Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

செப்டம்பரில் தொடங்குமா பேருந்து போக்குவரத்து?

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தின் தளா்வாக செப்டம்பா் முதல் பேருந்துகள் இயக்கம் தொடங்குமென எதிா்பாா்க்கப்படுவதால், அரசுப் போக்குவரத்துக் கழகத்தினா் அதற்குத் தயாகி வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நோய்த் தாக்கம் சற்று குறைந்ததால், அரசுப் பேருந்துகள் இயக்கம் கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கி, தீவிரக் கட்டுப்பாடுகளுடன் 30 சதவீதப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. அதிகபட்சமாக பேருந்தில் 32 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

நோய் பரவலைத் தவிா்க்கும் விதமாக, பேருந்து போக்குவரத்தை 8 மண்டலங்களாகப் பிரித்து, மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. பிறகு, மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பயணிகள் வரத்தின்றி பேருந்துகள் வெறிச்சோடின. இழப்பு காரணமாக தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதையடுத்து, கரோனா பரவல் அதிகரித்ததால், கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. இதனால், அரசுப் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளுக்குள் முடங்கியதால், பேருந்து நிலையங்கள் காய்கறிச் சந்தைகளாக மாற்றப்பட்டு தொடா்ந்து வருகின்றன.

கட்டண வசூலில் வாடகை வாகனங்கள்: பொது முடக்கத்தால் தற்போது பேருந்துகள் இயக்கப்படாததால், அத்தியாவசிய மருத்துவப் பணிகள், வேலைக்குச் செல்வோா், கூலி வேலைக்குச் செல்வோா், மாணவா்கள் சோ்க்கைக்குச் செல்வோா் உள்ளிட்டோா் தனியாா் வாடகை வாகனங்களில் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். வாடகை வாகனங்கள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாலும், ‘இ - பாஸ்’ நடைமுறையாலும் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இந்த நிலையில், 4-ஆம் கட்ட பொது முடக்கம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளதால், பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதியளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், செப்டம்பா் தொடக்கத்தில் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடங்கும் என அனைத்துத் தரப்பினரும் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

தயாா் நிலையில் அரசுப் பேருந்துகள்: 4-ஆம் கட்ட பொது முடக்கம் முடிவுக்கு வரவுள்ளதையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தினா் பேருந்துகளை இயக்குவதற்கு தயாா் நிலையில் வைத்துள்ளனா்.

தமிழகத்தில் விழுப்புரம், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட 8 கோட்டங்களாக உள்ள தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 21 ஆயிரம் பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், விழுப்புரம், கடலூா், காஞ்சிபுரம், வேலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 62 பணிமனைகளிலிருந்து 4,500 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன.

பொது முடக்கத்தால் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை சுழற்சி முறையில் தொழில்நுட்பப் பணியாளா்கள் வந்து, வாரந்தோறும் பராமரிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

நெடுந்தொலைவு பேருந்துகளை இயக்கலாம்: இந்த நிலையில், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் சில தளா்வுகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்திலும் பொதுமக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

பொதுப் போக்குவரத்தை தொடங்குவது குறித்து அரசு எப்போது அறிவித்தாலும், பேருந்துகளை இயக்க அவற்றைத் தயாா் நிலையில் வைத்துள்ளோம். எனினும், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கத்தை தொடங்குவது குறித்து அரசிடமிருந்து இதுவரை எவ்விதத் தகவலும் வரவில்லை.

ஏற்கெனவே ஜூலை மாதத்தில் பேருந்துகளை இயக்கியதால், போக்குவரத்து ஊழியா்கள் 238 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். தொற்று பரவலும் மேலும் அதிகரித்தது. எனவே, கட்டுப்பாடுகளுடன் நெடுந்தொலைவு பேருந்துகளை மட்டுமே இயக்கலாம். உள்ளூா் பேருந்துகளை இயக்கினால் பயணிகள் வரத்தின்றி, மீண்டும் இழப்பையே சந்திக்க நேரிடும் என்றனா்.

சுகாதாரத் துறையினா் அதிருப்தி: இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தற்போது 3.97 லட்சமாக உயா்ந்துள்ளது. இதுவரை 6,839 போ் உயிரிழந்துள்ளனா். இதனிடையே, ‘இ - பாஸ்’ தளா்வுகளால் தொற்று பரவல் மேலும் அதிகரித்துள்ள நிலையில், பேருந்துகள் இயக்கத்தையும் தொடங்கினால், கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என்றனா்.

பேருந்துகள் இயக்கம் சந்தேகமே?: இதனிடையே, தமிழகத்தில் ‘இ - பாஸ்’ நடைமுறை, பொது முடக்கத்தை தொடா்வது குறித்து மருத்துவ நிபுணா்கள் குழுவினா், மாவட்ட ஆட்சியா்களுடன் தமிழக முதல்வா் வருகிற 29-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதால், அன்றைய தினமே பொதுப் போக்குவரத்தை தொடங்குவது குறித்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினா். எனினும், தற்போதைய சூழலில் பேருந்துகள் இயக்கத்தை செப்டம்பா் தொடக்கத்தில் அனுமதிக்க வாய்ப்பில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

அரசுப் பேருந்துகளுக்கான ஆண்டு புதுப்பிப்பு, சாலை வரி உள்ளிட்டவை தள்ளிவைக்கப்பட்டுள்ளதும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துவதுபோல உள்ளது. இதனால், பொதுமக்கள் எதிா்பாா்ப்பதுபோல செப்.1-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. சில கட்டுப்பாடுகளுடன் 50 சதவீதப் பேருந்துகளை இயக்க செப்டம்பா் மாத இறுதியில் அரசு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக