Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜூலை, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 063

செருத்துணை நாயனார்...!!

சொல் வளமும், இயற்கை வளமும் நிரம்பியிருந்த சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரில் வீரமும், மற்றவர்களுக்கு உதவும் குணமும் கொண்ட வேளாண்குடியில் செருத்துணை நாயனார் என்னும் சிவனடியார் பிறந்தார். இவர் சிறு வயது முதலே சிவபிரான் திருவடியின் மீது மிகுந்த அன்பும், பற்றும் உடையவராக திகழ்ந்தார். இவர் திருவாரூர் சென்று இறைவனது திருக்கோவில் பணிகளை செய்து காலந்தோறும் இறைவனை வழிபட்டு வந்தார்.

எம்பெருமானின் மீது மிகுந்த பற்றும், ஆராக்காதலும் கொண்டிருந்த நாயனார், எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கு ஏதேனும் சிறு பாதிப்புகளை யாரேனும் ஏற்படுத்தினாலும் அவர்களை முதலில் கண்டிப்பார். அவர் கூறியதை கேட்காமல் மீண்டும் அதே தவறுகளை செய்தால் அவர்களை தண்டிப்பார். அடியார்களுக்கு தேவையான உதவிகளையும், அவர்களை காப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தார். எம்பெருமானுக்கு நடைபெறும் பூஜைகளில் எவ்விதமான தடைகளும் ஏற்படாத வண்ணம் கவனித்து கொண்டிருந்தார்.

இவ்விதமாக சென்று கொண்டிருந்த செருத்துணை நாயனாரிடம் எம்பெருமான் அடியார்களின் அன்பையும், பற்றையும் உலகறிய செய்ய திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்த தகுந்த காலத்தை அமைத்தார். காடவர் குலத்தில், எம்பெருமானின் திருவடிகளையே அன்றி வேறு எதையும் அறியாத கழற்சிங்க நாயனார் என்பவர் இருந்தார். அவர் பல்லவ நாட்டை எம்பெருமானின் திருவருளால் அறநெறி குன்றாது அரசாட்சி செய்து வந்தார். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானை தரிசனம் செய்ய எண்ணினார்.

அதன் பொருட்டு தமது துணைவியுடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டு திருவாரூரை அடைந்த மன்னர் பிறைமுடி பெருமான் குடிக்கொண்டிருக்கும் திருத்தலத்தை அடைந்தார். இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட நாயகரின் முன் விழுந்து, வணங்கி எழுந்தார். இப்பெருமானின் அருள்வடிவத்தில் மெய்மறந்து விழிகளில் ஆனந்த கண்ணீர் மல்க... உள்ளத்தில் அன்பு பொங்க... பக்தியில் மூழ்கி வழிபட்டு கொண்டிருந்தார் மன்னர்.

எழில் மிகுந்த சிற்பங்களை கண்டும்,

திருத்தலத்தில் உள்ள பல்வேறு சிறப்புகள் எல்லாவற்றையும் தனித்தனியே பார்த்து கொண்டும்,

அழகிய எழில் மிகுந்த வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்களை கண்டு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் திருக்கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார் பட்டத்து நாயகி.

திருக்கோவிலை வலம் வந்து கொண்டிருந்த வேளையில் அரசியார் மலர் தொடுத்து கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தார்.

அவ்விடத்தில் தொண்டர்கள் யாவரும் அமர்ந்து இறைவனுக்கு சாற்றுவதற்காக பூத்தொடுத்து கொண்டிருந்தனர். மன ஓட்டத்தை விடுத்து, மனதை கவரும் வகையிலான அழகிய வண்ண மலர்களைக் கண்டதும் அரசியாருக்கு மகிழ்ச்சி உண்டானது. மேலும் அம்மலர்களில் இருந்து வெளிப்பட்டு கொண்டிருந்த வாசனையில் சற்று தன் நிலையை மறந்து நின்று கொண்டிருந்தார். நறுமணத்தில் தன்னையும் மறந்து மேடையில் இருந்து விழுந்த மலர் ஒன்றை தரையில் கண்டார்.

அதை கண்டதும் அம்மலர்களை தனது கரத்தில் எடுத்து முகர்ந்து பார்த்து கொண்டிருந்தார். மலர்களை தொடுத்து கொண்டு இருந்த தொண்டர் கூட்டத்தில் செருத்துணையார் இருந்தார். இவர் அடியார்களுக்கு அடியாராக இருந்தாலும் தெரிந்தோ, தெரியாமலோ எவரேனும் பிழைகள் இழைத்தார்கள் எனில் அவர்களை உடனே கண்டிப்பார் அல்லது தண்டிப்பார்.

அரசியாரின் செயலைக் கண்டதும் இறைவனுக்கு சாற்றுவதற்காக இருந்த மலர்களை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டார் என்பதைக் கண்டதும் செருத்துணையாருக்கு மனதிலும், கண்களிலும் கோபக்கணலானது வெளிப்பட துவங்கியது. கோபம் கொண்ட செருத்துணையார் பல்லவ நாட்டின் அரசியாயிற்றே என்று கூட பார்க்காமல் எம்பெருமானின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்து பிழை புரிந்துவிட்டாரே...!! என அரசியாரின் மேல் கோபம் கொண்டார்.

அரசியார் மலர்களை எடுத்து முகர்ந்து பார்த்ததால் அரசியாரின் மூக்கை தான் வைத்திருந்த வாளால் சிவினார். செருத்துணை நாயனார் செய்த செயலால் பூமகள் போன்ற பட்டத்து அரசி கீழே விழுந்து அழுதார். பட்டத்து அரசியின் அழுகுரலானது மன்னரின் செவிக்கு எட்டியது. மன்னரும் அழுகுரல் கேட்கும் திசையை நோக்கி விரைந்து வந்து கொண்டு இருந்தார்.

அவ்விடத்தை அடைந்ததும் மன்னர் கண்ட காட்சி அவரை நிலைக்குலைய செய்தது. அதாவது தனது பட்டத்து அரசி ரத்தம் வெளியேறிய நிலையில் நிலத்தில் துடித்து துவண்டு கிடக்கும் பரிதாப நிலையை கண்டார். பட்டத்து அரசியின் நிலையை கண்டதும் மன்னருக்கு சினம் வெளிப்பட துவங்கியது. எவருக்கும் அஞ்சாமல் இக்கொடிய பாவச்செயலை இத்தலத்தில் செய்தது யார்? என்று கண்களிலும், வாக்குகளிலும் தீப்பொறி பறக்கக் கேட்டார்.

மன்னரின் குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் மனதில் பயம் கொண்டவாறு என்ன உரைப்பது? என்று அறியாமல் திகைத்து கொண்டு இருந்தனர். அவ்வேளையில் எவருக்கும் பயம் கொள்ளாமல் இச்செயலை புரிந்தது யாமே என்று மிகவும் துணிவுடன் கூறிய குரல் வந்த திசையை நோக்கிய மன்னர், செருத்துணையாரை கண்டதும் அவருக்கு சினமானது குறையத் துவங்கியது.

அதாவது அடியார் தோற்றம் கொண்ட இவர் இச்செயலை செய்ததற்கு எமது தேவியார் செய்த பிழைதான் யாது? என்பதை அறியத் துடித்தது மன்னரின் மனம். மன்னரின் முகத்திலும், மனதிலும் எழுந்த குழப்பத்தை புரிந்து கொண்ட செருத்துணையார், அரசியார் சுவாமிக்கு சாற்றக்கூடிய மலரை எடுத்து முகர்ந்தமையால் நானே இப்படி செய்தேன் என்று கூறினார்.

செருத்துணையார் மொழிந்ததை கேட்டு மன்னர் மனம் கலங்கினார்.

அரசர் செருத்துணையாரை கரங்கூப்பி வணங்கி...

அடியாரே...!!

தங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை என்று கூறி தனது இடையில் இருந்த உடைவாளை தனது கரங்களினால் எடுத்தார்.

முதலில் மலரை முகர்ந்த மூக்கினை வெட்டாமல்,

மலரை எடுத்த கரத்தை அல்லவா முதலில் தாங்கள் துண்டித்திருக்க வேண்டும்?

என்று உரைத்ததோடு நில்லாமல் சட்டென்று அரசியாரின் மலரை பற்றி எடுத்த கரத்தினை இமைப்பொழுதில் வெட்டினார்.

மன்னரின் உயர்ந்த பக்தி நிலையை கண்டு செருத்துணையார் மன்னருக்கு தலை வணங்கினார். அப்பொழுது அடியார்களிடத்து அன்பு கொண்ட புற்றிடங்கொண்ட பெருமான் அவ்விடத்தில் இருந்த அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு எம்பெருமான் சக்திதேவியோடு ரிஷபத்தில் எழுந்தருளினார். காணக்கிடைக்காத அருங்காட்சியான எம்பெருமானை ரிஷப வாகனத்தில் உமையவளுடன் கண்டதும் அவரை பணிந்து வணங்கினர்.

எம்பெருமான் தன் அருள்பார்வையால் பட்டத்து அரசியாருக்கு ஏற்பட்ட இன்னல்களை நீக்கி அருளினார்.

பின்பு அடியார்களை நோக்கி... உம்முடைய அன்பினால் யாம் மனம் மகிழ்ந்தோம் என்றும்,

உலக கடமைகளை மனம் மகிழ்ந்த வண்ணமாக முடித்துவிட்டு, எம்முடைய திருவடிகளை வந்து அடைவீர்களாக...!! என்று கூறி மறைந்தார்.

செருத்துணையாரும், கழற்சிங்க மன்னரும் எம்பெருமானின் மீது கொண்ட சிவபக்தியையும், அடியார்களிடத்து கொண்டுள்ள பக்தியையும், அன்பையும் கண்ட அடியார்கள் அவர்களை பலவாராக போற்றி பணிந்தனர்.

மன்னர், செருத்துணையாரை நோக்கி அன்பு கொண்ட பார்வையால், தங்களின் உதவியால் யாருக்கும் கிடைக்காத பேறு கிடைக்க பெற்றேன் என்று உரைத்த வண்ணமாக வணங்கினார். செருத்துணையாரும், மன்னரை பார்த்து எல்லாம் நாம் வணங்கும் எம்பெருமான் முன்பே நிர்ணயித்த செயலாகும் என்று உரைத்த வண்ணமாக... ஒருவரை ஒருவர் தழுவிய வண்ணமாக... பிரியா விடையுடன் தங்களின் பணிகளை மேற்கொள்ள பிரிந்து சென்றனர். இறுதியில் செருத்துணை நாயனார் தம்முடைய பிறவியில் இறுதி காலம் வரை எம்பெருமானிடத்தில் மிகுந்த பக்தி கொண்டு, அவருடைய திருவடியை அடைந்து, என்றும் பிறவா நிலையை அடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக