
உலகம் முழுவதும் அதிவேக வையர்லெஸ் பிராண்ட்பேன்ட்
சேவையை என்ற மிகப்பெரிய இலக்கு உடன் உருவாக்கப்பட்ட பிரிட்டன் நிறுவனமான ஒன்வெப் திவால்
ஆன நிலையில் இந்நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் மற்றும்
பிரிட்டன் அரசும் சுமார் 1 பில்லியன் டாலர் தொகைக்கு ஏலத்தில் கைப்பற்றியுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவுடன் தொடர்ந்து
போட்டி போட்டு வரும் ஏர்டெல், இந்நிறுவனத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டும் செல்லும்
முடிவுடன் இந்த OneWeb நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
இந்த நிறுவனத்தில் என்ன நடக்கிறது..? ஏன்
திவால் ஆனது..?
1 பில்லியன் டாலர் கூட்டணி
திவால் ஆன OneWeb நிறுவனத்தைப் பிரிட்டன்
அரசும், ஏர்டெல் நிறுவனமும் இணைந்து கைப்பற்றியுள்ளது. இரு தரப்பும் சுமார் 500 மில்லியன்
டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து இந்நிறுவனத்தில் தலா 45 சதவீத பங்குகளை இரு நிறுவனங்களும்
பெறுகின்றனர். எஞ்சியுள்ள 10 சதவீத பங்குகளைத் தற்போது இருக்கும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து
வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.
இனி ஏர்டெல் OneWeb நிறுவனத்தில் வர்த்தகம்
மற்றும் செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும், பிரிட்டன் அரசு வருவாய் ஈட்டும் வர்த்தகத்தையும்
திட்டத்தையும் நிறுவனத்திற்குக் கொண்டு வரும் என இருதரப்பு முடிவு செய்துள்ளது.
OneWeb நிறுவனம்
ஒட்டுமொத்த பூமி பந்தையும் இணைக்கும் வகையில்
பல செயற்கைக்கோள்களைக் கொண்டு உலகம் முழுவதும் அதாவது சிறு கிராமம் முதல் பெரு நகரங்கள்
வரையில் அதிவேக வையர்லெஸ் பிராண்ட்பேன்ட் சேவையை எவ்விதமான தங்கு தடையின்றிக் கொடுக்க
வேண்டும் என்பது தான் OneWeb நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள்.
இதேபோன்ற திட்டத்தில் தான் எலான் மஸ்க்-இன்
ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஸ்டார்லிங்க், ஜெப் பெசோஸ்-ன் Kuiper ஆகியவையும் இயங்கி வருகிறது.
இது சாத்தியமானால் இண்டர்நெட் வேகமும்,
சேவையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்திடும்.
ஏர்டெல்
OneWeb நிறுவனம் துவங்கும் போது ஏர்டெல்
நிறுவனமும் ஒரு துவக்க முதலீட்டாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏர்டெல்
நிறுவனத்தின் சர்வதேச நிறுவனமான பார்தி குளோபல் வாயிலாகத் தான் 500 மில்லியன் டாலர்
முதலீடு செய்து OneWeb நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளைக் கைப்பற்றப்பட்டு உள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில்
மிட்டல்-ன் மூத்த மகன் ஷ்ரவன் மிட்டல் தான் பார்தி குளோபல் நிறுவனத்தின் தலைவர்.
துவக்கம் முதல் திவால்
Greg Wyler என்பவரால் 2014ஆம் ஆண்டு
Oneweb நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் சாப்ட்பேங்க், ஏர்பஸ், குவால்கம், கோகோ
கோலா, இன்டெல்சேட், குருபோ சாலிநாஸ், ஏர்டெல் ஆகிய நிறுவன முதலீட்டால் துவங்கப்பட்டது.
ஆனால் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளரான
சாப்ட்பேங்க் பல்வேறு நிதிநெருக்கடியில் சிக்கிய நிலையில், Oneweb நிறுவனத்தில் தனது
முதலீட்டைத் திருப்பப் பெற்றது. இதன் எதிரொலியாக Oneweb நிறுவனம் திவால் ஆனது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக