Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

சுஷாந்த் வழக்கு: `4 சொட்டுகள் கலந்து குடிக்க வை!’ - ரியா வாட்ஸ்அப் உரையாடல் அம்பலப்படுத்திய சதி?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சி.பி.ஐ தொடர்ந்து விசாரணை செய்துவருகிறது. தினம் ஒரு தகவல் என இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன. பணப் பரிவர்த்தனை புகார் தொடர்பாக அமலாக்கத்துறையும், மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ-யும் விசாரித்துவரும் நிலையில், தற்போது இந்த வழக்கில் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகமும் விசாரிக்கவுள்ளது. காரணம், சுஷாந்த்தின் தோழியான ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்!

நடிகர் சுஷாந்த் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் மறைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக இந்த வழக்கு, `கொலை வழக்கு’ என்றும், `இதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. தற்போது சி.பி.ஐ இந்த விவகாரத்தில் தீவிரமாக விசாரணை நடத்திவரும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமி, புதிதாக சில விஷயங்களைத் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார். சுஷாந்த் மரணத்துடன் போதைப் பொருள்கள் தொடர்பான பேச்சுகளும் இணைக்கப்பட்டதற்கு இந்த ட்வீட்களும் ஒரு காரணம்.


இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சுனந்தா புஷ்கர் உடலை எய்ம்ஸ் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தபோது, அதன் உண்மைநிலை வெளியானது. ஆனால், அதே போன்ற ஒரு சம்பவம் ஸ்ரீதேவி மற்றும் சுஷாந்த் சிங் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனையின்போது நிகழவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், ``ரியா, மகேஷ் பட் உடனான உரையாடல் தொடர்பாக தொடர்ந்து முரணான தகவலை அளிக்கும் பட்சத்தில், சி.பி.ஐ அவரைக் கைது செய்து விசாரிக்கலாம். உண்மையை வெளிக்கொண்டுவர வேறு வழியில்லை” எனவும் குறிப்பிட்டார். மேலும், பிரேத பரிசோதனை வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டதாகவும், அதனால் அவரது வயற்றிலிருந்த விஷம் செரிமான திரவங்களால் தானாக கரைந்ததாகவும் சந்தேகம் எழுப்பினார். தொடர்ந்து,

``சுஷாந்த் கொலை செய்யப்பட்ட நாளில் துபாய் போதைப் பொருள் வியாபாரி ஆயாஷ் கானை சந்தித்திருக்கிறார். அது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த ட்வீட்கள் சுஷாந்த் மரண வழக்கில் பரபரப்பைக் கிளப்பின.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் விசாரணை வளையத்திலிருக்கும் நடிகையும், அவரின் தோழியுமான ரியா சக்கரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் தற்போது வெளியாகி, விசாரணையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பணப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்காக அமலாக்கத்துறை ரியாவின் செல்போன்களை ஆராய்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது டெலீட் செய்யப்பட்ட சில உரையாடல்களையும் மீட்டெடுத்து ஆராய்ந்தது. அது தொடர்பான தகவல்களை சி.பி.ஐ-யிடமும், போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திடமும் பகிர்ந்துகொண்டது. காரணம், ரியாவின் உரையாடலில் பல விஷயங்கள் போதைப் பொருளுடன் தொடர்புடையவையாக இருந்ததாக கூறப்படுகிறது.


ரியா, கௌரவ் அய்ரா என்ற போதைப் பொருள் வியாபாரியிடம், `நாங்கள் கடினமான மருந்துகளை அதிகம் எடுத்துக்கொண்டதில்லை. எம்.டி.எம்.ஏ-வை ஒரு முறை முயன்றேன்’, `உங்களிடம் எம்.டி இருக்கிறதா?’ எனக் கேட்கிறார். போனில் மிராந்தா சுஷி என்ற பெயரிலிருந்த ஒருவர், ரியாவிடம், போதைப் பொருள் தொடர்பான உரையாடலை நிகழ்த்தியுள்ளார். இந்த வகையில் போதைப் பொருள் பயன்படுத்துதல் அல்லது வைத்திருத்தல் உள்ளிட்ட கோணங்களில் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகமும் விசாரணை நடத்தும் என்று கூறப்படுகிறது.


இதற்கிடையே ரியா, ஜெயா சாஹா என்ற நபருடன் பேசிய உரையாடல், சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடையதா எனவும் விசாரணை நடத்திவருகின்றனர். அதாவது, ஜெயா சாஹா, ரியாவிடம் பெயர் குறிப்பிடாமல் ஒரு பொருளை குறிப்பிட்டு, ``காபி, நேநீர் அல்லது தண்ணீரில் நான்கு சொட்டுகளைப் பயன்படுத்தி, அதை அவனைக் குடிக்க வை. 30 - 40 நிமிடங்களில் எல்லாம் நடக்கும்” என்கிறார். அதற்கு ரியா, `மிக்க நன்றி’ என்கிறார். அதற்கு ஜெயா, `ஒண்ணும் பிரச்னை இல்லை சகோ... இது வேலை செய்யும் என நம்புகிறேன்’ என்கிறார். இந்த வாட்ஸ்அப் உரையாடல்தான் சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த உரையாடல் நடைபெற்றது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி. 2019 நவம்பரில் ரியா, சுஷாந்த் சிங்குடன் பாந்த்ரா இல்லத்தில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெயா சாஹாவை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ETimes ஊடகத்துக்குப் பேசிய சுஷாந்த் சிங்கின் தந்தை தரப்பு வழக்கறிஞர் விகாஷ் சிங், ``சுஷாந்த் மரணம் தொடர்பான எஃப்.ஐ.ஆரிலே அவர் அதிகமான மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பதாக சந்தேகம் தெரிவித்தோம். ஆனால் அவையெல்லாம் அவர் சிகிச்சைக்காக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் என நினைத்தோம். அவற்றைத்தான் அதிகமாக எடுத்துக்கொண்டார் என நினைத்தோம்.

அப்போது எங்களுக்கு வேறு தெளிவும் இல்லை. ஆனால், தற்போது அனைத்தும் போதைப் பொருள்கள் என்றே தோன்றுகிறது. இந்த வழக்கு தற்போது போதைப் பொருள் பக்கம் திரும்பியுள்ளது. அதனால் இனி இந்த வழக்கு தற்கொலைக்குத் தூண்டுதல் அல்லது கொலை வழக்காகக்கூட மாறலாம்” என்கிறார்.


மறுபுறம், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ரியா வழக்கறிஞர், ``ரியா தனது வாழ்நாளில் ஒருபோதும் போதைப் பொருளை எடுத்துக்கொண்டதில்லை. அவர் எந்த நேரத்திலும் ரத்தப் பரிசோதனைக்கு தயாராக இருப்பார்” என்றார். ரியா வழக்கறிஞரின் கருத்துக்கு பதிலளித்த வழக்கறிஞர் விகாஷ் சிங், ``இந்தக் குற்றச்சாட்டு, ரியா போதைப் பொருள்களைப் பயன்படுத்தியது குறித்துப் பேசவில்லை. ஆனால், ரியா மருந்துகளை சுஷாந்த்-க்கு ரகசியமாகக் கொடுத்தது பற்றியது. எனவே, இந்தக் கோணத்தைப் பொறுத்தவரை ரியா மருந்துகளை உட்கொண்டாரா என்பது முற்றிலும் முக்கியமற்றது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக