இந்தியாவில் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அறிமுகத்துக்குப் பிறகு அதன் பல்வேறு போட்டி நிறுவனங்கள் கடுமையான சரிவைச் சந்தித்தன. இதை சாமர்த்தியமாகக் கையாண்ட ஏர்டெல் நிறுவனம் ஓரளவுக்குச் சமாளித்துக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களை இழக்காமல் உள்ளது. ஆனால் ஐடியா, வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையான சரிவைச் சந்தித்து தங்கள் நிறுவனத்தையே மூடும் அளவுக்குச் சென்றன. அந்த நேரத்தில் இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒன்றாக இணைய திட்டமிடப்பட்டு, பின் அதற்காக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதியும் அளித்தது.
வோடபோன் - ஐடியாவோடபோன் - ஐடியா
இதனையடுத்து 2018-ம் ஆண்டு வோடஃபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டன. இதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடஃபோன் - ஐடியா நிறுவனம் இருக்கும் எனக் கூறப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இணைந்த இந்த நிறுவனங்கள் புதிய பெயரில் மீண்டும் அறிமுக செய்யப்படவுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. முந்தைய ஐடியா நிறுவனம் கிராமப்புறத்தில் மிகவும் பிரபலமாகி லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது. அதேபோல் வோடஃபோன் நிறுவனம் நகர்ப்புறங்களில் பிரபலமாக இருந்தது.
ஆனால், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் பல புதிய ஆஃபருக்கு மத்தியில் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்ந்து இழந்து வந்தது வோடஃபோன் - ஐடியா. இந்த இரு நிறுவனங்களின் இணைப்பின் போது 408 மில்லியனாக இருந்த வாடிக்கையாளர்கள் கடந்த ஜூன் மாதத்தில் 280 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது Vodafone, Idea ஆகிய பெயர்களை இணைத்து `வீ' (Vi) என்ற பெயரில் பிராண்ட் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய பிராண்ட் அறிமுகத்தின்போது பேசிய வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் சி.இ.ஓ ரவீந்தர் தாக்கர், ``இரண்டு வருடங்களுக்கு முன்பு வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. அப்போது முதல் இந்த இரண்டு நெட்வொர்க்குகள் மற்றும் இரு நிறுவனங்களின் செயல்முறைகளை ஒருங்கிணைப்பதில் அதிக கவனம் செலுத்தினோம். இன்று எங்கள் புதிய பிராண்டான வீ-யை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வாடிக்கையாளர்களின் வாழ்க்கை, அவர்களின் நம்பிக்கை, முன்னேற்றம் ஆகியவற்றைச் சுற்றியே வீ-யின் சேவை கட்டமைக்கப்பட்டுள்ளது. வீ வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தும்.
இந்த பிராண்ட் ஒருங்கிணைப்பு இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு இணைப்பு நிறைவடைவதைக் குறிப்பது மட்டுமல்லாமல் எங்கள் வலுவான 4ஜி நெட்வொர்க்கில் நூறு கோடி இந்தியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதும் எங்கள் எதிர்கால திட்டமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இப்போது தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ, ஏர்டெல், வீ ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் உள்ளன. இதில் ஜியோவை வீ எப்படி சமாளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக