அங்கதன், ஜாம்பவானை பார்த்து! மதிநலம்
மிக்கவரே! தாங்கள் இவர்களை கண்டு அஞ்சலாமா? நம்முடன் இருப்பவர் மனிதன் என்று
எண்ணுகிறீர்களா? உலகத்தை ஆளும் பரம்பொருளே மனிதனாக வந்திருக்கிறார் அல்லவா? நம்மை
காக்க இராமரின் கோதண்டம் இருக்கிறது. அவர் நிச்சயம் இந்த அசுர சேனைகளை வென்று
காட்டுவார்.
அதனால் பயம் கொள்ள வேண்டாம் என ஆறுதல்
கூறி அழைத்து வந்தனர். விபீஷணன் இராமரிடம், பெருமானே! இந்த படைகள் மூலப்படைகள்.
இவர்கள் இராவணனின் கட்டளையால் இங்கு வந்துள்ளார்கள். இவர்கள் உலகத்தையே வெல்லும்
அளவிற்கு ஆற்றல் படைத்தவர்கள் என்றான். பிறகு இராமர் இலட்சுமணனிடம், தம்பி
இலட்சுமணா! நான் இந்த மூலப்படைகளை எதிர்த்து போரிட்டு அழிக்கிறேன்.
நீ வானரங்களுக்கும், வீபிஷணனுக்கும்
துணையாக இரு எனக் கூறிவிட்டு தன் கோதண்டத்தை கையில் எடுத்துக் கொண்டு போருக்குச்
சென்றார். இராமர் போருக்கு செல்வதை பார்த்த தேவர்கள், இராமர் ஒருவரால் இந்த அசுர
சேனைகளை அழிப்பது கடினம். இராமர் நற்குணத்தில் சிறந்தவர். சிறந்த வில்லாளன். ஆனால்
அரக்கர்களோ அதர்மம் செய்பவர்கள். அதர்மத்தை காட்டிலும் தர்மம் தான் வெல்லும்.
இப்போரில் அறம் தான் செல்லும் எனக் கூறி
இராமர் போரில் வெற்றி பெற வாழ்த்தினார்கள். இராமர், தன் வில்லின் நாணோசையை எழுப்பி
அரக்கர்கள் முன் நின்றார். அரக்கர்கள் இராமரைக் கண்டு, இந்த சிறு மனிதனா நம்மை
எதிர்த்து போர் புரிய போகிறான். மலை போல் பலம் கொண்ட நம்மை இந்த எறும்பு கடிக்க
முடியுமா? என ஏளனம் செய்தனர். இவனை அழிக்க ஒரு நொடி போதும் என இராமர் மீது
பாணங்களை ஏவினர்.
இராமர் அப்பாணங்களை தடுத்து,
கோதண்டத்தில் ஆயிரம் பாணங்களை தொடுத்து அரக்கர்களை அழித்தார். இராமரின் கரவேகம்
மின்னலை போல் இருந்தது. நொடி பொழுதில் ஆயிரம் ஆயிரம் பாணங்களை தொடுத்து கடைசியில்
இலட்சம் பாணங்கள் அரக்கர்களை அழித்தது. இவ்வாறு நொடியில் அரக்கர்களை கொன்று
வீழ்த்தினார்.
இராமர் ஒருவரே பல்லாயிர இராமனாக இருப்பது போன்ற தோற்றம்
அரக்கர்களுக்கு ஏற்பட்டது. போர்க்களத்தில் ஒவ்வொரு அரக்கனுடனும் இராமர் போரிடுவது
போன்ற தோற்றம் அரக்கர்களை நிலை தடுமாற வைத்தது. இராமனின் கைவில்லின் மணி ஒலிக்கும்
போதெல்லாம் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக இறந்து வீழ்ந்தனர்.
இராமருடைய
கோதண்டத்தில் இருக்கும் பதினாறு தங்க மணிகளும், பதினாறு கவந்த மணிகளும் :
இராமருடைய கோதண்டத்தில் பதினாறு தங்க
மணிகளும், பதினாறு கவந்த மணிகளும் மொத்தம் முப்பத்திரண்டு மணிகள் தொங்க
விட்டிருந்தது. ஆயிரம் யானைகள், பதினாயிரம் தேர் ஒரு கோடி குதிரைகள், ஆயிரம் சேனை
வீரர்கள் இறந்தால் இராமருடைய வில்லில் உள்ள கவந்த மணி ஒரு முறை ஒலிக்கும்.
அந்தக் கவந்த மணி ஆயிரம் முறை
ஒலித்தால் பெரிய தங்கமணி பெரிய சத்ததோடு கணீரென்று ஒலிக்கும். போரில் இராமருடைய
கோதண்டத்தில் உள்ள முப்பத்திரண்டு மணிகளும் இடைவிடாமல் ஏழரை நாழிகை ஒலித்தது.
அப்படியென்றால் அசுர சேனைகள் மாண்ட எண்ணிக்கையை எவ்வாறு எண்ண முடியும். இராமருடைய
சக்தி வாய்ந்த போரை நாம் இந்த மூலப்படை மூலம் அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக