தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வேளையில் கோவை போலீசாரின் புதிய முயற்சியை இங்கே காணலாம்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க பரிசோதனைகளை அதிகப்படுத்துவதே சரியான வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். கொரோனா தொற்றோடு அரசு அலுவலகங்களுக்கு வந்தால் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள்வது அவசியம். இந்நிலையில் கோவையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அங்கு புகார் அளிக்க வருபவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வரவேற்பு அறையில் இருந்து ஜூம் செயலி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி லேப் டாப், வெப் கேம் உள்ளிட்டவை பொருத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் வீடியோ மூலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இந்தப் புதிய முறை இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக காவல்துறையில் முதன்முறையாக ஜூம் செயலி மூலம் விசாரணை செய்யும் முறை கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக