கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையினருகே இருக்கிறது ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சி ஒன்றியம், பொதுத் தொகுதியாக இருந்தது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதைத் தனித் தொகுதியாக மாற்றி, தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஊராட்சியில் தி.மு.க சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த சரிதா என்ற பெண் போட்டியிட்டு, ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார்.,
ஆனால் சரிதாவின் வெற்றியைப் பொறுக்க முடியாத ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள், அவரைத் தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுத்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் சரிதா கூறுகையில், ``பெருவாரியான மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றுத்தான் நான் ஊராட்சித் தலைவராகியிருக்கிறேன். இது சிலருக்குப் பிடிக்கவில்லை. நான் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால், தொடர்ந்து இடையூறு செய்துவருகின்றனர். இதன் பின்னணியில் அ.தி.மு.க-வின் தூண்டுதலும் இருக்கிறது.
ஊராட்சித் தலைவர் சரிதா
`நீ ஒரு அருந்ததியர். நீ எப்படி இந்த நாற்காலியில் அமரலாம்? எங்களுக்கு உத்தரவு போடுகிற நிலைக்கு உயர்ந்துவிட்டாயா?’ என்று ஊராட்சி மன்ற நாற்காலியில் அமர்வதற்குக்கூட அனுமதிப்பதில்லை. வெற்றி பெற்று பல மாதங்களாகியும், பெயர்ப் பலகையில்கூட தலைவரான என் பெயரை எழுதவிடவில்லை.
வெற்றி பெற்ற நாளிலிருந்தே இது போன்ற இடையூறுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. என்னை எந்த மக்கள் பணியையும் செய்யவிடுவதில்லை. இது குறித்து கோவை எஸ்.பி-யிடமும் புகார் அளித்துவிட்டேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறேன்’’ என்று கண்ணீர்மல்கப் பேசினார்.
ஊராட்சித் தலைவர் சரிதா
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துவருகின்றன. ``உடனடியாக ஊராட்சி மன்றத்
தலைவருக்கு உண்டான அனைத்து மரியாதைகளையும் சரிதாவுக்குக் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும்.
இவரைப் பணி செய்யவிடாமல் தடுத்த சம்பந்தப்பட்ட நபர்களை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்து, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய அநீதி தொடர்ந்தால், நாங்களே களத்தில் இறங்கி ஊராட்சி மன்றத் தலைவருக்கான அனைத்து மரியாதைகளையும் பெற்றுத்தரும் போராட்டத்தை நடத்துவோம்” என்று சி.பி.எம் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சமூக நீதிக்கட்சி, திராவிட தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
இது குறித்து விளக்கம் கேட்க கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி மற்றும் போலீஸ் எஸ்.பி அருளரசு ஆகியோரைத் தொடர்பு கொண்டோம். ஆனால் இருவரும், `மீட்டிங்கில் இருப்பதால் பிறகு பேசுகிறோம்’ என்று பதிலளித்துள்ளனர்.
இந்நிலையில் சரிதா கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம்மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நெகமம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக