கீழே ஆண்களின் கருவளத்தைப் பாதித்து, மலட்டுத்தன்மையை உண்டாக்கக்கூடிய சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த உணவுகளை ஆண்கள் உண்பதைத் தவிர்த்து வந்தால், விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது அந்த உணவுகளை எவையென்று காண்போம்.
கார்போனேட்டட் பானங்கள்
கார்போனேட்டட் பானங்களான குளிர்பானம் அல்லது விளையாட்டு பானம் போன்றவை விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும். மனித இனப்பெருக்க இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கார்போனேட்டட் பானங்களைத் தவறாமல் குடிப்பது மோசமான விந்தணு இயக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே அடிக்கடி சோடா பானங்களை வாங்கிக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், உடனே அப்பழக்கத்தைக் கைவிடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவது விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பாதிக்கும். 2014 ஆம் ஆண்டின் ஹார்வர்டு ஆய்வின் படி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகமாக உட்கொண்ட ஆண்களில் குறைவான அளவில் சாப்பிட்டவர்களை விட 23 சதவீதம் விந்தணுக்கள் குறைவாக உள்ளன. தொற்றுநோயியல் இதழின் மற்றொரு ஆய்வில், பதப்படுத்தப்பட்ட இறைச்சி குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கையுடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது.
ஆல்கஹால்
மது அருந்துவதை நிறுத்த சொல்வதற்கு மற்றொரு காரணமும் இது தான். எவ்வளவு அதிகம் நீங்கள் ஆல்கஹால் குடிக்கிறீர்களோ, அந்த அளவில் விந்தணுக்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்படும். சில ஆய்வுகளில், மிதமான அளவில் மது அருந்தினால் கூட அது விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக கூறுகின்றன.
சீஸ் மற்றும் ஃபுல் க்ரீம் மில்க்
2013 இல் மனித இனப்பெருக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகளவிலான சீஸ் மற்றும் கொழுப்பு அதிகம் நிறைந்த பால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பாதிப்பது தெரிய வந்தது. பால் பொருட்களால் உடலுக்குத் தேவையான புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கலாம். ஆனால் கொழுப்பு அதிகம் நிறைந்த பால் பொருட்களான சீஸ் மற்றும் அதிக கொழுப்புள்ள பாலைத் தவிர்க்க வேண்டும்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்:
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் நற்பதமான உணவுகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் நல்லதல்ல, விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கும் தான் நல்லது. இங்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க டயட்டில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வாழைப்பழம்
வாழைப்பழங்கள் ஆண்களின் பாலுணர்ச்சியை மேம்படுத்துகின்றன மற்றும் பாலியல் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு அதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி1 நிறைந்திருப்பதால், அவை ஆண்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்கும்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலி ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு இதில் கேரட், பசலைக்கீரை, ஆப்ரிகாட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றைப் போல் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது.
வால்நட்ஸ்
ஆரோக்கியமான விந்தணுக்களைப் பெற தேவையாக முக்கியமான ஊட்டச்சத்து தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள். இது வால்நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஆண்கள் தினமும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், பிறப்புறுப்பு பகுதிகளில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, ஆண்களின் கருவளம் அதிகரிக்கும்.
பூண்டு
பூண்டு ஆண்களின் கருவளத்தில் மாயங்களை ஏற்படுத்த வல்ல ஒரு சிறப்பான உணவுப் பொருள். பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் செலினியம், விந்தணுக்கள் பாதிப்படைவதில் இருந்து பாதுகாக்கும் மற்றும் அதன் தரத்தை அதிகரிக்கும்.
டார்க் சாக்லேட்
சாக்லேட் அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவுப் பொருள். அதிலும் டார்க் சாக்லேட் ஆண்களின் கருவளத்திற்கு நன்மையளிக்கக்கூடியது. இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும். ஆனால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு துண்டுகளுக்கு மேல் டார்க் சாக்லேட் சாப்பிடக்கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகள்
வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகள் ஆண்களின் கருவளத்தை மேம்படுத்த உதவும். இந்த சத்து விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க உதவி புரிந்து, விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக