Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

நந்தி கிராமத்திற்கு செல்லும் அனுமன்...!

இராமர், முன்பு கோதாவரி ஆற்றின் பக்கத்தில் தங்கிருந்த இடத்தை காண்பித்து, இந்த இடத்தில் நாம் இருவரும் பிரிந்து மிகுந்த துன்பத்திற்கு உள்ளானோம் எனக் கூறினார். அதன்பின் விமானம் தண்டக வனத்தின் மேல் சென்றது.

இராமர் சீதையிடம், இந்த இடம் பல முனிவர்கள் யாகம் செய்து பலன் பெற்ற இடம் என்றார். அதற்குள் விமானம் சித்ரகூட மலை மேல் சென்றது. அங்கு பரத்வாஜ முனிவர், இராமர் இங்கு இறங்க வேண்டும் என மனமுருக வேண்டிக் கொண்டார்.

பரத்வாஜ முனிவர் வேண்டுகோளின்படி இராமர் சித்ரகூட மலையில் இறங்கினார். இராமர் பரத்வாஜ முனிவரிடம் சென்று அவரை வணங்கினார். பரத்வாஜ முனிவர் இராமரை அன்புடன் ஆசிர்வதித்தார். அதன் பின் இலட்சுமணரும், சீதையும் பரத்வாஜ முனிவரின் திருவடியில் விழுந்து ஆசியை பெற்றனர்.

பரத்வாஜ முனிவர் இராமரை பார்த்து, இராமா! நீ என்னை விட்டு பிரிந்த பின்பு நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நான் இங்கிருந்தே கண்டு மகிழ்ந்தேன். தாங்கள் இன்று உணவருந்தி எங்களுடன் தங்க வேண்டும் என்றார்.

பரதன் அங்கு உயிர் துறக்கும் நிலையில் இருக்கும்போது, இராமர், பரத்வாஜ முனிவரிடம், உணவருந்த ஒப்புக் கொண்டார். பரத்வாஜ முனிவர் இராமரிடம், இராமா! தம்பி பரதன்! தன் உடலை வருத்திக் கொண்டு, மனதில் கலக்கத்தை கொண்டு, தினமும் காய், கனிகளை உண்டு, உன் பாதுகைகளுக்கு முப்பொழுதும் மலர்களால் அர்ச்சித்து வருகிறான்.

இன்றுடன் உன் வனவாசம் முடிவடைவதால் உன் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறான் என்றார். இராமர் இதைக் கேட்டு மிகவும் துயரம் அடைந்தார். இராமர், பரத்வாஜ முனிவரின் உபசரிப்பை ஏற்றார்.

தனக்கு உதவிய அனுமனை கௌரவிக்கும் வகையில், தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார்.

பிறகு இராமர் அனுமனிடம், அனுமனே! நீ விரைந்துச் சென்று என் கணையாழியை பரதனிடம் காண்பித்து அண்ணன் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவிப்பாயாக எனக் கூறினார். பிறகு இராமர் தன் கணையாழியை அனுமனிடம் கொடுத்தார்.

அதன் பின் அனுமன் இராமரிடன் இருந்து விடைப்பெற்று வான்வெளி நோக்கிச் பறந்தான். வான்வெளியில் அனுமன் மிக வேகமாக பறந்துச் சென்றான். பரதர், அயோத்தி மாநகரையும், அரண்மனையையும் துறந்து அயோத்திக்கு அருகிலுள்ள நந்திக் கிராமத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இராமரின் பாதுகைகளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்.

இராமரின் பாதுகைகளை காலை, மதியம், இரவு என முப்பொழுதும் மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து, வழிபாடு செய்து கொண்டிருந்தார். இன்றும் இராமரின் பாதுகைகளுக்கு பூஜை செய்து மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான்.

அப்பொழுது பரதன், அண்ணன் இராமர் அயோத்திக்கு திரும்பி வரும் நாளை பற்றி சிந்தித்தான். உடனே ஜோதிடர்களை வரவழைத்து இராமர் திரும்பி வரும் நாள் என்று எனக் கேட்டார். ஜோதிடர்கள், இராமரின் பதினான்கு ஆண்டு வனவாச காலம் இன்றுடன் முடிவடைகிறது என்றனர். இதைக் கேட்டு பரதர் மகிழ்ச்சி அடைந்தார். பரதர் இராமரை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக