Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 ஜூன், 2020

பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் பற்றிய தகவல்



 
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருகன்குளம் கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம்.

இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது.

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது.

இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான்.

சீதையை ராவணன் கடத்துவதை அருகன்குளம் பகுதியில் வைத்துப் பார்த்த ஜடாயு என்ற கழுகு அரசன், ராவணனை தடுத்து நிறுத்தினான். இதனால் ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் போர் ஏற்பட்டது.


இதில் ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டினான். இதில் காயமடைந்த ஜடாயு, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.

அந்த வழியாக வந்த ராமரும், லட்சுமணரும் துடித்துக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்தனர். உடனே ராமர், ஜடாயுவை தனது தொடையில் தூக்கிவைத்து தடவிக்கொடுத்தார்.

அப்போது ஜடாயு, சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் செல்கிறான் என்ற தகவலை சொல்லியது.

மேலும் தான் இறந்ததும் இறுதிச்சடங்கை ராமர் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்து விட்டு இறந்தது.

அதன்படி ஜடாயுவுக்கு, தாமிரபரணி ஆற்றங் கரையில் இறுதிச்சடங்கு செய்தார், ராமபிரான்.

அப்போது ஜடாயுவுக்கு தீர்த்தம் கொடுப்பதற்காக ஜடாயு தீர்த்தத்தை உருவாக்கி அதில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார்.

ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம், தாமிரபரணி நதிக்கரையில் ‘ஜடாயுத்துறை’ யாக இன்றும் அழைக்கப்படுகிறது.

ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ராமர், அவருக்கு மோட்சம் கிடைக்கவேண்டும் என்பதற்காக தாமிரபரணி நதிக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

அந்த லிங்கம் தான் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ராமலிங்க சுவாமி ஆகும். இந்த ஆலயத்தில் ராமலிங்க சுவாமி மூலவராக உள்ளார்.

வெளி மணிமண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி சன்னிதிகளும் உள்ளன.

மூலவருக்கு வடக்கு பகுதியில் தனிக் கோவிலாக ஜடாயுவுக்கு பிண்டம் போட்ட ‘பிண்ட ராமர்’ உள்ளார்.

இந்தக் கோவில் பிற்காலத்தில் வல்லபாண்டிய மன்னரால் புனரமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன.

ஆலயத்தின் அருகில் ஜடாயு தீர்த்தம், ராம தீர்த்தம், சிவ தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களும் உள்ளன.

இந்த தீர்த்தங்களின் அருகில் லட்சுமி நாராயணர் கோவிலும், காட்டு ராமர் கோவிலும், எட்டெழுத்து பெருமாள் கோவிலும், கோசாலையும் அமைந்திருக் கின்றன.

இந்த 3 தீர்த்தங்களும் ராமர் ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ஜடாயுத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

இதனால் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் புனித நீராடிவிட்டு ராமலிங்க சுவாமியையும், பிண்ட ராமரையும் வழிபட்டால், நமது குடும்பத்தில் உள்ள 27 தலைமுறையினர் செய்த பாவங்களும், தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

பித்ரு தோஷம் உள்ளவர்கள் இந்த ஜடாயுத்துறைக்கு வந்து தர்ப்பணம் கொடுத்து சுவாமியை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி குடும்பம் முன்னேற்றம் அடையும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கும், ராமருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அருகன்குளம் பழைய கிராமத்தில் உள்ள இக்கோவில் ராமேசுவரம் கோவிலுக்கு முந்தைய கோவில் என்பதால் ‘பழைய ராமேசுவரம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஏராளமானவர்கள்

இங்கு வந்து ஜடாயுத்துறையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, இத்தல இறைவனையும் வழிபடுகிறார்கள்.

(((இந்த கோவிலில் உள்ள கல் விளக்கில் இலுப்பை எண்ணெயும், நல்லெண்ணெயும் கலந்து ஊற்றி விளக்கு ஏற்றினால் குடும்ப தோஷம் நிவர்த்தியாகும்.))) இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும், தாழையூத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து கோவிலுக்கு சென்று வர மினிபஸ் இயக்கப்படுகிறது.

நெல்லை சந்திப்பு, தாழையூத்தில் இருந்து ஆட்டோவில் சென்று வரலாம். கோவில் அருகில் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக