்பகோணம்)
இறைவன் பெயர்
கும்பேஸ்வரர்
இறைவி பெயர்
மங்களநாயகி
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
அரவிரி கோடனீட லணிகாவிரி
அப்பர்
பூவ ணத்தவன் புண்ணியன்
எப்படிப் போவது
கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் இத்தலம் இருக்கிறது. திருகுடந்தை கீழ்கோட்டம், திருகுடந்தைக் காரோணம் என்ற மேலும் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருசாரங்கபாணி கோவிலும் கும்பகோணம் நகரில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணம்
கும்பகோணம் அஞ்சல்
தஞ்சை மாவட்டம்
PIN - 612001
தொடர்புக்கு :-
0435 - 242 0276
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும்,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு
இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது.
பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.
குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம்,அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.
மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை,கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம் " என்னும் பெயரையும் பெற்றது.
தலவரலாற்றின் படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.
சிறப்புகள்
"கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.
உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர். இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.
இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.
கும்பகோணத்தில் குடமூக்கு - கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் - நாகேசுவர சுவாமி கோயில்;குடந்தைக் காரோணம் - சோமேசர் கோயில் என வழங்கப்படுகிறது.
மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி; ஏமரிஷி பூசித்த பதி.
மகாமகத் தீர்த்தக் கரையில் சுற்றிலும் பிரமதீர்த்தேசம், முகுந்தேசம், தனேசம், ரிசபேசம், பாணேசம், கோனேசம், பக்தேசம், பைரவேசம், அகத்தீசம்,வியாகேசம், கங்காதரேசம், பிரமேசம்,முத்ததீர்த்தேசம் முதலிய ஆலயங்கள் உள்ளன.
இந்நகரிலுள்ள 14 தீர்த்தங்களில் தடாகங்கள் - 7, கிணறுகள் - 3, காவிரித்துறைகள் - 4 ஆகும்.
மகாமகக் குளத் திருப்பணியும் அதைச்சுற்றிப் பதினாறு சிவாலய விமானங்களையும் அமைத்த மகான், அச்சுதப்ப நாயக்க மன்னனின் அமைச்சரான கோவிந்த தீக்ஷ¤தர் ஆவார். இவர் தன் துலாபாரத் தங்கத்தைக் கொண்டே இத்திருப்பணிகளையெல்லாம் செய்திருக்கிறார். கும்பேசுவர் கோயிலில் இவருடைய வடிவம் உள்ளது. இது மட்டுமல்லாது இம்மகான் தர்ம நூல்களில் சொல்லப்பட்ட எல்லா மகாதானங்களையும் செய்திருக்கிறார். அநேகமாக சோழர்களுக்குப்பின் ஆலயத் திருப்பணிகளை எல்லாம் திருத்தியமைத்தவர் இந்த மகான்.
இத்தலத்தில் பல கோயில்கள் இருப்பினும் பிரதானமானது கும்பேசுவரர் கோயிலேயாம்.
மண்டபத்தில் இடப்பால் திருஞானசம்பந்தரின்'திருவெழுக்கூற்றிருக்கை' தேர்வடிவில் வண்ணச் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
அம்பாள் சந்நிதியையடுத்து, அமுதகடத்தை வில்லாலடித்துச் சிதறச்செய்த மூர்த்தியாக - கிராதகோலத்தில் இறைவன் காட்சி தருகின்றார்.
கும்பேசுவரர் - சிவலிங்கத் திருமேனி; மணல் (பிருதிவி) லிங்கமாதலின் தங்கக் கவசம் சார்த்தப்பட்டுள்ளது. பாணத்தில் உச்சி கும்பத்தின் வாயைப் போலவுள்ளது.
திருக்குடந்தைப் புராணம் - தலபுராணம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக