Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

மாருதி பிரெஸ்ஸாவை வீழ்த்தி விற்பனையில் நம்பர்-1 இடத்தில் ஹூண்டாய் வெனியூ!


விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியை வீழ்த்தி நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார். இதுதொடர்பான விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்படும் சப்- காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ரகத்தில் இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவு விற்பனை கணிசமாகவே இருந்து வருகிறது. மேலும், இந்த மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.


எனினும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான் இந்த சப் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையில் நம்பர்-1 இடத்தை பிடித்து அசத்தி உள்ளது ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி.

கடந்த மாதம் 8,267 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார்கள் விற்பனையாகி உள்ளன. அதேநேரத்தில், 6,903 மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனையாகி இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த ரகத்தில் எப்போதுமே முன்னிலை வகித்து வந்த பிரெஸ்ஸாவை கணிசமான வித்தியாசத்தில் ஹூண்டாய் வெனியூ வீழ்த்தி உள்ளது.

அதேநேரத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் விற்பனை 12 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 9,342 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், தற்போது 8,267 யூனிட்டுகளாக குறைந்துள்ளது.

கொரோனா பிரச்னையே இந்த குறைவுக்கு காரணம். கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், கொரோனா பிரச்னையிலிருந்து ஹூண்டாய் வெனியூ மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஆகிய கார்களின் விற்பனை கணிசமாக முன்னேற்றம் கண்டு இருப்பது ஆறுதல் தரும் விஷயமாக கருதலாம்.

மாருதி பிரெஸ்ஸாவைவிட பல்வேறு விதத்திலும் கூடுதல் தேர்வுகள், சிறப்பம்சங்களை ஹூண்டாய் வெனியூ பெற்றிருப்பது காரணமாக பார்க்கப்படுகிறது. மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஆனால், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கும், விருப்பத்திற்கும் தக்கவாறு 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேனுவல், ஐஎம்டி மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

இரண்டு கார்களிலும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஆனால், ஹூண்டாய் வெனியூ காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் சிம் கார்டு மூலமாக இன்டர்நெட் வசதி பெறும் வசதி உள்ளது. இதன்மூலமாக, ஸ்மார்ட்ஃபோன் அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு வசதிகளையும், கட்டுப்பாட்டு அம்சங்களையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ரூ.7.34 லட்சத்திலும், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி ரூ.6.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர்த்து, டாடா நெக்ஸான் எஸ்யூவி, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களுடன் இந்த சந்தை கடும் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. வரும் மாதங்களில் இந்த நிலையை ஹூண்டாய் வெனியூ தக்கவைக்குமா அல்லது பறிகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக