புதன், 1 ஜூலை, 2020

அதிகாயன் போருக்கு செல்லுதல்!

இராவணன் கோபத்துடன் ஆலோசனை மண்டபத்தை அடைந்தான். அங்கு நின்று கொண்டிருந்த அமைச்சர்களை பார்த்து, நீங்கள் எல்லாம் வீரர்களா? இல்லை கோழைகளா? உங்கள் உடம்பில் வீர இரத்தம் ஓடுகிறதா? இல்லை கழுநீர் ஓடுகிறதா? நான் இன்று என் அருமை தம்பியை இழந்துவிட்டேன்.

ஆனால் நீங்கள் இங்கு கல் போல் அசையாமல் நின்று கொண்டு இருக்கிறீர்கள். பகைவர்களை அழித்து வெற்றியுடன் திரும்புவோம் என வீர வசனம் பேசி கொண்டு சென்றீர்கள். நீங்கள் என் தம்பிக்கு துணையாக இருந்து அவனை காப்பாற்றவும் இல்லை, போரில் வெற்றி பெறவும் இல்லை. 

இனி போரில் வெற்றி பெற முடியும் என்றால் மட்டுமே போருக்குச் செல்லுங்கள். அப்படி இல்லையென்றால் யாரும் எங்கும் செல்ல வேண்டாம். என்னிடம் சொல்லுங்கள் நானே போருக்குச் செல்கிறேன் என அமைச்சர்களை மிக கடுமையாக பேசினான். இராவணன் சொன்னதைக் கேட்டு இராவணனின் மகன் அதிகாயன் எரிமலை போல் பொங்கி எழுந்தான்.

அதிகாயன்

அதிகாயன், இராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவான். மலை போன்ற பெரிய உருவம் கொண்டவன். பிரம்மாவை நோக்கி தவமிருந்து கவசம், தங்க ரதம் முதலிய பல வரங்களை பெற்றவன். அறநெறியை உணர்ந்தவன். வீரத்தில் சிறந்தவன். ஆலோசனைகள் சொல்லுவதில் வல்லவன், வேதங்களை முழுமையாகக் கற்றறிந்தவன். எதிரிப்படைகளைத் துண்டிப்பதில் சிறந்தவன். இவன் இந்திரனின் வஜ்ராயுதத்தையே அடக்கியவன்.

தந்தையே! தாங்கள் தம்பியை இழந்து தவிப்பது போல் அந்த இராமனின் தம்பி இலட்சுமணனை கொன்று அவனுக்கு உங்களின் வலியை கொடுப்பேன். நான் போருக்கு செல்கிறேன். தாங்கள் போருக்கு தனியாக செல்ல சொன்னாலும் சரி, சேனைகளை அழைத்து கொண்டு செல்ல சொன்னாலும் சரி. 

நான் அவ்வாறே செய்கிறேன். தாங்கள் எனக்கு விடை கொடுங்கள் என்றான். அதிகாயன் சொன்னதைக் கேட்ட இராவணன், அவனுக்கு பெரும் சேனையை அனுப்பி வைத்தான். சிறந்த வீரர்களான கும்பன், நிகும்பன், அகம்பன் ஆகியோரையும் அதிகாயன் தேருக்கு முன்பாகவும், பின்பாகவும் செல்லும்படி ஆணையிட்டு அனுப்பினான். 

அதிகாயன் இராவணனிடம் இருந்து விடைப்பெற்று, கவசத்தை அணிந்து கொண்டு கையில் வில்லையும், உடைவாளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். கோடிக்கணக்கில் யானைப்படையும், தேர்ப்படையும் உடன் சென்றது.

அதிகாயன் போர்களத்திற்கு வந்தடைந்தான். அங்கு இராமனால் ஏற்பட்ட அரக்க சேனைகளின் அழிவைக் கண்டு வருந்தினான். கும்பகர்ணனின் உடல் முண்டமாக கிடப்பதை கண்டு துடிதுடித்தான். 

இதை காணவா நான் இங்கு வந்தேன் என புலம்பி அழுதான். பிறகு அவன் கோபங்கொண்டு எழுந்தான். கும்பகர்ணனை கொன்ற இராமனின் தம்பி இலட்சுமணனை கொன்று, இராமனுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துவேன். 

அப்பொழுது தான் என் மனம் சாந்தமடையும் என்றான். இலட்சுமணனை என்னுடன் போர் புரிய வருமாறு மயிடன் என்னும் அரக்கனை தூது சொல்ல அனுப்பினான். மயிடன், இராமர் இருக்கும் இருப்பிடத்தை அடைந்தான். 

அவனை பார்த்த வானரங்கள், அவனை துன்புறுத்தினர். இராமர் அவர்களை தடுத்து நிறுத்தி தூதுவர்களாக வந்தவர்களை துன்புறுத்தக் கூடாது என தடுத்து நிறுத்தினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்