மூர்க்க நாயனார்...!!
தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் அமைந்துள்ள பல ஊர்களில் உள்ள திருத்தலம்தான் திருவேற்காடு. இவ்வூரில் வாழ்ந்து வந்த வேளாளர் குடியில் பிறந்த சிவத்தொண்டர் ஒருவர் அதீத பற்றும், அன்பும் எம்பெருமானின் மீது கொண்டிருந்தார். அவருடைய இயற்பெயர் இன்னதென்று தெரியாமல் அவருடைய குணமே அவருக்கு பெயராக அமைந்தது. அப்பெயரே மூர்க்கர் என்பதாகும். இவருடைய பெயருக்கு ஏற்றவாறு இவருடைய குணமும் மற்றவர்கள் இடத்தில் இருந்து மிகவும் மாறுபட்டு இருந்தது.
அதாவது, இவருக்கு விவரம் தெரிந்ததில் இருந்து கங்கை கொண்ட சடைமுடி நாதனின் மீது மிகுந்த அன்பும், பற்றும் கொண்டிருந்தார். திருவெண்ணீற்றினையே மெய்ப்பொருள் என்று கருத்தில் கொண்டு வாழ்ந்து வந்தார். ஒவ்வொருவரும் ஒருவிதமான கலைகளில் தேர்ச்சி அடைந்து இருப்பார்கள். எவருக்கும் எக்கலைகளும் அமையாது என்று சொல்வதற்கு இல்லாமல் எம்பெருமானின் அருளால் இப்பூவுலகில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு கலையிலாவது தேர்ச்சி அடையும் விதத்தில் உள்ளோம்.
நாம் அறிந்த கலைகளை நாம் எவ்விதத்தில் பயன்படுத்துகின்றோம் என்பதை பொறுத்தே அதன் பலன்கள் நமக்கு சாதகமாக அமையும். அதேபோல் தான் மூர்க்கர் இளமை பருவத்தில் சூதாடுவதை நன்கு கற்றிருந்தார். அப்போட்டியில் இவரை வெற்றி கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இவருடைய இச்செயல்களினால் நாளடைவில் மக்களிடையில் நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயரை பெற்றார்.
வளரும் பருவம் முதலே எம்பெருமானை மகிழ்விப்பது என்பது அவரை வழிபடும் அடியார்களுக்கு தேவையான உணவை படைப்பது தமது கடமைகளில் ஒன்றாக எண்ணி வந்தார். அடியார்களுக்கு உணவு படைத்த பின்பு தாம் உண்பதை வழக்கமாக கொண்டு அதை இடைவிடாது பின்பற்றி வந்தார். இவருடைய இச்செயல்களால் இல்லத்திற்கு வருகை தரும் அடியார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியது. அடியார்களின் வருகை அதிகரிப்பதை எண்ணி மனம் மகிழ்ந்தார் மூர்க்க நாயனார்.
அவர்களுக்கு தேவையான அமுதை படைப்பதில் மிகவும் ஈடுபாட்டோடு செயல்பட்டார். நாளடைவில் மூர்க்கரிடம் இருந்துவந்த செல்வங்கள் குறைய துவங்கின. செல்வம் குறைய துவங்கியதை பற்றி எள்ளளவும் கவலை கொள்ளவில்லை. செல்வம் யாவும் முழுமையாக தீர்ந்தது. ஆனாலும் அவர் தன்னிடம் இருந்த மனைகளை விற்று அவற்றில் கிடைக்கும் பொருட்செல்வத்தை கொண்டு அடியார்களுக்கு உணவு படைக்கும் செயலை மேற்கொண்டார்.
மனைகளை விற்று கிடைத்த செல்வம் தீர்ந்ததும் தம்மிடம் இருந்த அனைத்து பொருட்களையும் விற்று தமது குறிக்கோளை இடைவிடாது நிறைவேற்றி வந்தார் மூர்க்க நாயனார். இந்நிலையில் வறுமையானது அவரை முழுமையாக பிடித்தது. அதாவது, அவரிடம் விற்று பொருள் ஈட்டுவதற்கு எந்த பொருட்களும் இல்லாத நிலை ஏற்பட்டது. இனி மேற்கொண்டு என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்து கொண்டிருந்தார். அந்த நிலையில் அவருக்கு ஒரு சிந்தனை தோன்றியது.
அதாவது இளமைப் பருவத்தில் தாம் கற்றிருந்த சூது மூலம் பொருள் ஈட்டலாம் என்று எண்ணி அவ்வூரில் உள்ளவர்களுடன் சூதாடத் தொடங்கினார். தான் அறிந்த சூதாட்டத்தையே பொருள் சேர்க்க பயன்படுத்திக் கொண்டார். சூதாட்டத்தின் மூலம் பலரை வெற்றிக் கொண்டு அதனால் கிடைத்த பொருட்களை கொண்டு எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கு தேவையான திருத்தொண்டுகள் பலவற்றை புரிந்து வந்தார்.
இவர் சூதாட்டம் ஆடினாலும் அதில் நேர்மையுடனும், சில தந்திரத்தை கொண்டும் இருந்தார். அதாவது, சூதாட ஆரம்பிக்கும் பொழுது முதல் ஆட்டத்தில் தம்மிடம் இருக்கும் பொருட்கள் யாவும் இழந்தாற்போல் ஒரு சூழலை உருவாக்குவார். ஆட்ட ஆரம்பத்தில் இவர் பொருள் இழப்பதை கண்ட எதிரி உற்சாகம் கொண்டு அடுத்த ஆட்டத்தில் எதிரானவர் இவருக்கு விளையாட தெரியவில்லை என்ற எண்ணத்தில் தம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் விளையாட வைப்பார். அதன் பின்பே மூர்க்கரின் சுயரூபம் தெரியவரும்.
சூதாட்டம் என்பதற்காக மூர்க்கர் எவரிடத்திலும் பொய்யாட்டம் ஆடமாட்டார். அதேவேளையில் தம்முடன் சூதாடுபவர்கள் யாராக இருந்தாலும் கள்ளத்தனமான ஆட்டமெல்லாம் ஆடினால் அப்பொழுது சற்றும் சிந்திக்காமல் தான் இடையில் சொருகி வைத்திருக்கும் கத்தியால் குத்திவிடுவார். இவருடைய இச்செயலால் இவரிடம் சூதாட்டம் விளையாட அவ்வூரில் உள்ள அனைவரும் அச்சம் கொண்டனர். மேலும் இவரிடம் விளையாடிய எவரும் வெற்றி பெறவில்லை. இக்காரணங்களினால் மக்கள் யாரும் இவரிடம் சூது விளையாட வரவில்லை.
பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மூர்க்கர் என்ன செய்வது? என்று சிந்தித்து பின்பு தம் ஊரை விடுத்து வெளியூர் சென்று சூதாட்டம் ஆடி பெரும் பொருட்களைச் சம்பாதிக்க தொடங்கினார். இவ்விதமாக கிடைத்த பொருட்களை எல்லாம் தமக்கு என எதையும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடி வந்த எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கு செலவிட்டு மகிழ்ந்தார். இவ்விதமாக நற்சூதர் மூர்க்கர் இறுதியில் எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்தார்.
சிவபுராணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக