Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 17 ஜூலை, 2020

இந்திரஜித் இலட்சுமணன் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவுதல்...!

இராவணன் இந்திரஜித்தை அழைத்து, மகனே! படைத்தலைவர்களும், கரன் மகனான மகரக்கண்ணனும் போரில் மாண்டனர். இப்போரில் உன்னைத் தவிர வேறு எவராலும் வெல்ல முடியாது. உனக்கு நிகரான மாவீரர்கள் இந்த உலகில் இல்லை. 

அந்த இராம, இலட்சுமணனை உன்னைத் தவிர வேறு எவராலும் வெல்ல முடியாது. நீ போருக்கு சென்று வெற்றியுடன் திரும்பி வா! எனக் கூறி விடை கொடுத்தான். இந்திரஜித் தன் தந்தையை வணங்கி போருக்கு புறப்பட்டான். இந்திரஜித், ஆயிரம் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, அசுர சேனைகள் புடைசூழ போர்க்களத்திற்கு வந்துச் சேர்ந்தான். 

அவனை பார்த்த வானர வீரர்கள் சிலர் பயத்தில் ஓடி ஒளிந்தனர். இராமர் வானர வீரர்களுக்கு பயம் நீங்க ஆறுதல் கூறினார். இராமர், அனுமனின் தோளிலும், இலட்சுமணன் அங்கதன் தோளிலும் ஏறி போர் புரிய தொடங்கினர்.

இராமரும், இலட்சுமணரும் தங்கள் கர வேகத்தையும், வில்வேகத்தையும் கொண்டு போர் புரிந்து கொண்டு இருந்தனர். இராம இலட்சுமணனின் வில் திறமையைக் கண்டு இந்திரஜித் வியந்து நின்றான். இராம இலட்சுமணனின் போர் திறமையைக் கண்டு அரக்க சேனைகள் பயந்து ஓடின. 

இந்திரஜித் நான் தனியாகவே போர் புரிந்து கொள்கிறேன் எனக் கூறி போர் புரிந்தான். அப்பொழுது இராமர் அவனின் தேரை உடைத்தெறிந்தார். இலட்சுமணனும், இந்திரஜித்தும் கடுமையாக போர் புரிந்தனர். அப்பொழுது இந்திரஜித் தன் மாய திறமையால் வானத்தில் போய் மறைந்தான். இலட்சுமணன் இராமரை பார்த்து, அண்ணா! நான் இப்பொழுது இவன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஏவ போகிறேன் என்றான்.

இராமர், தம்பி இலட்சுமணா! நீ பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினால் ஒரு நொடியில் உலகமே அழிந்துவிடும். அதனால் நீ பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த வேண்டாம் என தடுத்து நிறுத்தினார். 

போரில் தோற்று மாய வேலை செய்து மறைந்த இந்திரஜித் யாரும் அறியாமல் இலங்கை நகரை அடைந்தான். இந்திரஜித்தை காணாததால், அவன் பயந்து ஓடி விட்டான் என நினைத்து இராம இலட்சுமணன் உள்ளிட்ட வானரப்படைகள் இளைப்பாறினர். இராமர், வானரப் படைகளுக்கு உணவு பொருட்களை கொண்டு வருமாறு விபீஷணனை அனுப்பினார். 

இராமர், தன் படைக்கலன்களுக்கு பூஜை செய்ய தனியாகச் சென்று விட்டார். இலட்சுமணன் மற்றும் மற்ற வானர வீரர்கள் மட்டுமே போர்க்களத்தில் இருந்தனர். இந்திரஜித் அரண்மனைக்கு சென்று இராவணனிடம் தான் மறைந்து நின்று பிரம்மாஸ்திரத்தை விடுவது என முடிவு செய்தான்.

அதற்கு மகோதரனை முதலில் சென்று போர் புரியுமாறு கூறினான். அவன் மாய போர் செய்து கொண்டிருக்கையில் நான் பிரம்மாஸ்திரத்தை செலுத்தி விடுவேன் எனக் கூறினான். (மாயப் போர் என்பது ஒருவரை ஒருவர் பார்க்காமல் போர் புரிவது.) மகோதரன் போர்க்களத்தில் மாய போர் புரிந்தான். 

அவன் ஆங்காங்கே நின்று போர் புரிந்தான். இதை கவனித்த இலட்சுமணன், பாசுபதாஸ்திரத்தை ஏவினார். இதில் அரக்க சேனையும், அவர்களது மாயமும் எரிந்து போனது. மாய விலகிய மகோதரன் அவ்விடத்தை விட்டு ஓடினான். அப்போது இந்திரஜித் யாரும் அறியாத வண்ணம் மறைந்து இருந்து பிரம்மாஸ்திரத்திற்கான மந்திரத்தை சொல்லிக் கொண்டு இருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக