1939ன் பெரு என்கிற கிராமத்தில் தங்கள் 5 வயது மகளின் வயிறு தொடர்ந்து விரிவடைவதை கவனித்த அவளது பெற்றோர் அவளை மருத்துவரிடம் அழைத்து செல்ல முடிவெடுத்தனர். திபுரெலோ மற்றும் விக்டோரியா லோசியா ஆகியோர் தங்கள் மகளின் இந்த தொடர்ச்சியான வீக்கம் வயிற்று கட்டியின் ஏதோ அறிகுறி என்று எண்ணியே அவளை அப்போது லிமாவில் உள்ள ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர்கள் நினைத்தது ஒன்று நடந்தது வேறாக, அவர்களின் மகள் லீனா மதீனா ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர் கூறியதும் அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆறு வாரங்களுக்குப் பிறகு, மே 14, 1939 இல், மதீனாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்திருந்தாலும் 2.7 கிலோவில் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
மருத்துவரின் பெயர் மகனுக்கு சூட்டினார்
தனக்கு சிசேரியன் செய்த மருத்துவரின் பெயரான ஜெரார்டோ என்ற பெயரையே அவர் தனது மகனுக்கு சூட்டினார். உலகின் இளைய வயதில் கர்ப்பமாகி தாயான லீனாவின் வாழ்க்கையில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்தது. அந்தக் குழந்தையின் தந்தை யார், அவர் எவ்வாறு கர்ப்பமானார் என்ற மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருந்தது. அது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
லீனா மதீனா
செப்டம்பர் 23, 1933 அன்று பெருவில் உள்ள ஒரு ஏழ்மையான கிராமங்களின் ஒன்றில் லீனா மதீனா, ஒன்பது குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். அவரது இளம் வயது கர்ப்பம் மற்றும் தாயான சம்பவம் அந்த கிராம மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏன் இதை மருத்துவர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே கூறலாம். அவர்கள் மதீனா, சிறு வயதிலேயே பருவம் அடைந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
10 ஆயிரத்தில் ஒருவர்
முன்கூட்டிய பருவமடைதல் என்பது ஒரு அரிய மரபணு நிலை, இதில் ஒரு குழந்தையின் உடல் பாலியல் முதிர்ச்சியை அடைகிறது மற்றும் எட்டு வயதிற்கு முன்பே வயதுக்கு வருகிறார்கள். இது பொதுவாக 10,000 குழந்தைகளில் ஒருவருக்கு இது போன்ற மாற்றம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முன்கூட்டிய பருவமடைதலுக்கான காரணத்தை அடையாளம் காண முடியாது. இருப்பினும் சமீபத்திய ஆய்வுகள் மூலம், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகள், மற்ற சிறுமிகளை விட வேகமாக பருவமடைவதைக் காணலாம்.
அதனால் இதுப் போன்று சிறு வயதிலேயே பாலியல் தொடர்பு ஏற்பட்டதன் காரணமாக லீனா முன்கூட்டியே பருவமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி டாக்டர் எட்முண்டோ எஸ்கொமல், லீனாவிற்கு தனது முதல் மாதவிடாய் எட்டு வயதில் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறியிருக்கிறார்.
5 வயதான மதீனாவை மேலும் பரிசோதித்ததில், அவருக்கு மார்பகங்கள் மற்றும் இடுப்பு சாதாரண அளவைவிட சற்று அகலமாக இருந்ததாகவும், (அதாவது, பருவத்திற்குப் பிந்தைய) எலும்பு வளர்ச்சி அடைந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
லீனா மதீனா கர்ப்பமாக இருந்த நேரத்தில், சரியாக அது அவரது ஐந்தாவது பிறந்தநாளாக இருந்திருக்கக்கூடும். அந்த சமயத்தில், அவரது உடல் மிகவும் சிறிய மற்றும் முதிர்ச்சியற்ற பெண்ணின் உடல் வாகாக இருந்தது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். முன்கூட்டியே பருவமடைதல் என்பது தான் லீனா மதீனாவின் கர்ப்பத்திற்கு ஒரு காரணமாக கூறப்பட்டாலும் அதில் பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன.
குழந்தை பெற்ற குழந்தை!
எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் தாயான சமயத்தில் ஒரு சிறு குழந்தையாக இருந்தாள். அதனால் சிறு வயதில் அவளை யாரோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருக்க வேண்டும். ஆனால் லீனா தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக தன் தந்தையிடமோ அல்லது மருத்துவரிடமோ கூட கூறவில்லை. அவளுடைய இளம் வயது காரணமாக, அவள் தன்னை முழுமையாக அறிந்திருக்க மாட்டாள் என்று நம்பப்படுகிறது.
டாக்டர் எஸ்கொமல் லீனாவிடம் பாலியல் ரீதியாக யாராவது உன்னை துன்புறுத்தினார்களா என்று கேள்வி எழுப்பிய போது, இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை என்றே கூறினார்.
சிறையில் அடைக்கப்பட்ட தந்தை
இந்த சம்பவத்தில் மதீனாவின் தந்தை திபுரெலோ முதலில் சந்தேகிக்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக எந்த ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை என்பதால் அவர் விடுவிக்கப்பட்டார். திபுரெலோ தன் சொந்த மகளோடு எந்த வகையான உடல் ரீதியான தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்று கடுமையாக மறுத்தார்.
மதினாவின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் பல்வேறு சந்தேகங்களை கேட்டுப் பெற பத்திரிகையாளர்கள் அவரை ஒரு நேர்காணலுக்கு அழைத்தனர். ஆனால் மதீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அதை முற்றிலும் மறுத்து விட்டனர்.
மதீனாவின் திருமணம் மற்றும் மகன் மரணம்!
1955ல் ஒரு நேர்காணலில் லீனாவின் மகன் ஜெரார்டோவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது அவர் தான் ஒரு நல்ல டாக்டராக விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தன் தாயுடனான இளம் வயது கர்ப்பம் குறித்துப் பேச மறுத்துவிட்டார். ஜெரார்டோ 1979 ஆம் ஆண்டில் எலும்பு நோயால் தன் 40வது வயதில் காலமானார்.
லீனா 1970 களின் முற்பகுதியில் ரவுல் ஜுராடோ என்ற நபரை மணந்த அவர் தனது 39 வது வயதில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக