Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

அனுமன் கேட்கும் வரம்...!

சீதை அனுமனிடம், மாருதியே! நீ எனக்கு செய்த உதவிக்கு, நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. அன்று என் உயிரை மாய்த்து கொள்ளும் தருவாயில் இருந்த எனக்கு, நீ கொண்டு வந்த கணையாழி என் உயிரை காப்பாற்றியது. இன்று நீ சொன்ன சுபச் செய்தி என் மனதை குளிர வைத்தது.

இந்த மூன்று உலகத்தையும் உனக்கு காணிக்கையாக கொடுத்தாலும் நீ செய்த உதவிக்கு ஈடாகாது. ஏனென்றால் உலகங்கள் அழியக்கூடியது. உன்னை என் தலையில் வைத்து தொழுவதே சிறந்தது. மாருதியே! உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். அவ்வரத்தை நான் உனக்கு தருவேன் என சீதை கூறினாள். 

அனுமன் சீதையிடம், அன்னையே! நான் திருமணம் ஆகாத பிரம்மச்சாரி. எனக்கு வேண்டுவது உலகத்தில் இல்லை. தாங்கள் எனக்கு வரம் தருகிறேன் என்று கூறியுள்ளீர்கள்.

 அன்னையே! தங்களை பத்து மாதங்கள் கத்தியும், கோடாரியும் காட்டி தங்களைப் பயமுறுத்திய இந்த அரக்கிகளை நான் கொல்வேன். தாங்கள் இந்த வரத்தை எனக்கு அருள வேண்டும் எனக் கேட்டான். இதைக்கேட்ட அரக்கியர்கள் அனைவரும் பயத்தில் சீதையை சரணடைந்தனர். சீதை, அரக்கியர்களுக்கு அபயம் அளித்தார்.

 பிறகு சீதை, அனுமனிடம், மாருதியே! இந்த அரக்கியர்கள் எனக்கு தீங்கு செய்யவில்லை. நான் செய்த தவறினால் இந்த துன்பம் ஏற்பட்டது. எனக்கு இத்தனை நாட்கள் ஏற்பட்ட துன்பத்திற்கு இந்த பெண்கள் காரணம் அல்ல. இராவணனின் ஏவலினால் தான் இவர்கள் எனக்கு துன்பத்தை தந்தார்கள். நான் எம்பெருமானுக்கு துணையாக இக்கானகத்திற்கு வந்தேன். கானகம் வந்த நான், ஒரு மானின் மேல் ஆசைப்பட்டது என் தவறு.

 நான் அந்த மானை வேண்டும் என்று கேட்காமல் இருந்திருந்தால் இத்தனை துன்பங்கள் நேர்ந்திருக்காது. பதினான்கு ஆண்டுகள் உண்ணாமலும், உறங்காமலும் எம்பெருமானை காவல் புரிந்த இலட்சுமணனின் மனதை புண்படும்படி பேசினேன். நான் அவ்வாறு பேசாமல் இருந்திருந்தால் இத்துன்பம் நேராமல் இருந்திருக்கும். எங்களை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் அனுப்ப காரணமாய் இருந்த கூனியை விடவா இவர்கள் கொடியவர்கள். 

நயவஞ்சகம் செய்து வனவாசம் அனுப்பிய கூனியை, நான் நினைத்தால் அக்கூனி அன்றே மடிந்திருப்பாள். கூனி செய்த குற்றத்தை பொறுத்த என்னால் இவர்கள் செய்த துன்பங்களை பொறுக்க வேண்டும் அல்லவா? அதனால் நீ இவர்களின் மேல் கருணை காட்டி விட்டுவிடுவாயாக எனக் கூறினார்.

இதைக்கேட்ட பின் அனுமன், அன்னையே நான் தங்களின் வார்த்தைகளுக்கு உட்பட்டு இந்த அரக்க பெண்கள் மேல் கருணை காட்டுகிறேன் எனக் கூறிவிட்டு சீதையிடம் ஆசிப்பெற்று அங்கிருந்து விடைப்பெற்று சென்றான்.
பிறகு அனுமன் இராமரிடம் வந்து, பெருமானே! தாங்கள் இராவணனை வதம் செய்த செய்தியை நான் அன்னை சீதையிடம் கூறினேன். 

அவர் அதைக்கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் எனக் கூறினான். அதன் பின் இராமர் விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! பணிப்பெண்களிடம் சீதைக்கு தேவையான ஆடை ஆபரணங்களை கொடுத்து சீதையை அலங்கரித்து அழைத்து வரச் சொல் எனக் கட்டளையிட்டார். விபீஷணன் இராமரிடம் இருந்து விடைப்பெற்று அசோகவனம் நோக்கிச் சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக