Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

கடக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

வளமான கற்பனையும் எழுச்சியும் சூழலுக்கு ஏற்ப அனுசரித்து செல்லும் கடக ராசி அன்பர்களே..!!
நடைமுறையில் ராகுவானவர் கடக ராசிக்கு பனிரெண்டாம் இடத்திலும், கேதுவானவர் ஆறாம் இடத்தில் இருக்கின்றனர். இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் கடக ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் பதினென்றாம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது ஐந்தாம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.

புதிய நபர்களின் அறிமுகமும், நண்பர்களின் வட்டமும் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பமும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். சிலர் மனதிற்கு பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். சில உதவிகள் சமயத்திற்கு கைக்கொடுக்கும். பலவிதமான விஷயங்களை தெளிவாக கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி எந்த செயலிலும் ஈடுபடாமல் சுயமாக செயல்பட விரும்புவீர்கள். முன்னோர்கள் தொடர்பான சொத்துக்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகைக்காக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடலாம்.
பெண்களுக்கு :

சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நன்மை அளிக்கும். வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களுக்கு அதிக தொகையை செலவிடும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய நபர்களின் மூலம் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் மற்றவர்களிடம் குறை கூறும்போது மனம் நோகாத வண்ணமாக எடுத்துரைத்தல் தேவையற்ற பகைமை ஏற்படுவதை குறைக்கும்.
மாணவர்களுக்கு :

சஞ்சலமான எண்ணங்களினால் மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சக மாணவர்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய தெளிவான புரிதல் ஏற்படும். சாஸ்திரம் தொடர்பான செயல்பாடுகளில் விருப்பமும், ஆர்வமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சற்று காலதாமதமாக கிடைக்கும்.
விவசாயிகளுக்கு :

மனை நிமிர்த்தமான செயல்பாடுகளில் முன்கோபம் இன்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். பொருளாதாரம் தொடர்பான சில பிரச்சனைகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும். வாரிசுகள் பற்றிய எதிர்பார்ப்புகள் மனதில் ஒருவிதமான கலக்கத்தை உண்டாக்கும். உணவு உண்ணும் விதத்தில் ஒருவிதமான மாற்றம் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான விருப்பமும், அது தொடர்பான சிந்தனைகளும் அதிகரித்த வண்ணம் இருக்கும்.
மனை விற்பனையாளர்களுக்கு :

மனை விற்பனையாளர்களுக்கு புதிய மனை விற்பதற்கான சில அலைச்சல்களும், காலதாமதமும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த மனைகளின் மூலம் எதிர்பாராத பொருள் லாபமடைவீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் மற்றும் பத்திரம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உணவு விற்பனையாளர்களுக்கு :

உணவு விற்பனையாளர்கள் தொழிலில் சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாலின மக்களின் உதவிகள் சிறப்பாக அமையும். வேடிக்கையான பேச்சுக்களின் மூலம் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான முயற்சிகள் ஈடேறும். பணியாளர்களிடம் கடுமையான வார்த்தைகளை பிரயோகிப்பதை குறைத்துக்கொள்ளவும். கிடைக்கும் லாபத்தில் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது முன்னேற்றத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
நிதித்துறையில் இருப்பவர்களுக்கு :

நிதித்துறை சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு பலவிதமான குழப்பங்களிலிருந்து தெளிவான சிந்தனைகள் உண்டாகும். வாதத்திறமைகளின் மூலம் நீண்ட நாட்களாக இருந்த பல வழக்குகளை முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உலக வாழ்க்கை பற்றிய சில புரிதல்களும், உடனிருப்பவர்கள் பற்றிய தெளிவும் புரிந்து கொள்வதற்கான காலக்கட்டமாக அமையும். பேராசை எண்ணங்களை குறைத்துக்கொள்வது உங்கள் செல்வாக்கை அதிகப்படுத்தும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். நிர்வாகம் சார்ந்த துறையில் முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த சில செயல்களில் எதிர்பாராத ஆதாயமும், ஆதரவும் கிடைக்க பெறுவீர்கள். சில விஷயங்களை ரகசியமாக வைத்துக்கொள்வது பணிபுரியும் இடத்தில் மேன்மையை ஏற்படுத்தும். வாக்குறுதிகள் கொடுக்கும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்பட வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு :

நீண்ட நாட்களாக இருந்துவந்த வழக்கு தொடர்பான பிரச்சனைகள் குறையும். பலவித மக்களுடன் தொடர்புகள் அதிகரிக்கும். கட்சி தொடர்பான பணிகளில் நண்பர்களின் ஆதரவும், வழிகாட்டுதலும் முன்னேற்றத்தை அளிக்கும். முன்னேற்றப்பாதையில் திட்டங்களை நிறைவேற்றும் பொழுது அதில் உள்ள நன்மை, தீமை என இரண்டையும் சீர்தூக்கி பார்த்து முடிவெடுப்பது எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கும். இழந்த சில பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :

கலை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் அவசரமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதத்திற்கு பின்பே கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் ரகசிய தொடர்புகள் இருப்பதை குறைத்து கொள்ள வேண்டும். வாழ்க்கை துணைவரின் செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியம் நிமிர்த்தமான காரியங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். தனம் வருவதற்கான பலவகை வழிகளும், அதற்குண்டான ஆதரவுகளும் கிடைக்க பெறுவீர்கள்.
வழிபாடு :

செவ்வாய்க்கிழமைதோறும் சர்வ தேவதைகளை வெள்ளை நிற பூக்களை கொண்டு வழிபாடு செய்து வர எண்ணத் தெளிவும் உண்டாகும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே..!!

அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக