இராமரின் வேண்டுகோளுக்கிணங்க புஷ்பக விமானமும் இலங்கையை ஒரு வலம் வந்து சென்றது. புஷ்பக விமான இலங்கை நகரின் கிழக்கு நோக்கி பறக்க தொடங்கியது. இராமர் சீதையிடம், சீதா! இதோ இந்த இடத்தில் வானர படைத்தலைவன் நீலன், பிரகஸ்தன் என்னும் அரக்கனை தன் கைகளால் கொன்றான் என்றார். விமானம் தெற்கு நோக்கி பறக்க தொடங்கியது.
இராமர், இதோ இடத்தில் தான் அனுமன், துன்மிகன் என்னும் அரக்கனை கொன்றான் என்றார். அதன் பின் விமானம் மேற்கு நோக்கி பறக்க தொடங்கியது. இராமர், சீதா! இதோ இந்த இடத்தில் தான், இலட்சுமணன், மிக வலிமையான, மாயையில் வல்லவான இந்திரஜித்தை கொன்றான் என்றார். விமானம் வடக்கு நோக்கி பறக்க தொடங்கியது.
இராமர், சீதா! இதோ இந்த இடத்தில் தான் நான் இராவணனை பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு கொன்றேன் என்றார். அதன்பின் விமானம் கடல் மேல் பறந்துச் சென்றது. இராமர் சீதையிடம், சீதா! இதோ இந்த பாலத்தை வானர வீரர்கள் ஐந்து நாட்களில் கட்டிமுடித்தனர் என பாலத்தை காட்டி மகிழ்ந்தார். இங்கு வந்து தீர்த்தங்களில் மூழ்கிச் செல்பவர்கள் அனைத்துப் பாவங்களும் நீங்கி நற்கதி அடைவர். இந்த சேதுவில் நீராடுபவர்கள், எத்தகைய பாவங்களைச் செய்திருந்தாலும், இந்த கடலில் மூழ்கினால் தேவர் தொழும் பெருமை பெற்றவர் ஆவார்கள் என்றார். அதன்பின் சீதையிடம், வருணன் தன்னிடம் சரணடைந்த இடத்தையும் காட்டினார். பிறகு விமானம் கடலைக் கடந்து, வடக்கு நோக்கி பொதிகை மலை மேல் சென்றது.
இராமர் சீதையிடம், சீதா! இந்த மலை அகத்திய முனிவர் வாழும் சிறப்புமிகுந்த மலை என்றார். அதன் பின் விமானம் திருமாலிருஞ்சோலைமலை, திருவேங்கடமலை மேல் பறக்கும்போது, இந்த மலையில் முழுமுதற்கடவுளான திருமால் எழுந்தருளும் மலைகளாகும் என்றார். விமானம் ருசியமுக பருவத்தை நெருங்கும் போதும், சீதை இராமரிடம், பெருமானே! தாங்கள் முதன் முதலில் அனுமனை எங்கு பார்த்தீர்கள் எனக் கேட்டாள். இராமர், இதோ இந்த ருசியமுக பருவத்தில் தான் சந்தித்தேன் என்றார். விமானம் ருசியமுக பருவத்தை தாண்டி கிஷ்கிந்தை நோக்கி பறந்துச் சென்றது. இராமர் சீதையிடம், சீதா! இது கிஷ்கிந்தை. இங்கு தான் நான் வாலியை வதம் செய்தேன். சூரிய குமாரரான சுக்ரீவன் நீதிநெறி தவறாது ஆட்சி செய்யும் கிஷ்கிந்தை இது தான் என்றார்.
சீதை இராமரிடம், பெருமானே! பெண்களின் துணையின்றி நான் மட்டும் அயோத்தி நகருக்கு செல்வது சிறப்பல்ல. அதனால் இந்நகரத்தில் வாழும் வானரப் பெண்களை நம்முடன் அழைத்துச் செல்லலாம் என்றார். இராமர் சரி என்று சம்மதிக்கவே, புஷ்பக விமானம் கிஷ்கிந்தையில் இறங்கியது. சுக்ரீவனின் கட்டளைப்படி, அனுமன் விரைந்துச் சென்று வானரப் பெண்களை அழைத்து வந்தான். வானரப் பெண்கள் அனைவரும் மனித உருவங்கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறினர். வானர பெண்கள் சீதைக்காக சில பரிசுப் பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். சீதை அப்பரிசு பொருட்களை ஏற்று அவர்களை வாழ்த்தினார். பிறகு அங்கிருந்து விமானம் வானில் பறந்தது. விமானம் கோதாவரி ஆற்றில் மேல் பறந்துச் சென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக