Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜூலை, 2020

ஜாம்பவான் சஞ்சீவி மலைக்கு செல்ல வழிகாட்டுதல்!

விபீஷணன் பிரம்மாஸ்திரத்தால் மாளாதவர் எவரேனும் உள்ளார்களா எனச் சுற்றியும் பார்த்தான். உடனே அவனின் கண்களில் அனுமன் தென்பட்டான். அனுமன் அருகில் சென்று, அவன் மேல் பட்டிருந்த அம்புகளை தூக்கி எறிந்தான். 

பிறகு தண்ணீரைக் கொண்டு அனுமனின் முகத்தில் தெளித்தான். அனுமன் இராம இராம என சொல்லிக் கொண்டு எழுந்தான். விபீஷணனை பார்த்த அனுமன் மகிழ்ச்சியில் கட்டி தழுவிக் கொண்டான். பிறகு அனுமன், விபீஷணா! இராமர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? எனக் கேட்டான். 

விபீஷணன், இலட்சுமணனின் நிலைமையை கண்ட இராமர் அழுது தோய்ந்து மயக்கத்தில் உள்ளார் எனக் கூறினான். பிறகு இருவரும் இராம இலட்சுமணரும் மற்றும் மற்ற வானர வீரர்களும் இந்த இடர்ப்பாட்டில் இருந்து மீள்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா என யோசித்தனர்.

அனுமனுக்கு உடனே ஜாம்பவான் ஞாபகம் வந்தது. உடனே விபீஷணனிடம் ஜாம்பவான் எங்கே? அவனுக்கு இறப்பு என்பது கிடையாது. 

அவன் நமக்கு ஏதேனும் நல்ல வழியை காட்டுவான் என்றான். பிறகு இருவரும் ஜாம்பவானை தேடினர். ஜாம்பவான், உடலெங்கும் அம்புகள் துளைத்ததால் மிகுந்த துன்பத்துடனும், சோர்வைடைந்த உணர்விலும், கண்கள் மங்கிய நிலையில் மயக்கத்தில் இருந்த ஜாம்பவானை கண்டனர். 

தன்னை நோக்கி யாரோ வருவதை உணர்ந்த ஜாம்பவான், வருவது யார்? என்னை காக்க வந்த இராமனா? இல்லை இலட்சுமணனா? அல்லது அனுமனா? இல்லை விபீஷணனா? என எண்ணினான். ஜாம்பவானை பார்த்த விபீஷணன் மகிழ்ச்சியில் கண்டுவிட்டேன்! கண்டுவிட்டேன்! எனக் கத்தினான். 

குரலைக் கேட்டு வந்திருப்பது விபீஷணன் என்பதை அறிந்து கொண்டான், ஜாம்பவான். பிறகு அருகில் இருப்பவன் யார்? என்பதை அறியாமல், நீங்கள் யார்? எனக் கேட்டான். அனுமன், நான் அடியேன் அனுமன் வந்திருக்கிறேன் என்றான். இதைக்கேட்ட ஜாம்பவான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

நாம் இறக்கவில்லை, பிழைத்துக் கொண்டோம் என மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். பிறகு ஜாம்பவான் இராம இலட்சுமணர், வானரங்களின் நிலைமை கேட்டு அறிந்துக் கொண்டான். 

இதைக் கேட்ட ஜாம்பவான், இவர்கள் அனைவரும் பிழைக்க வைக்க அனுமன் ஒருவனால் மட்டுமே முடியும் என்றான். அனுமனே! நீ உடனே சஞ்சீவி மலைக்குச் சென்று சாவா மருந்தைக் கொண்டு வந்தால் இங்கு உள்ள அனைவரும் பிழைத்து எழுவார்கள். அங்கு பல அதிசய மூலிகைகள் இருக்கின்றன. 

இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் மருந்து, உடல் பல துண்டுகளாகப் பிளவுபட்டுப் போயிருந்தால் அதனை ஒட்ட வைக்கும் மருந்து, உடலில் பாய்ந்த ஆயுதங்களை வெளியே எடுக்கும் மருந்து, சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழையபடியே பெறுவதற்கான மருந்து என்று தனித்தனியாக உள்ளது. 

அங்கு சென்று அந்த மருந்துகளை கொண்டுவா. தாமதம் செய்தால் பெரிய இழப்பு ஏற்படும். அம்மலைக்கு போகும் வழியை நான் உனக்கு கூறுகிறேன் என்றான். தென் கடலுக்கு ஒன்பதனாயிரம் தொலைவில் இமயமலை இருக்கின்றது. இமயத்துக்கு அப்பால் ஒன்பதனாயிரம் தொலைவில் ஏமகூட மலை இருக்கிறது. 
அம்மலைக்கு அப்பால் ஒன்பதனாயிரம் தூரத்தில் நிடதமலை இருக்கின்றது. அதற்கு அப்பால் ஒன்பதனாயிரம் தொலைவில் மேரு மலை இருக்கிறது. மேரு மலைக்கு அப்பால் ஒன்பதனாயிரம் தூரத்தில் நீலகிரி இருக்கின்றது. நீலகிரிக்கு அப்பால் நாலாயிரம் தூரத்தை கடந்தால் மருந்துமலை இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக