தெற்கு காஷ்மீரின் ஷோபியான்
(Shopian) மாவட்டத்தில் உள்ள துன்னடி
கிராமத்தில் (Dunnadi Village) வசிக்கும் மக்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியாக
உள்ளனர். ஏனெனில் சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்
முறையாக அவர்களது கிராமம் மின்சார வெளிச்சத்தைக் கண்டுள்ளது. மக்களின் இந்த
மகிழ்ச்சியால் அந்த கிராமமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. மின்சாரத் துறை மற்றும்
மாவட்ட நிர்வாகத்தின் பல முயற்சிகளுக்குப் பிறகு, கிராமவாசிகளின் வீடுகளுக்கு
இன்று வெளிச்சம் கிடைத்துள்ளது.
கிராமத்தில் வசிக்கும் முஹம்மது
அஸ்லம், அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். தான் குழந்தை பருவத்திலிருந்தே
கிராமத்தில் மின்சாரத்தைக் கண்டதில்லை என்று அவர் கூறினார். இரவு நேரங்களில்
இருட்டியவுடன் லாந்தர் அல்லது விளக்குகளை ஏற்றியே இந்த கிராம மக்கள் வாழ்ந்து
வந்தனர். குழந்தைகளும் விளக்கின் வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டி இருந்தது.
ஆனால் தற்போது மின்சாரத் துறை ஒரு வாரத்தில் மின்சாரத்தை இந்த கிராமத்திற்கு
கொண்டு வந்து விட்டது. இதற்கு கிராம மக்கள் அனைவரும் மின்சாரத் துறைக்கு நன்றி
செலுத்துகிறார்கள். தங்கள் கிராமத்தைப் போலவே தங்கள் குழந்தைகளின் வாழ்வும் இனி
ஒளி பெறும் என கிராமவாசிகள் நம்புகிறார்கள்.
இந்த கிராமங்களில் பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனாவின் (Pradhan Mantri
Sahaj Bijli Har Ghar Yojana) கீழ் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த
பகுதியில் ஐந்து பெரிய ட்ரான்ஸ்ஃபார்மர்களை மின்சாரத் துறை நிறுவியுள்ளது. மத்திய
அரசின் உத்தரவைத் தொடர்ந்து, மின்சாரத் துறை இந்த வேலையை வெறும் 7 நாட்களில்
செய்து முடித்தது. இன்று அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம்
வந்துள்ளது. தொலைதூரப் பகுதிகளில் மின்சாரம் இல்லை என்றும், விரைவாக பணிகளை
மேற்கொண்டு கிராமங்களுக்குள் மின்சார இணைப்புகளை அமைத்துள்ளதாகவும் அதிகாரி
கூறுகிறார். இனி கிராமவாசிகள் தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை.
இந்த பகுதி கெல்லரின் தொலைதூர
பகுதியில் உள்ளது. இதுவரை இங்கு மின்சார வசதி அளிக்கப்படவில்லை என்று ஷோபியான்
துணை ஆணையர் கூறினார். துரித கதியில் 5 ட்ரான்ஸ்ஃபார்மர்களும் 11 KV-யின் 35-40
கம்பங்களும் நிறுவப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்
வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னரும் இன்னும் மின்சாரம் சென்றடையாத பல
கிராமங்கள் காஷ்மீரில் உள்ளன என்றும் விரைவிலேயே அந்த கிராமங்களும் மின்சார
ஒளியைப் பெறும் என்றும் துணை ஆணையர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக