Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

விபீஷணனின் பட்டாபிஷேகம்...!

விபீஷணன், இராவணனின் ஈமச்சடங்குகளை செய்து முடித்த பின் இராமரிடம் சென்றான். இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பூண்டு வந்து இருப்பதால் அவர் இலங்கை நகருக்குள் செல்வது என்பது ஏற்றதல்ல. இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! நீ விபீஷணன், சுக்ரீவன், அனுமன் முதலிய வானர வீரர்களை அழைத்து இலங்கை நகருக்குச் சென்று, விபீஷணனுக்கு வேதமுறைகள்படி இலங்கையின் அரசனாக முடிசூட்டி பட்டாபிஷேகம் செய்துவிட்டு வருவாயாக என கட்டளையிட்டார்.
பிறகு இலட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன், அனுமன் முதலிய வானர வீரர்கள் புடைசூழ இலங்கை நகருக்குச் சென்று இலங்கை நகரை அலங்கரித்தனர். தேவர்கள், முனிவர்கள் விபீஷணனின் முடிசூட்டு விழாவில் கலந்துக் கொண்டனர்.
 புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வரச் செய்து, வேள்வியில் தீ மூட்ட, முனிவர்கள் மந்திரங்கள் சொல்ல, விபீஷணனை அரியணையில் அமர வைத்து, வேத கோஷங்கள் முழங்க, மங்கள ஸ்னானம் செய்வித்து, புத்தாடைகள் அணிந்து, அபிஷேகம் செய்து அனைவரின் முன்னிலையிலும் இலட்சுமணர் விபீஷணனுக்கு இலங்கையின் அரசனாக முடிசூட்டினார்.
இலங்கையின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட விபீஷணன், இலட்சுமணனை வணங்கினான். தேவர்களும், முனிவர்களும் விபீஷணனை வாழ்த்தினர். விபீஷணனின் மனைவி சரமை, விபீஷணனின் மகள் திரிசடை பட்டாபிஷேகத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அரம்பியர்கள் நடனம் ஆட, அரண்மனையில் இசைக்கச்சேரி நடைப்பெற்றது. விபீஷணன் வறியவர்களுக்கு பொன்னும், பொருளும் வழங்கினான். இலங்கை நகரமே விழாக்கோலம் பூண்டது.
 பிறகு விபீஷணன் இராமரிடம் ஆசிப் பெற போர்க்களத்திற்கு வந்தடைந்தான். விபீஷணன் இராமரின் திருவடியில் விழுந்து ஆசி பெற்றான். இராமர் விபீஷணனை அன்போடு தழுவிக் கொண்டார். பிறகு இராமர், விபீஷணா! அரசப் பதவியை ஏற்றுக் கொண்ட நீ என்றும் ஏழை மக்களுக்கு உறுதுணையாக தொண்டு செய்ய வேண்டும். உனது ஆட்சியில் அறத்தை நிலை நாட்ட வேண்டும். நான் தான் அரசன் என்று சிறிதும்கூட மனதளவில் ஆணவம் கொள்ளக் கூடாது.
மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உனது நாட்டை கண்ணும் கருத்துமாக அறநெறியுடன், நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிய வேண்டும் என வாழ்த்தினார். பிறகு இராமர் அனுமனிடம், அன்பனே! நீ சீதையிடம் சென்று இராவணனின் வதத்தை கூறுவாயாக எனக் கூறினார்.
 அனுமன் இராமரிடம் இருந்து விடைபெற்று, மிகவும் மகிழ்ச்சியுடன் அசோகவனத்திற்கு சென்று சீதையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். பிறகு அனுமன், அன்னையே! நான் தங்களுக்கு ஒரு சுபச் செய்தியை கொண்டு வந்துள்ளேன். ஸ்ரீ இராம மூர்த்தி அவர்களின் இராம பாணத்தால் இராவணன் மாண்டான்,
அது மட்டுமில்லாமல் இப்பொழுது விபீஷணனுக்கு முடிசூட்டு விழா நடைப்பெற்று முடிந்தது எனக் கூறினான். இச்செய்தியைக் கேட்டு சீதை அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மகிழ்ச்சியில் சீதை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள். அனுமன் சீதையைப் பார்த்து, அன்னையே! தாங்கள் இந்த சுபச்செய்தியை கேட்டு ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன்? எனக் கேட்டான். சீதை, மாருதியே! அளவுக்கடந்த மகிழ்ச்சியினால் என்ன சொல்வதென்று தெரியவில்லை என்றாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக