உலகளவில்
பெண்களைத் தாக்கும் ஒரு வகையான புற்றுநோய் தான் மார்பக புற்றுநோய். குறிப்பாக
மார்பக புற்றுநோயின் நிகழ்வு மற்றும் இறப்பு விகிதங்கள் வளரும் நாடுகளில்
அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வகை புற்றுநோயானது சில மார்பக
செல்கள் அசாதாரணமாக வளர்ச்சி அடைய ஆரம்பித்து, ஒரு கட்டியை உருவாக்கும் போது
மார்பக புற்றுநோய் உண்டாகிறது.
வழக்கமாக இந்த புற்றுநோய் கட்டிகள்
பால் உற்பத்தி செய்யும் மார்பக குழாய்களில் உருவாகிறது. அதே சமயம் இது லோபூல்ஸ் என்னும்
சுரப்பி திசுக்கள் அல்லது மார்பகத்தில் உள்ள பிற செல்கள் அல்லது திசுக்களிலோ உருவாகலாம்.
மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் ஏற்படலாம் என்றாலும், பெண்களே
இந்த வகை புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மார்பக
புற்றுநோய்க்கான காரணங்கள்
மார்பக
புற்றுநோய்க்கான சரியான காரணம் தெளிவாக தெரியாவிட்டாலும், மரபணு மாற்றங்கள்,
வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தை
அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கலாம். ஆராய்ச்சியாளர்களின்
கூற்றுப்படி, சுமார் 5 முதல் 10 சதவீத மார்பக புற்றுநோயானது ஒரு குடும்பத்தின்
தலைமுறை வழியாக மரபணு மாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்றன. மேலும் மது பழக்கம், புகைப்பிடிப்பது,
ஈஸ்ட்ரோஜென் வெளிப்பாடு மற்றும் குறிப்பிட்ட சில உணவுகள் போன்றவைகளும் மார்பக
புற்றுநோயின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
கீழே
மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் பானங்களாக
ஆராய்ச்சியாளர்கள் கூறியவை பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து இனிமேல் அந்த
உணவுகளை அதிகம் உண்பதைக் குறைத்துக் கொள்வதுடன், முடிந்த வரை அவற்றை தவிர்க்க
அறிவுறுத்தப்படுகின்றன.
மார்பக
புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்
* மார்பக அல்லது நெஞ்சு வலி
* மார்பகங்களில் கடுமையான அரிப்பு
* மேல் முதுகு, தோள்பட்டை மற்றும்
கழுத்து பகுதியில் வலி
* மார்பகங்களின் வடிவம், அளவு அல்லது
தோற்றங்களில் மாற்றம்
* மார்பக காம்புகளின் தோற்றத்தில்
மாற்றம்
* அக்குள் பகுதியில் வீக்கம்
* மார்பகங்கள் சிவந்தோ அல்லது
வீங்கியோ இருப்பது
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள்
தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இப்போது மார்பக
புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகளைப் பார்ப்போம்.
ஆல்கஹால்:
ஆல்கஹாலை அளவாக அருந்துவது நல்லது
என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அதே ஆல்கஹாலை ஒருவர் அளவுக்கு அதிகமாக
அருந்தினால், அது உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் பிற ஹார்மோன்களின் அளவை அதிகரித்து,
புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். அதோடு ஆல்கஹால் செல்களில் உள்ள
டி.என்.ஏ-வை சேதப்படுத்தி, அதனால் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். எனவே
மதுவை அளவாக அருந்துங்கள். முடிந்தால் மதுப்பழக்கத்தைக் கைவிடுங்கள்.
ஃபாஸ்ட்
ஃபுட்:
உடல் பருமன் மார்பக புற்றுநோயின்
அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளுள் ஒன்று. நீங்கள் கடைகளில் அதிகமாக வாங்கி
சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டவரா? அப்படியானால் நீங்கள் நிச்சயம் உடல் பருமனால்
அவஸ்தைப்படுவீர்கள். அதோடு உயர் கொழுப்பு நிறைந்த உணவுகள் இதய நோய், சர்க்கரை
நோயின் அபாயத்துடன் தொடர்புடையவை. நீங்கள் ஆரோக்கியமாக வாழ நினைத்தால், கடைகளில்
சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் அதிகம் சமைத்து சாப்பிடும் பழக்கத்தைக்
கொள்ளுங்கள்.
எண்ணெயில்
பொரித்த உணவுகள்:
எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம்
உட்கொண்டால், அது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். ஒரு ஆய்வில், 620
ஈரான் பெண்கள் எண்ணெயில் பொரித்த உணகளை அதிகமாக உட்கொண்டதனால் மார்பக புற்றுநோயின்
அபாயம் அதிகளவு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 2002 ஆம் ஆண்டு நேசனல் லைப்ரரி
ஆஃப் மெடிசன் என்னும் இதழில் வெளிவந்த ஆய்வில், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம்
உட்கொள்வது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடையதாக தெரிய
வந்தது.
பதப்படுத்தப்பட்ட
இறைச்சிகள்:
2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வில்,
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தொடர்ச்சியாக சாப்பிடும் பழக்கத்தைக் கொண்ட
பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்தது. மேலும்
மார்பக புற்றுநோயைத் தடுப்பதற்காக பதப்படுத்தப்பட்ட இறைச்சியைக் குறைக்க ஹார்வர்ட்
பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பள்ளியின் முன்னணி எழுத்தாளர் டாக்டர் மரியம்
பார்விட் பரிந்துரைக்கிறார்.
சர்க்கரை:
நீங்கள் அதிகம் சர்க்கரை சேர்ப்பவரா?
அதிகப்படியான சர்க்கரை எடுப்பது உடல் பருமனை உண்டாக்கும். உடல் பருமன்
அதிகரித்தால், அது பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். சர்க்கரை
அதிகம் கொண்ட டயட்டை மேற்கொண்டால், அது உடலினுள் அழற்சியையும், புற்றுநோய்
வளர்ச்சி மற்றும் பரவல் தொடர்பான ஒரு குறிப்பிட்ட நொதிகளின் வெளிப்பாட்டையும்
அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட
கார்போஹைட்ரேட் உணவுகள்:
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்
நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்துவதோடு, பல்வேறு
புற்றுநோய்களான வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய்களின் அபாயத்தையும்
அதிகரிக்கும். எனவே வெள்ளை பிரட், சர்க்கரை நிறைந்த பேக்கரி உணவுகள் போன்ற
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்து, முழு தானிய உணவுகள்
மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக